களுத்துறையில் சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு கோழிவளர்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பிரதமர் பணிமனை, விவசாய அமைச்சு மற்றும் இலங்கை பச்சைப் புல்வெளி அபிவிருத்தி மத்திய அதிகார சபை யினால் (ஹதபிம) இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சஞ்ஜீவ எதிரிமான்ன தலைமையில் களுத்துறை மாவட்ட செயலக புதிய கேட்போர் கூடத்தில் சிறிய தொழில்முயற்சி ஊக்குவிப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டை அபிவிருத்தி செய்வதுடன், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கத்தை நோக்காகக் கொண்டு பெண் தலைமைத்துவ குடும்பப் பிரிவுகளுக்கு இந்த கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
களுத்துறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தலா ஒரு தொழில் முயற்சியாளர் என்ற அடிப்படையில் திட்டத்தின் ஆரம்ப சுற்று செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு தெரிவான பயனாளிகளுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டன. நாட்டின் கிராமிய பிரதேசங்களில் மக்களிடம் நிலவுகின்ற புரதம் குறைபாட்டு நிலையை போக்கும் நோக்கில் முட்டை பாவனையை அதிகரிக்கச் செய்யவும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் ஆராயப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் பொதுவான இணைப்பு நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா தாழ்நில அதிகார சபையின் வெளிக்கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. களுத்துறையை மையமாகக் கொண்டு அண்மையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜனக குமார, விவசாயப் பணிப்பாளர் ரீ. நன்தன, ஹதபிம அதிகார சபை முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்…
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)