– வலய – உலகளாவிய பிரச்சினைகளின் போது ஐ.நா.வுக்கு உதவத் தயார்
– தலைமைத்துவத்தை வழங்க பின்வாங்க வேண்டாம்
– கடினமான சந்தர்ப்பங்களில் சவாலை ஏற்று பொறுப்பை நிறைவேற்றுங்கள்
இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்றும், வலய – உலகளாவிய பிரச்சினைகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று (29) இடம்பெற்ற இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரவாணை அளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
வரலாற்று காலத்திலிருந்தே இலங்கை உலக அமைதி – பிராந்திய சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலக சமாதானத்துக்காக நேரடியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் முப்படையினரின் கடமை மற்றும் பொறுப்புணர்வுகள் எவ்வாறானவை என்பது குறித்தும் ஜனாதிபதி நினைவூட்டினார்.
இந்த விடுகை அணிவகுப்பு இலங்கை விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்திற்குச் சென்ற முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விமானப்படை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது இலக்கம் 36, 37, 38 பாடநெறியை நிறைவு செய்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16 பெண் கெடட் அதிகாரிகள், இலக்கம் 65 , 66 கெடட் பாடநெறியை நிறைவு செய்த 36 கெடட் அதிகாரிகள் மற்றும் இலக்கம் 17 , 18 கெடட் பாடநெறியை நிறைவு செய்திருக்கும் 5 பெண் அதிகாரிகளுக்கும், 2023 அமெரிக்க கெடட் அதிகாரியொருவரும் அதிகாரவாணையை பெற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து பயிற்சியில் சிறந்து விளங்கிய 05 கெடட் அதிகாரிகளுக்கும் பெண் கெடட் அதிகாரி ஒருவருக்கும் ஜனாதிபதியால் விருதுகள் வழங்கப்பட்டது.
அணிவகுப்புக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் விமானப்படை இசைக்குழுவின் வண்ணமயமான நிகழ்ச்சியும், விமானப்படை வீரர்களின் பரசூட் சாகசங்களும் நிகழ்த்தப்பட்டன.
அதனையடுத்து வண்ணமயமான கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
விடுகை அணிவகுப்பில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இன்று அதிகாரவாணை பெரும் 58 அதிகாரிகளுக்கும் முக்கிய தினமாகும். உங்களை வளர்த்த பெற்றோரை மறக்கக்கூடாது. உங்கள் வாழ்க்கையை வடிவமைக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகூற வேண்டும். விமானப்படை அதிகாரிகள் என்ற வகையில் முக்கியமான பணியை மேற்கொள்கிறீர்கள். மேலும், நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்கும் பொறுப்பும், உங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் பொறுப்பும் உங்களுக்கு கிடைக்கிறது.
நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதை ஒருபோதும் மறக்கக்கூடாது. அந்தக் கடமையை நீங்கள் நிறைவேற்றினால்தான் இலங்கையின் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். எனவே, இதனை ஒரு முதன்மைப் பணியாக கருதிச் செயற்படுங்கள்.
மேலும் உங்களுடன் பணிபுரிவோர் மற்றும் உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் இருக்கின்ற அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவர்களை வழிநடத்த வேண்டும். எப்போதும் முன்மாதிரியாக இருங்கள். உங்கள் கீழ் இருப்பவர்கள் உங்களிடம் பணிவுடன் நடக்க வேண்டுமெனில் உங்கள் சிரேஷ்டர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். அதனாலேயே உண்மையான ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.
ஒரு அதிகாரியாக நீங்கள் உங்கள் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். தலைமைத்துவத்தை வழங்க பின்நிற்க வேண்டாம். பிரச்சினைகள் வரும்போது விலகிச் செல்லாதீர்கள். குடியரசின் பொறுப்பு உங்களை சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை அச்சமின்றி நிறைவேற்றுவது உங்கள் கடமையாகும்.
உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களை சார்ந்திருக்கிறது. இன்று நமது நாட்டின் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு, அரசியல் முறைமை சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. கடந்த காலத்திற்கு மீண்டும் செல்ல முடியாது. எனவே நாம் இங்கிருந்து முன்னேற வேண்டும். அதற்கு, நாட்டில் மிகப்பெரிய அளவில் நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
துரிதமாக பொருளாதார மாற்றத்திற்கு செல்ல வேண்டும். வளர்ச்சியடையாத நாடாக நாம் தொடர்ந்தும் இருக்க முடியாது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும்போது அதன் பலன்கள் உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் கிடைக்கும்.
எனவே, நாட்டின் அனைத்து தருணங்களிலும் நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதன் மூலம் அரசியலமைப்பின் பிரகாரம் ஸ்திரத்தன்மையைப் தக்க வைத்துகொள்வதற்காக நீங்கள் உங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். மேலும் எமது நாட்டை எதிரிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமன்றி, இன்றைய சர்வதேச அரசியல் சூழலுக்கு ஏற்ப பிராந்திய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
பிராந்தியத்தின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அது எமது நாட்டுக்கும் ஆபத்தானதாகும். நாம் தனியொரு நாடாக மட்டும் வாழ முடியாது. ஒவ்வொரு நாட்டுடனும் கைகோர்த்து முன்னேற வேண்டும். இலங்கை போன்ற யுத்த அனுபவம் மிக்க நாடு ஒதுங்கி நிற்பதானது கடமைகளை துறந்துச் செயற்படுவதாகிவிடும். பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதேபோல் உலக அமைதியும் முக்கியமானது. எனவே, இவ்வாறான விடயங்களுக்கு எமது ஒத்துழைப்பு அவசியப்படும் போது ஒரு நாடு என்ற வகையில் முப்படையினரின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
எமது படையினர் மாலி இராச்சியத்தை பயங்கரவாதத்திலிருந்து மீட்க உதவியது. அது பாராட்டப்பட வேண்டியதாகும். இன்று செங்கடலில் நமது பொருளாதார உரிமைகள் பாதிக்கப்படுமானால் அவற்றைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே, பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு சவால்கள் விடுக்கப்படும் வேளைகளிலும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான ஆதரவை வழங்குவோம். எனவே, உலக அமைதியும் ஸ்திரத்தன்மையையும் போன்றே நமது நாட்டின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்க வேண்டும்.
முப்படையகளும் அடுத்த தசாப்தத்தில் பெருமளவான மாற்றங்களை சந்திக்கும். இன்றைய உலகம் தொழில்நுட்ப யுகத்தில் உள்ளது. இராணுவங்கள் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியே செயல்படுகின்றன. நாமும் படிப்படியாக அந்த நிலையை எட்ட வேண்டும். உங்களுக்கு அதற்கான பொறுப்பு உள்ளது. இந்த அனைத்து விடயங்களுடனும் நீங்கள் வலுவான இராணுவமாக உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஏனைய அதிகாரிகள், விமானப்படையினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.