Monday, May 20, 2024
Home » பன்முக ஆளுமை நிறைந்த ஏ.எம். நஹியா -ஒரு பார்வை

பன்முக ஆளுமை நிறைந்த ஏ.எம். நஹியா -ஒரு பார்வை

சஹீம் எம். ரிஸ்மியின் பார்வையும் பதிவும்

by Gayan Abeykoon
March 1, 2024 10:02 am 0 comment

ஹியாவுடனான சந்திப்பானது இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவுக்கான வழிகாட்டுதல்களையும் மதிப்பீடுகளையும் பதிவு செய்கிறது. அது இதுவரையில் பழகிவரும் மனோநிலையிலுள்ள அனைவரையும் பரபஸ்பரம் நட்புறவுடன் பழக வேண்டிய பண்பாடுகள் அதன் முன் முக்கிய கருவாக இருக்கிறது.

சிறுபான்மையின சமூகங்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டி நல்ல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. பல நூறு வருடங்கள் கவனிக்கப்படாமல் இருந்த விடயங்கள் பேசப்பட்டன. இவை நீண்ட கால வரலாற்றுக்குரியவை.

ஏ.எம். நஹியா ஓர் ஆய்வுத்திறன்மிக்க ஒருவர். கல்விப் புலமை சார்ந்தவர். நிர்வாகத் திறன்மிக்கவர். அவரது நிர்வாகத் திறன் எப்பொழுதும் வரலாற்றில் பேசப்படக் கூடியவை. பல்லின மக்கள் மத்தியில் மிகுந்த நேசத்துக்குரியவர். சிறந்து வரலாற்றுத் துறை ஆய்வாளர். 2019 செப்டம்பர் 16 ஆம் திகதியில் நிகழ்ந்த இலங்கை அரசின் தேசிய சாஹித்திய விருது வழங்கும் விழாவில் அவர் 2018 ஆம் ஆண்டில் எழுதிய ‘இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும்’ எனும் நூலுக்கு சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் என்ற பகுதியில் தேசிய சாஹித்திய விருதைப் பெற்று புகழ்பெற்றவர்.

ஆ. சதாசிவம், க. கைலாசபதி, பொன். பூபாலசிங்கம், கா. குலரத்தினம், ப. சந்திரசேகரம் போன்ற பேராசிரியர் பலரின் நண்பரும் மற்றும் எஸ். எம். கமால்தீன், எம். எம். எம். மஹ்ரூப், ஏ. எம்.சமீம், கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி , பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, டொக்டர் உபனந்த விதான பத்திரன, ஓய்வு நிலைப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லியனகமே மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ போன்ற கல்விமான்களின் அன்புக்குரிய நெருக்கமான நண்பராக ஏ.எம். நஹியா காணப்படுகிறார்.

கொழும்பு சாஹிராக் கல்லூரி உப அதிபராகவும் பதில் அதிபராகவும் இருந்து பெரும் பங்களிப்புச் செய்தவர் அவர். கல்வித் துறை என்று வரும் போது நஹியா, டி. பி. ஜாயா, ஷாபி மரைக்கார் ஆகியோர் அமர்ந்த கதிரையில் அமர்ந்திருந்து கல்விப் பணியாற்றினார்.

2018 இல் அரசியலமைப்பு உயர் சபையின் அங்கத்தவராக அவரது பெயரை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை பரிந்துரை செய்தது. அப்பொழுது அதன் தலைவராக என். எம். நபீலும் செயலாளராக நானும் இருந்தேன். அந்த உறவுக்குப் பின்னர் அடிக்கடி அவருடன் தொடர்பு கொண்டு உறவை வலுப்படுத்திக் கொண்டேன். அதேவேளையில், சட்டத்தரணி ஜாவிட் யூசுபை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி பரிந்துரை செய்திருந்தது. இதற்குப் பல பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். ஆனால் நஹியாவின் கடிதம் அங்கு தாமதமாகித்தான் சென்றது. இக்கடிதம் தொடர்பில் முன்னாள் சாபாநாகர் கரு ஜயசூரிய, நஹியாவுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய கடிதம் கிடைத்தது. ஆனால் அது தாமதமாகித்தான் கிடைத்தது. முன் கூட்டியே அதற்கான நியமனங்கள் தயார்படுத்தி விட்டோம். எனினும் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றுள்ளார். எனினும் இது தொடர்பில் நான் தொடர்பு கொள்கின்றேன் என்று சபாநாயகர் கருஜயசூரிய நஹியாவிடம் தெரிவித்தார். அதன் பின்பு சபாநாயகர் கரு ஜயசூரிய நஹியாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யவுள்ளோம் அதற்கு சம்மதமா என்று வினவினார். அதற்கு அவர் நியமனம் செய்தார். 11.3.2019, 11.12.2020 வரையிலும் பணிபுரிந்தார். 1997.10.1, 1.1.2002 கலை கழகத்தின் நாடகக் குழுவின் உறுப்பினர்.

12.05.2011, 14.10.2015 பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவராக இவர் சேவையாற்றினார். 12.9.2022 இற்றை வரையிலும் தகவல் அறியும் உரிமைகள் சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர். தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்ப் பாட மறுசீரமைப்புக் குழுவில் பங்காற்றியவர். முன்னாள் அமைச்சர் பி. பி. தேவராஜின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் சீர்த்திருத்தத்தின் ஆணிவேராக அமைந்து செயற்பட்டவர் ஏ. எம். நஹியா என்பதை யாவரும் நன்கு அறிவர்.

எனினும், இந்த நியமனம் அவர் விண்ணப்பம் கோரவில்லை. தானாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனமுவந்து வழங்கியதாகும். அந்தப் பதவியில் ஏற்கனவே மறைந்த அமைச்சர் எம். எச். எம். அஷ்ரஃபின் மைத்துனர் நீதிபதி சலாம் இருந்தார். அதன் பிறகு செல்வி திருச்சந்திரன் இருந்தார். அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவருடைய நியமனம் குறித்து பாராட்டுத் தெரிவித்திருந்தார். அதற்கு நஹியா பொருத்தமானவர் என்று. அவருக்கான நியமனத்தை ஜனாதிபதி வழங்கினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம். எச். எம். அஷ்ரஃபுடைய மிக நெருக்கமான நண்பர். தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்கள் அவரைச் சந்திக்க வருகின்றார்கள் என்று கூறி நஹியாவை அரசியலுக்குள் இணைத்துக் கொள்வதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் அன்று இன்று வரையிலும் அரசியலுக்குள் நுழையவில்லை. முன்னாள் இராஜாங்க அமைச்சர் முஸ்பா கூட மிக நெருக்கமான உறவினர்.

கல்வித்துறை என்று வரும்போது நஹியா, டி. பி. ஜாயா, கலாநிதி ஏ.எம். ஏ. அஸீஸ், ஷாபி மரைக்கார் ஆகியோர் அமர்ந்த கதிரையில் பாடசாலை மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவரைத் தூக்கிச் சென்று பெரு மதிப்புக்குரிய அதிபரின் கதிரையில் பலவந்தமாக அமர்ந்தினார்கள். ஆனால் தற்காலிக அதிபராக கல்விப் பணியாற்றினார். அவர் தற்காலிக அதிபராக இருப்பதனால் அந்த கதிரையில் அமர்ந்து பணிபுரிய விரும்பவில்லை. ஆதலால் அக்கதிரைக்கு அருகிலுள்ள கதிரையில் அமர்ந்து அவர் புரிந்த பணிகளின் மகிமையை கல்வியுலகம் நன்கறியும்.

11.02.2019 இல் அவர், இலங்கை கல்வி சகாய நிதியின் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர். கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி உள்ளிட்டவர்கள் இதில் அங்கம் வகித்தனர். 1991 அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் நஹியாவும் ஜாவிட் யூசுப் ஆகிய இருவரும் உதவிச் செயலாளராக அங்கம் வகித்தனர் .டொக்டர் அஸீஸ் பவுண்டேசன் முதல் நீதிபதி உஸைன், செயலாளர் எஸ். எம். கமால்தீன் இடம்பெறுகின்றனர். அதன் பிறகு பேராசிரியர் எம். டி. ஏ. புர்கான் தலைவராகவும் செயலாளராகவும் நீண்ட காலம் கடமையாற்றினர். அதன் நிர்வாக சபை அங்கத்தவராக இப்போதும் சேவையாற்றி வருகின்றார். குறிப்பாக நானும் இணைந்துள்ளேன். இதில் என்னையும் இணைத்துக் கொள்வதற்கு கலாநிதி ஏ. எம். ஏ. அஸீஸின் மகன் அலி அஸீஸும் நஹியாயும் விரும்பி பரிந்துரை செய்தார்கள் என்பது மிக முக்கியமான விடயமாகும்.

பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். 2003.7.1ஆம் திகதி முதல் 17 திகதி வரையிலும் இஸ்ரேல் ஜெரூசலத்தில் அஹரன் ஒப்ரீத் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டவர். 18.10.2001 கொழும்பு சிலோன் இன்டர் கொண்டினல் ஹோட்டலில் நடைபெற்ற மனித வளர் அபிவிருத்தி தொடர்பிலான சர்வதேச சாக் மாநாட்டிலும் இலங்கையின் முக்கிய பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 2001.4.10, 12 புதுடில்லியில் நடைபெற்ற உற்பத்தி திறன் தொடர்பில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிலும் 2002.10.22, 23, 24 ஆகிய திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிலும் 1995.12.31 , 1996.01.05 ஆம் திகதிகளில் இந்தியா திருச்சியில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார். அவர் மொத்தமாக ஏழு சர்வதேச மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி கூட ஏ. எம். நஹியாவின் பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும் என்று பல தடவைகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். அதற்கான பொருளடக்கம் ஒழுங்கு முறைகள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று இருவரும் திட்டம் வகுத்துக் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். நூலின் பொருளடக்கம் பற்றி ஏ. எம். நஹியா எழுதி அனுப்பியதைப்பார்த்த கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி, ‘மிக அருமையான முறையில் எழுதி அனுப்பி இருக்கின்றீர்கள்’ என்று வியந்து பாராட்டினார். அவர்கள் இருவரும் ஒரு நாளை தீர்மானித்து விட்டு சர்வதேச ஊடகவியலாளர் லத்திப் பாரூக் இல்லத்தில் ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார்கள். குறித்த நாளில் சந்திப்பதற்கு ஏ. எம் நஹியாவுக்கு முடியவில்லை. அதில் இருந்து நான்கு நாளைக்கு பிறகு சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்தினத்தில் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்கள் சுகயீனம் காரணமாக டெல்மன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரை நிரந்தரமாகச் சந்திக்க முடியவில்லை.

பேராசிரியர் புர்க்கான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு எம். ஏ. நஹியாவினால் எழுதப்பட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தவர். அவர் அதற்கான மனம் திறந்து எம். ஏ. நஹியாவிடம் வினவியுள்ளார். அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 75 விகிதம் நிறைவு பெறும் தருணத்தில் அவர் மரணம் எய்து விட்டார். அதே போன்றுதான் முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர், ஏ. எம். நஹியாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். இப்பொழுது சுதந்திரமாகத்தானே இருக்கின்றீர்கள் என்று கூறி பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். அவர் ஒரு பண்பாடான மனிதர். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று ஏ. எம். நஹியாவுக்கு ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் பற்றிய புத்தகம் சமீபத்தில் பிறர் எழுதி வெளியிட்டுள்ளார்கள். இப்படி பல ஆளுமைகளின் வாழ்க்கை ஏ. எம். நஹியாவினால் எழுதப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள் என்பது உண்மையே. அதற்குச் சாட்சியாக இன்றும் லத்தீப் பாரூக் உயிருடன் இருக்கின்றார்.

1991இல் இவர் அஸீஸும் தமிழும் என்ற முதல் நூலை வெளிக்கொணர்ந்தார். கொழும்பு தமிழ் சங்கம் இந்நூலுக்கு சிறந்த ஆய்வு நூலுக்கான விருது வழங்கியது. இந்த நூல் இரண்டாவது பதிப்பாக 2018இல் வெளிவந்தது. 1994 இல் முஸ்லிம் நேசன் சுவாமி விபுலானந்தர், 2012 இல் யான் அறிந்த பேராசான் கார்த்திக்கேசு சிவத்தம்பி, 2018 இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் 2019 இந்நூலுக்கு இலங்கை அரச சாஹித்திய விழாவில் சிங்கள, தமிழ், ஆங்கில ஆகிய மும்மொழிவுக்கான சிறந்த ஆய்வு நூலுக்கான விருதும் 1,50,000 ரூபா பெறுமதியான பணத்தொகையும் வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. 13 நூல்களின் வெளியீடுகளுக்குப் ஆசிரியராக இருந்துள்ளார். 1977 கொழும்பு சாஹிராக் கல்லூரியின் 85 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட வளர்பிறை சிறப்பு மலரின் ஆசிரியர்.  பல நூற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் 50 மேற்பட்ட சிறப்பு உரைகளை நிகழ்த்தியுள்ளார்.

2018 அஸீஸ் பவுண்டேசனால் வெளியிடப்பட்ட அஸீஸின் சொற்பொழிவுகள் நூலின் இணையாசிரியர். 1999 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் 50 ஆவது ஆண்டு தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வடகிழக்கு மாகாண சபையினால் வெளியிடப்பட்ட விசேட சிறப்பு மலரின் ஆசிரியர். 1991, 1992,1993 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தமிழ் சாஹித்திய விழாக்களுடைய சிறப்பு மலர்களின் ஆசிரியர், 1994 தமிழ் கலை விழா மலரின் ஆசிரியர். 1994 நாடக விழா மலரின் ஆசிரியர், 1996 இல் யுத்தத்தால் இடம்பெயர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட 29 பாடசாலைகளுக்கான கட்டிடங்களின் திறப்பு விழா சிறப்பு மலரின் ஆசிரியர், இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான கல்விச் சுபீட்ச சகாய நிதி அங்குரார்ப்பண நிகழ்வின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் ஆசிரியர், 1998, 1999 களில் நடைபெற்ற தமிழ் நாடக விழாக்களில் வெளியிடப்பட்ட மலர்களின் ஆசிரியர். 1991 இல் ஸ்ரீலங்கன் கல்ச்சர்ஸ் ஆசிரியர்.

1994 இல் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தமிழ் மாமணி பட்டம் வழங்கி கௌரவித்தனர். இதில் பேராசிரியர் சுனில் ஆரியரட்ண, பேராசிரியர் பேட்ராம் பஸ்தியாம்பிள்ளை,   ஊவா மாகாண சபை சாஹித்திய விழாவில் இரு தடவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 2002 இல் நடைபெற்ற 7 வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 2005 இல் அக்கரைப்பற்று (கருங்குடியூர்) நடைபெற்ற பெரு விழாவில் தங்கம் மோதிரம் அணிவிக்கப்பட்டு சமூக ஜோதி எனும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். 2018 இல் கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 2019 இல் இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் என்ற நூலான தேசிய சாஹித்திய விருது. 2020 இல் கம்பன் கழகம் நடத்தும் விருது வழங்கும் பெருவிழாவில் மாவித்துவான் சி கணேஸ்ஐயர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இதன் போது மறைந்த தென்னிந்தியப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பாரளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரன், உச்ச நீதி மன்ற நீதிபதி துரைராசா, ஆ. முத்துலிங்கம், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்டவர்களுடன் ஏ. எம். நஹியா அவர்களும் சிறப்புமிகு விருதைப் பெற்றுக் கொண்டவர்.

அவருடைய ஆளுமை விருத்தியில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் புரூடி விடுதிக் காலம் பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இலங்கை பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் முதன் முதலில் ஒருவர் தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்த பெருமை ஏ. எம். நஹியா அவர்களையே சாரும். தனக்குப் பின்னர் வித்தியலங்கார பல்லைக்கழகத்தில் அ. ஸ. அப்துஸ் ஸமது தலைவராக வந்தார். குறிப்பாக நஹியாவின் ஏ. எம். ஆளுமை விருத்தியில் கூடுதலான பங்களிப்பை கொழும்பு பல்கலைக்கழகமும் மற்றும் புரூடி விடுதிக் காலமும்தான் பெரும் வகிபாகத்தைக் கொண்டுள்ளன. இன்று கூட அவர் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் தமிழ் சங்கம் ஆகும். அந்த வகையில் அவருடைய வளர்ச்சியில் பல்கலைக்கழகம் பெரும் பங்காற்றியுள்ளமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போன்று பிரதேச அபிவிருத்தி இந்து சமய சமய கலாசார மற்றும் தமிழ் விவகார அமைச்சின் தமிழ் விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிப் பணிப்பாளராக1990 களில் இருந்து கடமையாற்றினார். அந்த இடத்தில் முஸ்லிம் ஒருவர் இருந்து சேவையாற்றியமையானது வியந்து பாராட்டக் கூடிய ஒரு முக்கியமான அம்சமாகும்.

அப்பொழுது இந்து சமய கலாசார அமைச்சராக செல்லையா இராசதுரை மற்றும் அமைச்சர் பி. பி. தேவராஜ் ஆகிய இருவருடைய பதவிக் காலங்களிலேயே அவர் கடமை புரிந்தார். அக்கால கட்டத்தில் தமிழ் சாஹித்திய விழாக்களை தனியாக முன்நின்று நடத்தினார். அவர் அந்த இடத்தில்தமிழ் ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைத்துக் கொண்டார். கண்டி, வவுனியா, கொழும்பு, கல்முனை போன்ற பல இடங்களில் தமிழ் சாஹித்திய விழாக்களை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்திய அனுபவம் ஆற்றலும் அதிகம் வாய்க்கப் பெற்றவர். கண்டி சாஹித்திய விழா கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் இடம்பெற்றது. யானைகள் தமிழ் ஏடுகளைச் சுமந்து ஊர்வலம் சென்றன. கல்முனையின் சாஹித்திய விழா கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது.

2014 யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியல் துறையில் முதுகலை தத்துவமாணிப் பட்டத்தை மேற்கொள்வதற்காக இலங்கை முஸ்லிம்களுடைய கல்வி மேம்பாட்டில் சுவாமி விபுலானந்தர் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முது கலை தத்துவமாணிப் பட்டத்தைப் பெற்றவர். 1982 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு கல்வியியல் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்வதற்காக எம் சி. சித்திலெப்பையினுடைய கல்விச் சிந்தனையும் பங்களிப்பும் என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு சமர்ப்பித்துள்ளார். பொது நிர்வாகத் துறையிலும் கற்கை நெறியைப் பயின்று தகுதி பெற்றவர். கலாநிதி பட்டப் படிப்பை மேற்கொள்ள பல்கலைக்கழகம் பதிவு செய்த போதிலும் அவருக்கு கொரோனா மற்றும் காலங்கள் இடம்கொடுக்கவில்லை.

இவ்வாறு அரச நிர்வாகத் துறை சார்ந்த விடயங்களிலும் இலக்கியச் செயற்பாடுகளிலும் மேலெழுந்து பரப்பரப்பாக பேசப்படும் ஏ. எம். நஹியாவின் ஆளுமையின் அடையாளம் இலக்கிய உலகத்திலும் அரச நிர்வாகத் துறையிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைத்து விட முடியாததொன்றாக இருக்கிறது.

இக்பால் அலி…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT