Thursday, May 16, 2024
Home » குறைகடத்தி உற்பத்தியில் முக்கிய அடியை வைத்துள்ள இந்தியா

குறைகடத்தி உற்பத்தியில் முக்கிய அடியை வைத்துள்ள இந்தியா

by Rizwan Segu Mohideen
March 19, 2024 7:49 pm 0 comment

முழு இந்தியாவை இணைக்கும் வகையில் வீதிகளைஅமைப்பதற்கு இந்திய அரசு முன்னுரிமை அளித்தது போல்,குறைகடத்தி சிப்ஸ் (Semiconductor) தயாரிப்பில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் இலட்சியத் திட்டத்திலும் இறங்கியுள்ளது.

இந்த மூலோபாய மைல்கல்லை எட்டும் நோக்குடன் அண்மையில் மூன்று புதிய குறைக்கடத்தி உற்பத்தித் திட்டதங்களுக்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கைத்தொழிலை உருவாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. அடுத்த 100 நாட்களுக்குள் நிர்மாணப் பணிகள் தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது.இந்தத் திட்டத்திற்கு தனியார் துறையை ஊக்குவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவின் குறைகடத்தித் திட்டம் 2021 டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஊடாக குறைக்கடத்திகளை உற்பத்தி செய்வதற்கான உள்நாட்டு பசுமைச்சூழல் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் துறையில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்திற்கு 76,000 கோடி இந்திய ரூபா செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் சனந்த் பிரதேசத்தில் குறைக்கடத்தி வசதியை உருவாக்கும் அமெரிக்க நிறுவனமான மைக்ரானின் முன்மொழிவுக்கு (ஜூன் 2023) அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் ஒரு வலுவான குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சியைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த முயற்சி பல தனியார் நிறுவனங்களை குறைக்கடத்தி துறையில் முதலீடு செய்ய தூண்டியுள்ளது. உலகெங்கிலும் உள்ள முக்கிய குறைக்கடத்தி நிறுவனங்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

மைக்ரான் நிறுவனத்துடன் இணைந்து பல புதிய குறைகடத்தி உற்பத்தித் திட்டங்களுக்காக 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதிச் சலுகைகளை வழங்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.20 வருட காலத்தினுள் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மைக்ரான் நிறுவன நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே வேளை டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (TEPL) தாய்வானைச் சேர்ந்த PSMC நிறுவன்துடன் இணைந்து குஜராத்தில் உள்ள தோலேராவில் குறைக்கடத்தி தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

வேறு துறைகளுக்கு தேவையான சிப்களை உற்பத்தி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.TEPL நிறுவனம் எதிர்வரும் மூன்று மாதங்களில் நிர்மாணப் பணிகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசாமின் மோரிகானில் மற்றொரு குறைக்கடத்தி தொழிற்சாலையை உருவாக்க டாடாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டங்களின் ஊடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 27,000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை வாகனம், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான கூறுகளை உருவாக்கும். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த வசதியின் முதல் பகுதியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

நாளாந்தம் 15 மில்லியன் அலகுகளை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், முருகப்பா குழுமம், ரெனேசாஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் இணைந்து குஜராத்தில் குறைக்கடத்தி தயாரிப்பு மற்றும் சோதனை வசதியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டு சிப் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் 8 பில்லியன் டொலர் மதிப்பிலான நிர்மாணத் திட்டத்தை முன்னெடுக்க இருப்பதோடு அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான இறுதிக் கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இந்த பிரேரணையை அங்கீகரிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT