காசாவில் இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்பை வெளியிட்டு அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அந்நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தீக்குளித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று தீ வைத்துக்கொண்ட அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுவ சீருடையுடன் இருந்த அந்த நபர் ட்விட்ச் சமூகதளத்தில் நேரலையில் தோன்றி “இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கக் கூடாது” என்று கூறியபின் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்போது அவர் தீயுடன் தரையில் விழும் வரை “பலஸ்தீன சுதந்திரம்” என்று கூச்சலிட்டுள்ளார்.
அந்த வீடியோ சமூகதளத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில் உள்ளூர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த டிசம்பரிலும் அட்லாண்டாவில் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரகத்திற்கு வெளியில் பலஸ்தீன கொடியுடனான ஆர்ப்பாட்டக்காரர் ஒரு தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.