Tuesday, May 21, 2024
Home » கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை

பிரதம அதிதியாக அமைச்சர் அலிசப்ரி பங்கேற்பு

by Gayan Abeykoon
February 23, 2024 5:48 pm 0 comment

ண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை  24ஆம் திகதி பி. ப. 6.30 மணிக்கு த கிரேண்ட் கண்டியன் ஹோட்டலில் தலைவர்  எம். எச் சலீம்டீன் தலைமையில் நடைபெறுகிறது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து  கொண்டு சிறப்பிக்கவுள்ளார். கௌரவ அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ  கமகே, விசேட விருந்தினர்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர்  எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான்  ரத்வத்த, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பதில் தூதுவர் வாஜிட் ஹஸன்  ஹஸ்ஃமி, பாகிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார்,  பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எச். ஏ. ஹலீம், ரவூப் ஹக்கீம்  ஆகியோர்களுடன் முன்னாள் கண்டி மாநகர முதல்வர் கேசர சேனநாயக, சந்தன  தென்னகோன், கண்டி மாநகர சபையின் ஆணையாளர் இசான் விஜயதிலக, முஸ்லிம்  பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட் ஏ. எம். பைஸல், இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினர்  எம். முஸ்லிம் சலாஹுதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் வரலாறு 

கண்டியில் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகள் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. ஆரம்பகாலம் முதல் எமது ஆதிக்குடிகள் இங்கு குடியேறியமையை இதற்கு முக்கிய காரணமாகக் கூறலாம். அந்தக் காலத்தில் இருந்த முஸ்லிம்கள் வியாபாரத்தில் நம்பிக்கை, நாணயத்துடன் பல்லின மக்களிடையே மிகுந்த விசுவாசத்துடன் நடந்துகொண்டனர் என்றால் மிகையாகாது.

1993ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த முஸ்லிம் வர்த்தக சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், கண்டி பிரதேசத்திலிருந்த மேமன் சமூக வர்த்தகர்கள் அதில் அதிகமாக அங்கத்துவம் பெற்றிருந்தனர்.

1948 ஆம் ஆண்டில் 9 முக்கிய வர்த்தகர்கள் சேர்ந்து கண்டி, திருகோணமலை வீதியில் காணப்பட்ட 279 ஆம் இலக்க கட்டடம் அமைந்துள்ள காணியைக் கொள்வனவு செய்து, அதனை மத்திய மாகாண முஸ்லிம் லீக்கிற்கு வக்பு செய்தனர். இந்த இடத்தில்தான் தற்போது ஜின்னா ஞாபகார்த்த மண்டபம் எனும் பெயரில் சங்கம் இயங்கி வருகின்றது. 1990 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் முஸ்லிம் வர்த்தக சங்கம் பல்வேறு சவால்ககள சந்தித்து வந்தது. இச்சந்தர்ப்பத்தில் காலத்தின் தேவையை உணர்ந்த கண்டி நகரில் பிரபல வர்த்தகர்களில் ஒருவராகத் திகழ்ந்த அல்ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் அவர்கள் சமூக சிந்தனையாளர்களுடன் சேர்ந்து தனது வியாபார நிலையத்தில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தார்.

அதன் பின்னர் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் முதலாவது நிர்வாகக் கூட்டம் 1993.06.27 ஆம் திகதி கண்டி ஹனபி பள்ளிவாசலில் அதன் அப்போதைய பேஷ் இமாம் அல்ஹாஜ் மௌலவி சலாஹுதீன் அவர்களின் ஆசியுடன் நடைபெற்றது.

இதில் ஹாஜிகளான ஏ.எம். இஸ்மாயில், என்.ஏ.எஸ்.முபாரக், எம்.ஐ.எல்.எம்.ஹுகசன், ஏ.ஏ.எம். யூசுப், எம்.எச்.சலீம்தீன், எம்.உகவஸ், எம்.எம்.நியாஸ், எஸ்.எஸ்.ஜே.ஜே.ஆப்தீன், எப்.எம்.அக்பர், ஏ.எம்.ஏ.மஜீத், ஜே.ஏ.எம்.இப்றாஹீம், ஜே.ஏ.எம். பாரூக், ஏ.ஜே.எம்.முபாரக், என்.எம்.எம்.நஹீம், எஸ்.எம்.எம்.கபஸல், எச்.எம்.சபீக் உட்பட 16 பேர் கலந்துகொண்டனர். இதன்போது 1993.07.11 ஆம் திகதி முஸ்லிம் வர்த்தக சங்கத்திற்கான

பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் சுமார் 300 பேர் வரை பங்குபற்றியதுடன், அதில் அல்ஹாஜ் எச்.எல்.எம். நிஸாம் தலைவராகவும் எம்.எச்.சலீம்தீன் செயலாளராகவும் மொஹமட் உவைஸ் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் சட்டத்தரணி எம். நசீர் சட்ட ஆலோசகராகவும் ஏ.ஜே.எம். முபாரக் கணக்காய்வாளராகவும் எச்.எல்.எம். மன்சூர் பிரசார செயலாளராகவும் ஐ.ஏ. ரசாக் நிர்வாக செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டதுடன், மொத்தமாக 21 நிர்வாக அங்கத்தினர்கள் இதன்போது தெரிவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சங்கத்திற்கு என புதிதாக யாப்பொன்றும் உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய அம்சங்களாவன –

(அ). கண்டியிலும் கண்டியை அண்மித்துள்ள வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழில் துறையினரின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவி செய்தல்.

(ஆ). வர்த்தகர்களின் நலன்புரி விடயங்களில் ஈடுபடுதல்.

(இ). வர்த்தக சமூகத்தினரின் ஒற்றுமையை பேணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளல்.

 

முக்கிய திட்டங்கள் 

இவ்வமைப்பு பல்வேறு வகையான திட்டங்களை மேற்கொண்டு வருவதுடன்,

வர்த்தகர்களின் நன்மை கருதி துறைசார் விழிப்புணர்வுக​ைள ஏற்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகளை நடத்துதல், விற்பனைத் துறை மேம்பாட்டிற்கான செயற்றிட்டங்கள், தொழில்நுட்பத்துறை (IT)மேம்பாட்டிற்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல், பெண்களுக்கான தையல் வகுப்புகளை நடத்துவதற்கு வழிவகை செய்கொடுத்தல், இயற்கை அனர்த்தங்களின் போது முக்கியமான உதவி ஒத்துழைப்புகளை சகல சமூகங்களுக்காகவும் பெற்றுக்கொடுத்தல் போன்ற திட்டங்களை முஸ்லிம் வர்த்தக சங்கம் செய்து வருகின்றது.

குறிப்பாக கடந்த Covid-19 நோய் காலப்பகுதியில் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொடுத்தமை, கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள் மற்றும் சித்திலெப்பை மகா வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்தமை, முதலீட்டாளர்க​ைள
ஊக்குவிக்கும் நோக்குடன்  வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பனவும் வர்த்தக சங்கத்தின் மூலம்  மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் கண்டியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு முஸ்லிம் வர்த்தக சங்கம் சார்பாக பங்களிப்பினை பெற்றுக்கொடுத்தல், உதாரணமாக –  கண்டி நகர அபிவிருத்தி, எசல பெரஹரா வைபவம், வெசாக் வைபவம், போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் போன்றவற்றிற்காக உதவி ஒத்துழைப்புகளை நல்குதல் என்பவற்றை சுட்டிக்காட்டலாம்.

கடந்த 30 வருடங்களில் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் நிர்வாகத்தில் பொறுப்புகளை வகித்த தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என பலரும் அர்ப்பணிப்புடன் முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்காகவும் சேவையாற்றியுள்ளனர்.

 

வர்த்தக முன்னெடுப்புகள் 

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கமானது வர்த்தகத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் வெளிநாடுகள் உட்பட உள்ளூரின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் தூதுக்குழுக்களை அனுப்பியுள்ளது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கும் உள்ளூரில் நீர்கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களுக்கும் சங்கத்தின் சார்பாக தூதுக்குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எமது வர்த்தக சங்கம் மூலமாக சிறந்த வளவாளர்களைக் கொண்டு வர்த்தக மேம்பாடு பற்றிய கருத்தரங்குகள், வரிசம்பந்தமான விழிப்புணர்வுகள், வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்தல், இஸ்லாமிய நிதி, வர்த்தகப் பாதுகாப்பு, முன்மாதிரியான இஸ்லாமிய வியாபாரம் போன்ற பல்வேறு அம்சங்களில் கருத்தரங்களும் விரிவுரைகளும் நடத்தப்பட்டுள்ளன. (2017 Sales Training Programe நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது).

எமது வர்த்தக சமூகத்தினரின் முதலீட்டுக் குறையை நிவர்த்தி செய்து வைக்கும் நோக்கில் அங்கத்தவர்களிடம் இருந்து நிதியை திரட்டி உதவிகளை மேற்கொள்வதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் வர்த்தக சமூகத்தினர் பயனடைந்து வருகின்றனர்.  முஸ்லிம் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் சம்பந்தமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நிதியமைச்சர், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாகாண உள்ளூராட்சி அதிகாரிகளையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் பலமுறை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.  மத்திய மாகாண வர்த்தக சபை (Chamber of Commerce)அதிகாரிகளுடன் நல்லிணக்கத்துடன் உறவாடி, சுமூக உறவினைப் பேணுவதுடன், இருதரப்பும் பயன்பெறும் விதமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய மாகாண வர்த்தக சபையில் முஸ்லிம் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் நால்வர் பணிப்பாளர்களாக தற்போது செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பல்லின சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதில் 

இச்சங்கம் முன்னின்று செயற்பட்டுள்ளது

வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி (PC)  

கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் 30ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக என்னை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இச்சங்கத்திற்கு மூன்று தசாப்த காலம் என்பது ஒரு மைல் கல்லாகும். உண்மையிலேயே இச்சங்கம் சமூகத்தின் வளர்ச்சியிலும் வர்த்தக மேம்பாடு தொடர்பான விடயங்களிலும் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்துள்ளன. அவை பாராட்டத்தக்கது. இந்தச்சங்கம் பல ஆண்டுகளாக வர்த்தகத்தை மட்டும் வளர்க்கவில்லை. பல்லின சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. சமூக சேவையின் வாயிலாக மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவையும் நற்பெயரையும் இச்சங்கம் பெற்றுள்ளது.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. அது பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி கடினமான நிகழ்வுகளாக இருந்தாலும் சரி நாம் முன்னெப்போதையும் விட ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமது நாடு பல்லின மற்றும் பல மத கலாசாரங்களை கொண்ட நாடாகும். சகல விடயங்களிலும் நாம் ஒன்றுபட்டு இருந்தால் மட்டுமே அதன் முழுத் திறனை அடைய முடியும். அது வலிமை மிக்கதாகவும் மற்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகவும் அமையும்.

சங்கத்தின் வளர்ச்சியில் அங்கத்தவர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடைய ஒரு பெரிய பங்களிப்பு இருந்து கொண்டிருக்கிறது. இச்சங்கம் இன்னும் பல்லாண்டு காலம் தனது நல்ல பணியை தொடர வேண்டும் என்பது எனது எதிர்ப்பாகும்.


 

சங்கத்தின் வளர்ச்சி அனைவரின்  

அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி 

எம்.எச்.எம்.சலீம்டீன் (தலைவர், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம்)   

இச்சங்கத்தின் தலைவர் என்ற வகையில், எமது சங்கத்தின் ஸ்தாபகர்கள் முதல் இற்றைவரை பணியாற்றிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், போசகர்கள் அனைவரையும் எம் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருவதோடு எமது மனமார்ந்த நன்றியையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். மூத்த தலைவர்களின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் என்பதுதான் இச்சங்கத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது என்று குறிப்பிடலாம்.   கடந்த மூன்று தசாப்தங்களாக, பலத்த சவால்களுக்கு மத்தியில் இச்சங்கம் அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் உண்மையான நோக்கம் முஸ்லிம் வணிகர்களின் குரலாகவும் மேம்பாட்டுக்காகவும் உருவாக்கப்பட்டவையே. பல்லின சமூகத்தவர் மத்தியிலும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு மத்தியிலும் அங்கீகாரமும் மரியாதையும் பெற்று பெருமையுடன் செயற்பட்டு வருகின்றன.

இச்சங்கம் வணிக மேம்பாட்டுத் திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் போன்ற செயலமர்வுகள், நடத்தி பொருளாண்மை வளர்ப்பதில் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றது. அதே போன்று சமூக விடயங்களிலும் கவனம் செலுத்தி கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், இயற்கை அனர்த்தங்களின் நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். கல்வி மற்றும் இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இளைஞர் வணிக கவுன்சில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் 30 ஆண்டு பயணத்தை பிரதிபலிக்கும் வகையில், வணிகங்களை மேம்படுத்தும் பார்வையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.   அதேவேளையில் சமூகங்களை செழுமைப்படுத்துதல், வர்த்தக தலைமைத்துவத்தை உருவாக்குதல், சமூகப் பொறுப்பு, வர்த்தகக் கல்வி, கண்டியின் பொருளாதார மற்றும் சமூக நிலப்பரப்பில் ஒரு முக்கிய பங்காளியாக நாங்கள் உறுதியோடு எழுந்து நிற்கின்றோம்.

 


30 ஆண்டு நிறைவை எண்ணி எம்மனங்கள் மகிழ்ச்சியடைகின்றன

ஏ. சி. எம். ரகுமான்  (பொதுச் செயலாளர்)  

வணிகம் தொடர்பான அறிவுக்கும் அதன் மேம்பாட்டிற்கும் சமூக, மனிதாபிமான பணிகள் மீது பற்றுக் கொண்டவர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும் அடித்தளமாக அமையப்பெற்றதே எமது கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகும்.

இந்த வர்த்தக சங்கத்தின் 30 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவது மனதிற்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில் ஆரம்ப முதல் இற்றைவரையிலும் இச்சங்கத்தை கட்டியெழுப்புவதற்காக தோளோடு தோள் நின்று பங்காற்றிய கடந்த காலத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள் எனப் பலதரப்பட்டோர் அர்ப்பணிப்புடன் சேவை புரிந்துள்ளனர். அவர்களை இத்தினத்தில் நினைவு கூர்ந்து கொள்வதில் நாம் பெருமிதம் அடைகின்றோம்.

மனித வாழ்வு, வர்த்தக மேம்பாடு மற்றும் சமூக இருப்பினை மேம்படுத்தும் வகையில் எமது கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம் அளப்பரிய சேவைகளைப் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூக மக்களுக்கிடையே சகவாழ்வை வலுப்படுத்தும் வகையில் கண்டியில் பெறுமதிமிக்க சேவைகள் இச்சங்கம் ஆற்றியுள்ளது.

குறிப்பாக வர்த்தகம் மேம்பாடு தொடர்பான பயற்சிப் பட்டறைகள், மாணவர்களுக்கான கணினி கல்வி அறிவு, சர்வ சமய , அனர்த்தங்களின் போது பங்காற்றுதல், மற்றும் தேசிய ,சமூக மனிதாபிமானப் பணிகள் போன்ற பல்வேறு விவகாரங்களிலும் கவனம் செலுத்தி தூர நோக்குடன் செயற்பட்டு வருகின்றோம்.

முஸ்லிம்களுடைய வர்த்தக நடவடிக்கைகளையும், நன்மதிப்புக்களையும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துக் காட்டுவதில் எமது சங்கத்தினர்கள் அளப்பரிய சேவையாற்றி வருகின்றனர். இவ்விழா செழித்து சிறப்புற எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT