Thursday, May 2, 2024
Home » மலையக தமிழர்களின் பிரச்சினைகள் நாளாந்த சம்பளத்துடன் மட்டுப்பட்டதல்ல

மலையக தமிழர்களின் பிரச்சினைகள் நாளாந்த சம்பளத்துடன் மட்டுப்பட்டதல்ல

by sachintha
February 27, 2024 6:56 am 0 comment

வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன் தொடர்பு​ைடயது

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் அவசியமற்றது

நீர் கட்டணம் இந்த வருடத்தில் அதிகரிக்காது

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அன்றாட சம்பளத்துடன் மட்டுப்படுத்தக் கூடாது என்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக தெரிவித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டாலும், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் அவசியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்குமேலும் விளக்கமளித்த அமைச்சர் ,

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால், கடந்த 19 ஆம் திகதி 1300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது என்பதாலேயே ஒரே நேரத்தில் இதனை ஆரம்பித்தோம்.

எஞ்சியுள்ள 8700 வீடுகளையும் இவ்வாறே ஒரே நேரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.அந்த வகையில். இந்த 1300 வீட்டுத்திட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்படும்.

வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் அரசியல் ரீதியாக தெரிவுசெய்யப்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.அதில் எந்த உண்மையும் கிடையாது. முக்கியமாக இந்த வீட்டுத்திட்டப் பயனாளிகள் ஒரு அளவுகோளின் அடிப்படையிலேயே தெரிவுசெய்யப்படுவர்.

உதாரணமாக இரண்டு, மூன்று குடும்பங்கள் ஒரு லயன் வீட்டில் இருப்பார்களானால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் இதுவரை எந்தவொரு அரசாங்க வீட்டுத் திட்டத்தின் ஊடாகவும் பயன் பெறாதவர்களும் தற்காலிக குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அத்துடன் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்படுவதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் மலையக மக்களுக்கு 10 பேச்சர்ஸ் காணி வழங்கப்படுகிறது.

அவ்வாறு எவருக்காவது 7 பேர்ச்சஸ் காணி மட்டும் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் முறைப்பாட்டை சமர்ப்பித்தால் அவர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..

சுயதொழில் வாய்ப்பை ஊக்குவிப்பதற்காகவே பாரத் – லங்கா வீட்டுத் திட்டத்தின் மூலம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

“ பிரஜா சக்தி” வேலைத்திட்டத்தின் ஊடாக இந்த சுயதொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இந்த வருடத்தின் நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக “கந்துரட்ட தசக” என்ற வேலைத் திட்டத்தின் மூலம் 89 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தலா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வீடுகளுக்கு இதில் ஒரு தொகை நிதி வழங்கப்படும். மேலும் மலையக மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.

காணி வழங்கப்படும் போது அந்தக் காணி உறுதிப்பத்திரத்தை பெருந்தோட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. அதனை நாம் மறுத்துள்ளோம்.

காரணம், நிபந்தனையற்ற முறையில் இந்தக் காணி உறுதிப் பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

பெருந்தோட்டக் கம்பனிகளின் கோரிக்கையை பிரதமர் அலுவலகமும் மறுத்துள்ளது. இதனைத்தவிர, தற்போது பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான அளவுகோளைத் தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த காணி உரிமை வழங்குவது தொடர்பான திட்டத்தினை எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் அமுல்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றோம். அதற்காக ஜனாதிபதி 4,000 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT