Sunday, May 19, 2024
Home » மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பஞ்சரத பவனி

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பஞ்சரத பவனி

by Gayan Abeykoon
February 23, 2024 10:24 am 0 comment
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் - மாத்தளை முன் வரிசை : இடமிருந்து வலம்: திரு. கந்தையா கனகரட்ணம் , திரு. வேலாயுதம் சுதர்ஷன் (உப தலைவர்), திரு. பெரியசாமி மனோகரன் (பொருளாளர்), திரு. விக்னேஸ்வரா சர்வானந்தா (தலைவர்) , திரு. செல்லையா ஜெயராஜ் (செயலாளர்) , திரு. அங்கமுத்து யோகராஜா செட்டியார் (உப செயலாளர்), திரு. மாரிமுத்து நாகேந்திரன் ராஜதுரை , திரு. வேலு அழகேஸ்வரன் பின் வரிசை : இடமிருந்து வலம்: திரு. தியாகராஜா கிஷோகுமார் , திரு. செல்லதுரை விஸ்வநாதன் , திரு. வீரையா முத்துசாமி , திரு. சுப்பையா பிரதீபன் , திரு. அங்கப்பன் திருச்செல்வம் ஆசாரியார் , திரு. இராமசாமி கிருஷ்ணகுமார்

ஆலய பிரதம குருக்களின் ஆசிச்செய்தி

‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை

அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை

புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும்

கரும்பு மங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத்

தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே’  

காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில் விசாலாட்சியாகவும் மதுரையில் மீனாட்சியாகவும் நின்று தன் அருளாட்சியை புரிகின்ற சக்தியானவள் இலங்கையில் எழில் கொஞ்சும் மலையக மண்ணின் மணிவிளக்காய விளங்கும் மாத்தளையில் அனைத்து சக்தி சொருபங்களையும் தன்னுள் உள்ளடக்கி மகா சக்தியாய் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பிகையாய் மந்திர சிம்மாசனத்தில் இராஜ மாதாவாக அமர்ந்து அருள் புரிபவள் அன்னை ஸ்ரீ முத்துமாரி. இன, மத,மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் அரவணைத்து ஆதரிப்பவள் நம் அன்னை முத்துமாரி. அருள் சக்தியை ஒப்பிட முடியாத வேதவல்லியும் அவளே. அழகுக்கே நிகரில்லாத அபிராமிவல்லியும் அவளே. அத்தகைய மகா சக்தியானவள் இம்மாத்தளை மண்ணிலே இவ் ஆலயத்தில் எழுந்தருளி பல்வேறு சக்தி ரூபங்களாய் பரிணமிக்கிறாள் என்பதையும் நாமறிவோம்.

அன்னை அருளாசியோடு நடைபெறும் இம்மாசி மக மகோற்சவ தேர்த்திருவிழா சிறப்புற பூலோக நாயகி திரிபுர சுந்தரி அன்னை முத்துமாரியம்பிகையின் திருமென் மலர்ப்பாதம் பணிந்து ஆசி கூறுகின்றேன்.

‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’  

கிரியாபானு, கிரியாமணி,

சிவஸ்ரீ. சு. மணிகிருஸ்ண குமார குருக்கள்  

ஆலய பிரதம சிவாச்சாரியார்  


தலைவரின் வாழ்த்துச் செய்தி

இயற்கை எழில் கொஞ்சும் எமது இலங்கைத்திருநாட்டின் அழகு மலை அடிவாரத்தில் மலைவளமும் கலை வளமும் மாண்புற்று விளங்குவதாகவும் தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான பன்னாகமம் எனப்போற்றபபடுவதுமான மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திவ்விய சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முத்துமாரியம்மனுக்கு ஆண்டு தோறும் மிகச்சிறப்பாக மகோற்சவ பெருவிழாவானது இடம் பெற்று வருகின்றது.

கடந்த 02.02.2024 கொடியேற்றத்தோடு ஆரம்பமாகி மாசிமக நன்னாளிலே பஞ்சமுக விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சோமசுந்தரேஸ்வரர் சண்டேஸ்வரி என பரிவாரங்களை அழைத்துக்கொண்டு பஞ்சரதமேறி வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். மாத்தளை வாழ் மக்களுக்கு ‘வேண்டுவோர்க்கு வேண்டுவன’ எல்லாம் வாரி வழங்க பஞ்சரதத்தில் ஆரோகணித்து வருகிறாள். எத்தனை விழாக்கள், உற்சவங்கள், விரத அனுட்டானங்கள் யாவும் ஆண்டாண்டு தோறும் அம்பாளின் அருட்சக்தியினால் இனிதே நிறைவேற்றப்படினும் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி மக மகோற்சவ திருவிழா இலங்கை திருநாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள இந்துக்கள் அனுபவித்து கொண்டாடும் ஓர் ஆன்மீக திருவிழா ஆகும்.

மாத்தளை மாநகரில் அருள் சுரக்கும் அகிலாண்ட கோடி பிரமாண்டமான நாயகி அன்னை ஸ்ரீ முத்துமாரியம்பிகையின் திருவருளும், அம்பிகை அடியார்களின் பரிபூரண ஒத்துழைப்போடும், ஸ்ரீ முத்துமாரியம்பிகையின் வருடாந்த மாசிமக மகோற்சவத் தேர்த்திருவிழா 24.02.2024ம் திகதி சனிக்கிழமை மிகச்சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற இனிய நல் வாழ்த்துக்களை இச்சிறப்பு மலரின் மூலமாக தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு, எமது நாட்டுக்கும், நகருக்கும், அன்னையின் நல்லருளும், திருவருட்கடாட்சமும் கிட்ட வேண்டி பிரார்த்திக்கின்றேன்.

‘எல்லா புகழும் என் அன்னைக்கே’  

இங்ஙனம்,  

விக்னேஸ்வரா சர்வானந்தா  

கௌரவ தலைவர்  


 

செயலாளரின் வாழ்த்துச் செய்தி

எழில் கொஞ்சும் மலையகத்தின் மண்ணாம் மாத்தளை மாநகரில் உறையும் அன்னை முத்துமாரியவள், நலங்கள் யாவும் பொழியவும் நாட்டில் சாந்தி, சமாதானம், நல்லுறவு ஏற்படவும், நாட்டில் மழை பொழிந்து வளம் சுரந்து நாடும் வீடும் செழித்து, பஞ்சம் பட்டினி நீங்கி மக்கள் இன்புற்று வாழவும், அன்னையின் அருள் நோக்கால் நம் திருநாடு அவனியெங்கும் புகழ்பெறவும், இன்றைய பக்திப்பூர்வமான மகோற்சவத்திருவிழா அமையப் பெற்றிருப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.  சக்தி வழிபாட்டின் கேந்திர ஸ்தானமாக விளங்கும் மாத்தளை மாநகரில் அருள் சுரக்கும் ஸ்ரீ முத்துமாரியம்பிகையின் திருவருளும், அம்பிகை அடியார்களின் பரிபூரண ஒத்துழைப்போடும், ஸ்ரீ முத்துமாரியம்பிகையின் வருடாந்த மாசிமக மகோற்சவத் தேர்த்திருவிழா மிகச் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற இந்நன்நாளில் இனிய நல் வாழ்த்துக்களை இச்சிறப்பு மலரின் மூலமாக தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு, எமது நாட்டுக்கும், நகருக்கும், அன்னையின் நல்லருளும், திருவருட்கடாட்சமும் கிட்ட வேண்டி பிரார்த்திக்கின்றேன்.

அன்னை முத்துமாரி அருள்வாய் நலம் யாவும்

சுபம் 

இப்படிக்கு 

செல்லையா ஜெயராஜ்

கௌரவ செயலாளர் 


 

பொருளாளரின் வாழ்த்துச் செய்தி

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வெளியிட இருக்கும் சிறப்பு மலருக்கு வாழ்த்துச்செய்தி தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.  மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்பிகையின் திருவருள் பெறும் பேறாக இவ்வாண்டும் மாசிமக மகோற்சவம் வேதாகம விதிமுறைகளுக்கு சற்றும் வழுவாது சமயாச்சிரியர்கள் மூலம் சிறப்புற நடாத்தப்பட வாய்ப்பினைப் பெற்றுள்ளது. அம்பிகையின் கருணையால் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனையுடன் மிக அலங்காரமான பஞ்சரத பவனி விமர்சையாக நடைபெறவுள்ளது.  தன்னை நாடி வரும் பக்தர்களின் குறை தீர்த்து அருளாசியை பொழிகின்றவள் அன்னை முத்துமாரி என்றால் அது மிகையாகாது. மேலும் இப்பஞ்சரத பவனி சீரோடும் சிறப்போடும் நடந்தேறுவதற்கு சிறப்பான செயல்முறைகளை வகுத்து செயற்பட்ட ஆலய அறங்காவல் சபை உறுப்பினர்கள், பொது மக்கள், வர்த்தக பெருமக்கள், மாத்தளை பொலிசார், மாத்தளை மாவட்ட செயலகத்தினர்,  மாத்தளை மாநகர சபையினர் மற்றும் மாத்தளையில் இயங்கி வரும் பல்வேறு சங்கங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.  ஆலய பரிபாலன சபை மிக பக்தி சிரத்தையோடும் சமய சமூக நல அக்கறையோடும் செயற்படுவதுடன் அறப்பணிகளுக்காக பெருந்தொகையான பணத்தையும் ஒதுக்கிட்டு வருவது போற்றுவதற்கு உரியதாகும். பஞ்சரத பவனியன்று காலை 8.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் காலை 10.00 மணிக்கு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்று பஞ்சரத பவனி நடைபெறும்.  தேர்த்திருவிழாவன்று ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். அடியார்கள் உள்ளம் குதூகலிக்கும். அனைவரும் வேறுபாடின்றி திருத்தேர்களில் பவனி வரும் உற்சவ மூர்த்திகளின் அருளாசியைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றேன்.

சுபம் 

இங்ஙனம், 

பெரியசாமி மனோகரன் 

கௌரவ பொருளாளர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT