Monday, May 20, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
March 18, 2024 9:48 am 0 comment

உடனே, அவயவத்திலே யாதொரு சேட்டையுமின்றி, வாதனையினாலே திருக்கரங்கள் சிரத்தின் மேலேறிக் குவிய, உரோமாஞ்சங்கொள்ள, நாத்தழும்ப, விழிநீர்த்தாரை கொள்ள, சிவானந்தசாகரத்தில் அமிழ்ந்தி நின்று, “கற்றாங்கெரி” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பின்பு திருமாளிகையை வலஞ்செய்து புறப்பட்டு, திருமுன்றிலிலே நமஸ்கரித்து எழுந்து, கோபுரவாயிலைக் கடந்து பணிந்து, நான்கு திருவீதிகளையுந் தொழுது, அங்கே எழுந்தருளியிருத்தற்கு அஞ்சி, திருவேட்களத்தை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடிக்கொண்டு அவ்விடத்தில் எழுந்தருளியிருந்தார். அங்கெழுந்தருளியிருந்து கொண்டே, சிதம்பரத்துக்கும் வந்து சபாநாயகரைத் தரிசிப்பார். அப்படியிருக்கு நாளிலே, திருக்கழிப்பாலைக்குப் போய், சுவாமி தரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடினார். அவர் பாடுந் திருப்பதிக விசைகளை யாழ்ப்பாணரும் யாழிலிட்டு வாசிப்பாராயினார். ஒருநாள் பிள்ளையார் திருவேட்களத்தைக் கடந்து சிதம்பரத்தை அடைந்த பொழுது, சபாநாயகருடைய திருவருளினாலே தில்லை வாழந்தணர் மூவாயிரரும் சிவகணநாதராய்த் தோன்றக் கண்டு, அத்தன்மையைத் திருநீலகண்டப் பெரும்பாணருக்குங் காட்டினார். தில்லைவாழந்தணர்கள் பிள்ளையாரைக் கண்டவுடனே வணங்க; பிள்ளையார் அவர்கள் வணங்குமுன் தாமும் வணங்கி, திருக்கோயிலிற் பிரவேசித்து, சபாநாயகரை வணங்கி “ஆடினாய் நறுநெய்யோடு பாறயிர்” என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அந்தத் திருப்பதிகத்திலே “நீலத்தார் கரியமிடற்றார்” என்னுந் திருப்பாட்டிலே தில்லைவாழந்தணரைத் தாங்கண்டபடி கூறி, அவர்கள் “தொழு தேத்து சிற்றம்பலம்” என்று அருளிச் செய்தார்.

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT