Thursday, May 16, 2024
Home » இலங்கையின் 10 பேருக்கு உம்ரா கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம்
சவூதி அரேபிய மன்னரின் விருந்தினராக

இலங்கையின் 10 பேருக்கு உம்ரா கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம்

by sachintha
March 19, 2024 8:05 am 0 comment

பல மொழிகள், பல நிறங்கள், பல துறைகள் சார்ந்த ஆளுமைகளுக்கு உம்ரா என்ற திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சவூதி மன்னரின் விருந்தினர்களாக சென்றவர்களில் இலங்கையைச் சேர்ந்த 10 பேர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் சவூதி அரேபியாவுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

சவூதி அரேபியா வசதியற்றவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவது போன்று துறைசார்ந்த ஆளுமைகளையும் கண்ணியப்படுத்துவதற்கு பல திட்டங்களை செய்து வருகிறது. அவைகளில் முக்கிய திட்டமான சவூதி அரேபியாவில் 1000 பேர்களுக்கு உம்ரா என்ற திட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்வு வரவேற்பு முதல் இறுதிவரை நன்கு திட்டமிடப்பட்டதாக இருந்தது.

மன்னரின் விருந்தினராக சென்றவர்களுக்கு தேவையான உச்சகட்ட வசதிகளையும் சவூதி அரேபியா வழங்கியது. அதற்கென்று தனியான அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. பல குழுக்களாக பிரிக்கப்பட்டு தங்குமிடம், போக்குவரத்து, உபசரிப்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என தமது பொறுப்புக்களை எவ்வித குறைகளும் இன்றி கலந்துகொண்ட அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடிய முறையில் சேவைகளை வழங்கினர். முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அரச மரியாதையுடனே அழைத்துச் செல்லப்பட்டோம். இலவசமாக சிம் அட்டை, இஹ்ராம் ஆடை, சொகுசான போக்குவரத்து ஆகியன வழங்கப்பட்டன. இலங்கையிலிருந்தும் 10 பேர்களுக்கு இம்முறை உம்ரா செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மன்னரின் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு இதனைப் பொறுப்பேற்று செய்தது. இதற்கான முன்னேற்பாடுகள் சவூதி அரேபியா தூதரகத்தினால் செய்யப்பட்டதுடன் இலங்கையில் இருந்து சென்ற 10 பேர்களையும் ஆரம்பம் முதல் இறுதி வரை இலங்கையின் சவூதி அரேபிய தூதுவர் மற்றும் அதிகாரிகள் பின் தொடர்ந்துகொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலக நாடுகளிலிருந்து பல துறைசார்ந்த ஆளுமைகள் செனறதின் ஊடாக பல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் இப்பயணம் வழங்கியிருந்தது. இந் நிகழ்ச்சி இரண்டாக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் பகுதி மதீனாவுடன் தொடர்பான விடயங்கள் என்றும் இரண்டாம் பகுதி மக்காவுடன் தொடர்பான விடயங்கள் என்றும் பிரித்து அட்டவணை வழங்கப்பட்டது. மதீனா, மக்கா இரு புனித நகரங்களிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் சகல வசதிகளுடன் வழங்கப்பட்டது. 1000 பேர்களையும் நான்கு கட்டங்களாக பிரித்து இறுதி பகுதியினர் 250 பேர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இறுதி விருந்தினர்களில் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்குபற்றினர். மக்கா மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதீனா மஸ்ஜிதுன் நபவி ஆகிய இரு புனிதஸ்தலங்களின் இமாம்களையும் சந்திக்கும் சந்தர்ப்பம் மன்னரின் விருந்தினராக சென்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மூன்று உலமாக்கள் இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என 10 பேர்கள் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இத்திட்டத்தின் ஏற்பாடுகளை சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சு நன்கு திட்டமிட்டு செய்திருந்தது. இலங்கையிலிருந்து கலந்துகொண்ட யாத்திரிகர்களுக்கான முன்னேற்பாடுகளை இலங்கையின் சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அவர்களின் வழிகாட்டலில் சவுதி தூதரகம் செய்தது. கலந்து கொண்ட அனைவரும் சவூதி அரேபியாவின் இத்திட்டத்தை பாராட்டியதுடன் பல இலட்சக்கணக்கான மக்களை நிர்வகிப்பது, சவூதி அரேபிய இராணுவத்தினர் புனித பூமியை தரிசிப்பவர்களுடன் நடந்து கொள்ளும் மனிதாபிமான செயற்பாடுகள் மற்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் விஸ்தரிப்புக்கள் கட்டுமான பணிகள் போன்றவற்றை ஆச்சரியத்துடன் நோக்கினர். கலந்து கொண்ட அனைவரும் சவூதி மன்னர் மற்றும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.


மௌலவி பௌசுல் அலவி

தாருள் ஈமான் நிறுவனம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT