Monday, May 20, 2024
Home » தண்ணீர், மின்சாரப் பாவனையில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம்!

தண்ணீர், மின்சாரப் பாவனையில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்போம்!

by Gayan Abeykoon
March 7, 2024 1:00 am 0 comment

நாட்டில் தற்போது மிக மோசமான வெப்பகாலம் ஆரம்பமாகியுள்ளது. ஒரிரு மாத காலத்துக்கு முன்னர் தொடர்ச்சியான மழையினால் எமது மக்கள் அவதியுற்றனர். நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. கிழக்கில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சநஞ்சமல்ல. அறுவடை செய்ய வேண்டிய வயற்காணிகளில் கால்வாசி அறுவடையைக் கூட பலரால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பலர் தங்களது நெற்செய்கையை முற்றாகவே கைவிட நேர்ந்தது. பெருமளவு பணத்தை நெற்செய்கைக்காக முதலீடு செய்திருந்த அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அதிகம்.

சுமார் நான்குமாத கால தொடர்ச்சியான மழை முற்றாக ஓய்ந்ததும் கடுமைான வரட்சி தலைதூக்கியது. தற்போது நாட்டில் கடுமையான உஷ்ணமும், வரட்சியும் நிலவுகின்றன. நீர்ப்பாசனக் குளங்கள் வற்றி வருகின்றன. மக்களுக்கான குடிநீரை சிக்கனமாக விநியோகிக்க வேண்டிய நிலைமை ஏற்படப் போகின்றது. நீர்மின்சார உற்பத்தி குறைந்து கொண்டு செல்வதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. எரிபொருள் மூலமான மின்சார உற்பத்தி மற்றும் நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்தையே இனிமேல் அதிகளவில் நம்பியிருக்க வேண்டி ஏற்படலாம்.

கடந்த பெப்ரவரி இறுதிப்பகுதியில் உஷ்ணம் நிறைந்த காலநிலை ஆரம்பமாகி விட்டது. எதிர்வரும் மேமாதம் வரை இவ்வாறான வெப்பமான காலநிலை தொடரக் கூடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே எதிர்வரும் மேமாதம் வரையான காலப்பகுதியானது மக்களுக்கு பெரும் சிரமம் நிறைந்ததாகவே இருக்கப் போகின்றது.

இன்றைய கோடை காலத்தில் மக்களுக்கான இரு தேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முதலாவது நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தினாலேயே கோடை காலம் முடிவடையும் வரை நீர்த்தட்டுப்பாடு இன்றி எங்களால் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். நீருக்குப் பற்றாக்குறை வருமானால் கடுமையாகப் பாதிக்கப்படப் போவது நகரங்களில் வாழ்கின்ற மக்களாவர். ஆகவே நாம் ஒவ்வொருவரும் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம்.

இரண்டாவது மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். மின்சாரம் இன்றேல் உலகின் இயக்கமே நின்றுவிடும் என்றபடி இன்று எமது நிலைமை ஆகியுள்ளது. உலக மக்களின் அத்தனை இயக்கமும் மின்சாரத்திலேயே தங்கியிருக்கின்றது என்பதுதான் உண்மை.

வரட்சிக் காலம் தலைதூக்குகின்ற போது நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படுவது வழமையாகும். மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்ற நீர்த்தேக்கங்கள் வற்றுவதால் நீர்மின்சார உற்பத்தியானது சிரமமான காரியமாகிப் போகின்றது. இந்நிலையில் எரிபொருள் மூலமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கின்றது. மின்சார உற்பத்திக்காக அதிகளவு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அதற்காக அதிகளவு பணம் செலவாகின்றது.

மின்சார உற்பத்திக்காக அதிகளவு பணத்தைச் செலவிட்டாலும் கூட, அதற்கேற்ப மின்சாரக் கட்டணத்தை நினைத்தபடி அதிகரிப்பதென்பது முடியாத காரியமாகும். இவ்வாறான நிலையில், இலங்கை மின்சார சபையானது நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கின்ற வேளையில் மக்களிடமிருந்து அதிருப்தி வெளியிடப்படுவது தவிர்க்க முடியாததாகும். இவ்விடயத்தில் அரசாங்கம் தர்மசங்கடமான நிலைமையையே எதிர்கொள்கின்றது.

இலங்கையில் நுரைச்சோலையில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் அடிக்கடி செயலிழந்து விடுவதால், அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. நிலக்கரி மூலமான மின்னுற்பத்திக்காகவும் அதிக பணத்தை எமது நாடு செலவிடுகின்றது.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதில் எமது மக்கள் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்துவார்களானால் தற்போதைய வரட்சிக் காலத்தை எம்மால் சிக்கலின்றி கடந்துவிட முடியும். ஆனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது இயலாத காரியமாகவே உள்ளது. மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பல்வேறு தரப்பினராலும் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கோரிக்ைக விடுக்கப்படுகின்ற போதிலும், அவ்வேண்டுகோள் குறித்து அக்கறை கொள்வோர் குறைவாகவே உள்ளனர்.

வளிச்சீராக்கியை(எயார்கண்டிஷன்) நிறுத்திவிட்டு மின்விசிறிகளைப் பயன்படுத்துமாறு விடுக்கப்படும் ஆலோசனைகளுக்கு செவிசாய்ப்போரும் குறைவு. அதேசமயம் உஷ்ணக்காலம் என்பதால் மின்விசிறி மற்றும் வளிச்சீராக்கிகளின் பாவனையும் மிக அதிகமாகவே காணப்படுவதுண்டு. ஆகவேதான் வரட்சிக்காலங்களில் மின்சாரப் பாவனையானது வழமையை விட அதிகரித்துக் காணப்படுகின்றது.

தற்போது நிலவுகின்ற உஷ்ணம் மிகவும் அதிகமாகும். மின்சாரமும் தண்ணீரும் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானவை என்பதால் நாம் ஒவ்வொருவரும் இக்காலத்தில் அவதானம் பேண வேண்டியது முக்கியம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT