Monday, May 20, 2024
Home » மார்ச் 08: 300 வருடங்களுக்குப் பிறகு இம்முறை அபூர்வ மகாசிவராத்திரி

மார்ச் 08: 300 வருடங்களுக்குப் பிறகு இம்முறை அபூர்வ மகாசிவராத்திரி

by Rizwan Segu Mohideen
March 4, 2024 8:56 am 0 comment

2024 மகாசிவராத்திரியன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவயோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகாசிவராத்திரி என்ற ஐந்து சிறப்புயோக வேளையும் கூடி வருகின்றன.

விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விபரிக்கின்றன. மகாசிவராத்திரியன்று ஈசனைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர், சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

இந்த ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி வரவுள்ளது. அன்றிரவு 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் நடைபெறவுள்ளன. கூடவே ஐந்து யோகங்கள் ஒன்றுகூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளது. இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் ஆகும்.

ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று சர்வார்த்த ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகாசிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. இந்த மகாசிவராத்திரியில் விரதமிருந்து கண்விழித்து சிவதியானம் செய்தால் எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வச்செழிப்பு உண்டாகும். மகாசிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வவளம் சேரும்.

சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் யோகம். இந்த யோகநாளில் ஈசனை வழிபட காரியத் தடைகள் அகன்று எண்ணியவை எளிதாக நிறைவேறும். சிவயோகம் என்றால் தியானிக்கும் வேளை. இந்நாளில் செய்யப்படும் யோகா, தியானம், பிராணாயாமம், மந்திர ஜபம் ஆகியவைகளால் பன்மடங்கு பலன் கிடைக்கும். 2024 மகாசிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவயோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது.

ஷிரவண நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது. இந்த நட்சத்திரத்தில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது மங்களகரமாக முடியும். இந்த மகாசிவராத்திரி நாளில் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட வேண்டும்.

ஐந்து யோகங்களும் ஒன்றுகூடும் இந்த அபூர்வ மகாசிவராத்திரி நாளில் சிவவழிபாடு செய்யத் தவறக் கூடாது. சிவயோக வேளையில் நீங்கள் செய்யும் வழிபாடு ஈசனின் பரிபூரண அருளை பெற்றுத் தரும், உங்கள் வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் வாரிசுகள் நலமோடு வாழ்வார்கள். சித்த யோகம் கூடி வருவதால் விநாயகப் பெருமானையும் இந்நாளில் வணங்கிட வேண்டும். இதனால் தொடங்கப்படும் சுப காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

மகாசிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்கிறோம். இந்த நாளில் ஈசனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம், தீராத வியாதிகள், குறையாத கடன்கள், அனைத்தும் தீர்ந்து விடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

மகாசிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் போன்றவற்றை செய்த பின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் நடுப்பகலில் நீராடி, உச்சிகால வழிபாடுகளை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும். மாலை நேர வழிபாட்டை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கத்தை வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்து வழிபட வேண்டும்.

கோபி சிவம்
அம்பிகை அடியார்,
ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்,
2A ELOWOOD ROAD, CROYDON,
CR0 2SG, 08492454500

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT