Thursday, May 2, 2024
Home » போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் ரபா படையெடுப்பில் நெதன்யாகு திட்டவட்டம்

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் ரபா படையெடுப்பில் நெதன்யாகு திட்டவட்டம்

by sachintha
February 27, 2024 9:18 am 0 comment

காசா பொதுமக்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் திட்டம் வகுப்பு

காசாவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் திட்டம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் முன்மொழிந்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் ​ெபஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். தெற்கு நகரான ரபா மீது படை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரபா மீதான படையெடுப்பு பெரும் உயிர்ச்சேதங்களுக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் மற்றும் உதவி அமைப்புகள் கவலை வெளியிட்டு வரும் நிலையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

காசாவில் மற்ற பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பெரும்பான்மையினர் உட்பட ரபாவில் 1.5 மில்லியன் பேர் வரை இருப்பதோடு காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் இன்னும் நுழையாத ஒரே பிரதான நகராகவும் அது உள்ளது.

எகிப்தில் இருந்து காசாவுக்கு உதவிகள் செல்வதற்கான வாயிலாகவும் ரபா காணப்படுகிறது.

இந்நிலையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவது மற்றும் எதிர்வரும் போர் நடவடிக்கை தொடர்பான திட்டம் ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் போர் அமைச்சரவைக்கு முன்வைத்திருப்பதாக நெதன்யாகு அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் எவ்வாறு, எப்படி வெளியேற்றப்படுவார்கள் என்பது பற்றிய விபரம் குறிப்பிடப்படவில்லை.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் டோஹாவில் சந்தித்ததாக எகிப்து அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்ட நிலையிலேயே நெதன்யாகு அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையாளர்கள் எதிர்வரும் ரமழான் மாதத்திற்கு முன் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மத்தியஸ்த முயற்சியில், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்காகக் கொண்ட “புரிந்துணர்வு ஒன்று” சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா கூறியுள்ள அதேநேரம், இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவதை ஹமாஸ் வலியுறுத்துவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் படைகளை வாஸ் பெறும் நிபந்தனையை “மாயை” என்று நிராகரிக்கும் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிரான முழு வெற்றிக்கு ரபா மீதான படையெடுப்பு சில வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நாம் (போர் நிறுத்த) உடன்படிக்கை ஒன்றை பெற்றாலும், அது சில காலம் தாமதத்திற்கு உள்ளாகும், ஆனால் அது நிகழும்” என்று ரபா படையெடுப்பு குறித்து சி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு குறிப்பிட்டார்.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருக்கும் சூழலில், அங்கு பஞ்சத்தை தடுப்பதற்கு அவசர அரசியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலஸ்தீனர்களுக்கான பிரதான ஐ.நா. நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

வடக்கு காசாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு, தடுக்க முடியுமான “மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தம்” என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே அசரினி தெரிவித்துள்ளார்.

“அர்த்தமுள்ள உதவிகளுக்கான அணுகல் மற்றும் பாதுகாப்பை வழங்கும் உண்மையான அரசியல் மூலம் பஞ்சத்தை இன்னும் தவிர்க்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

உதவி விநியோகங்களை வழங்குவதில் குறிப்பாக வடக்கு காசாவில் தாம் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாக ஐ.நா. கூறியது.

“உதவி இல்லை’

போர் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களை எட்டும் நிலையில் வடக்கு காசாவில் உள்ள குடும்பங்கள் தெருவில் கிடைப்பதை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. “எமக்கும், எமது குடும்பத்தினருக்கு உண்பதற்கு மற்றும் குடிப்பதற்கு எதுவும் இல்லை” என்று உதவி லொறிகள் காசா நகரை அடையும் வரை அங்கு காத்திருக்கும் ஒமர் அல் கலூத் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

“நாம் வடக்கில் சிக்கியுள்ளோம் என்பதோடு எம்மை எந்த உதவியும் அடையவில்லை, நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்களால் இயன்ற வழிகளில் தெற்கு நோக்கிச் சென்றனர், குண்டுவீசித் தாக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுக்கு இடையே குப்பைகள் நிறைந்த வீதிகளில் நடந்து சென்றே அவர்கள் தெற்கை அடைகின்றனர்.

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதோடு கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் 92 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

ரபாவின் வடக்கில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் வீசிய குண்டில் பெண் மற்றும் சிறுவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம் காசா நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அல் செய்தூன் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இருக்கும் ஐரோப்பிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 29,782 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 70,043 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வன்முறை அதிகரித்து காசாவில் போர் தீவிரம் இடைந்துள்ள சூழலில் ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரை அரசாங்கம் பதவி விலகுவதாக அதன் பிரதமர் முஹமது ஷட்டையா தெரிவித்துள்ளார்.

“மேற்குக் கரை மற்றும் ஜெரூசலத்தில் முன்னெப்போதும் இல்லாத மோதல் மற்றும் காசா பகுதியில் போர், இன அழிப்பு மற்றும் பட்டினிக்கு மத்தியிலேயே பதவி விலகும் தீர்மானம் எடுக்கப்பட்டது” என்று பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் இராஜினாமா கடிதத்தை வழங்கிய ஷட்டையா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT