இலங்கைப் பத்திரிகைத்துறையின் தாய்வீடு என்று அழைக்கப்படுகின்ற லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர். விஜேவர்தன அவர்களின் 138 ஆவது பிறந்த தினம் நாளை 23 ஆம் திகதியாகும்.
எமது தாயகம் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான முயற்சிகளை எமது உள்நாட்டு மக்கள் காலத்திற்குக் காலம் முன்னெடுத்து வந்தனர். அவை போராட்டங்களாகவும் வெடித்தன. ஆயினும் அப்போராட்டங்கள் கொடுங்கரங்கள் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டு வந்தன.
இச்சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகள் பிரித்தானிய காலனித்துவ காலப்பகுதியில் முனைப்புடன் தீவிரமடையத் தொடங்கின. இந்நாட்டின் ஒவ்வொரு தேசப்பற்றாளரும் சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களிப்புகளை நல்க ஆரம்பித்தனர். அவர்களில் தொன் ரிச்சர்ட் விஜேவர்தன என்ற டி.ஆர். விஜேவர்தன மிக முக்கியமானவராவார்.
இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கென இற்றைவரையும் பயன்படுத்தப்பட்டிராத ஒரு புதிய வழிமுறையை இவர் 1910 களில் அறிமுகப்படுத்தினார். அதுதான் ஊடகமாகும். இதன் ஊடாக இலங்கையின் விடுதலைப் போராட்டத்திற்கு ஊடகத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்திய பெருமைக்குரிய முதல் மனிதராக டி.ஆர். விஜேவர்தன விளங்குகின்றார். இவரது ஊடக நடவடிக்கைகள் இந்நாட்டின் விடுதலையைத் துரிதப்படுத்தின.
அன்றைய காலகட்டத்தில் சேதவத்தையின் முன்னணி மரவர்த்தர்களில் ஒருவராக விளங்கிய முஹந்திரம் துடுகலகே தொன் பிலிப் விஜேவர்தன மற்றும் ஹெலனா வீரசிங்க தம்பதியினருக்கு 1886 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று டி.ஆர். விஜேவர்தன மகனாகப் பிறந்தார். ஒன்பது சகோதர சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார்.
இவர் தம் ஆரம்பக் கல்வியைக் கொழும்பு சேதவத்தை வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியைக் கல்கிஸை சென் தோமஸ் கல்லூரியிலும் பெற்றார். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்றார். அங்கு சட்டம் மற்றும் அரசியல் தொடர்பாகக் கற்று பரிஸ்டர் பட்டம் பெற்றதோடு சிறந்த வழக்கறிஞராக 1912 ஆம் ஆண்டில் இவர் நாடு திரும்பினார்.
டி.ஆர். விஜேவர்தன கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது உலகின் அன்றைய பல பிரபலங்களின் அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார். அவர்களுடன் இவர் நெருங்கிப் பழகினார். அவர்களில் இந்தியாவின் அன்றைய தலைவர்களாக விளங்கிய லாலா லஜ்பட், ராய் பெபின் சந்திரா பால், சுரேந்திரநாத் பெனர்ஜி, கோபால கிருஷ்ண கோக்கிலே போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
அதேநேரம் அன்று உள்நாட்டில் முன்னணித் தலைவர்களாக விளங்கிய டி.எஸ். சேனநாயக்கா, எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, சேர் ஜேம்ஸ் பீரிஸ், சேர் பொன்னம்பலம் அருணாசலம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருடனும் அவர் நெருக்கமான உறவைப் பேணினார்.
இந்தியாவின் கோபால கிருஷ்ண கோக்கிலேவின் சுதந்திர போராட்ட வழிமுறைகளால் டி.ஆர். விஜேவர்தன பெரிதும் கவரப்பட்டார். சுதந்திர வேட்கையை உணர்வுபூர்வமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடியவராக கோக்கிலே விளங்கினார்.
மேலும் இதே காலப்பகுதியில் உலகின் பல பாகங்களிலும் விடுதலைப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அப்போராட்டங்கள் தொடர்பான அறிவையும் தெளிவையும் மாத்திரமல்லாமல் அப்போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் குறித்த அறிவையும் கூட பெற்றுக்கொள்ளுவதற்கு பல்கலைக்கழக வாழ்வு டி.ஆர். விஜேவர்தனவுக்குப் பெரிதும் உதவியது.
சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான பரந்த அறிவைப் பெற்றவராகவுமே டி.ஆர். விஜேவர்தன நாடு திரும்பினார். அவர் தாம் பெற்றிருக்கும் அறிவை தம் தாயகத்தின் விடுதலைக்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார். சுதந்திர வேட்கை குறித்த எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.
இந்தச் சூழ்நிலையில் எச்.எஸ். பெரேராவை ஆசிரியராகக் கொண்டு ‘தினமின’ என்ற பெயரில் சிங்கள மொழிப் பத்திரிகையொன்று வெளிவந்து கொண்டிருந்தது. ஆயினும் அக்காலப்பகுதியில் எச்.எஸ். பெரேரா நோய் வாய்ப்பட்டதால் பத்திரிகை வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் டி.ஆர். விஜேவர்தன, சுதந்திர வேட்கையைப் பரந்த அடிப்படையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும், கலால் சட்டத்திற்கு எதிராக மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பத்திரிகை ஊடகமே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்தார்.
அதனால் தினமின பத்திரிகையை விலை கொடுத்து வாங்கி அதனைத் தொடர்ந்தும் வெளியிட்டு சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியில் விதைப்பதற்கு டி.ஆர். விஜேவர்தன தீர்மானித்தார்.
தினமின பத்திரிகையை 1914 ஆம் ஆண்டில் இவர் கொள்வனவு செய்தார். இப்பத்திரிகை 1914 ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் டி.ஆர். விஜேவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் புதுப்பொலிவுடன் வெளிவரத் தொடங்கியது.
இச்சந்தர்ப்பத்தில் காலனித்துவத்திற்கு எதிராக போராட்டத்தையும் சுதந்திர வேட்கைகையும் மக்கள் மத்தியில் விதைக்க ஆங்கிலப் பத்திரிகையொன்றின் அவசியத்தையும் இவர் உணர்ந்தார். அதற்கேற்ப 1918 ஆம் ஆண்டில் ‘டெய்லி நியூஸ்’ என்ற பத்திரிகையையும் இவர் ஆரம்பித்தார்.
இப்பத்திரிகைகளின் பணிகளை விரும்பாத காலனித்துவ ஆட்சியாளர்கள் அவற்றின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கினர். இருப்பினும் அவற்றைக் கண்டு தமது நடவடிக்கைகளை டி.ஆர். விஜேவர்தன கைவிடவில்லை. அதனால் நாளுக்குநாள் மக்கள் மத்தியில் இப்பத்திரிகைகளுக்கான வரவேற்பு அதிகரித்தது.
தமது பத்திரிகைகளுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததால் மற்றொரு ஆங்கிலப் பத்திரிகையையும் ஆரம்பிப்பதற்கு இவர் தீர்மானித்தார். அதுவே ‘ஒப்சேவர்’ பத்திரிகையாகும். இப்பத்திரிகை 1923 ஆம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 1930 ஆம் ஆண்டில் ‘சிலுமின’ என்றொரு சிங்கள மொழிப் பத்திரிகையையும் ஆரம்பித்தார். இவை இரண்டும் வார இறுதிப் பத்திரிகைகயாக வெளிவந்தன. இந்த நான்கு பத்திரிகைகளும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பேசும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தன.
இந்நாட்டில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கென 1930 கள் வரையும் எந்தவொரு தமிழ் தினசரியும் வெளிவரவில்லை. அதனால் இந்நாட்டுத் தமிழ்மொழி பேசும் மக்கள் தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த பத்திரிகைகளையே படித்து வந்தனர். இவ்விரு சமூகத்தவரும் இந்நாட்டு சுதந்திரம் தொடர்பான செய்திகளை விடவும் இந்தியா விடுதலை தொடர்பான தகவல்களையே அதிகம் அறிந்தவர்களாக இருந்தனர்.
1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் இலங்கையின் இரண்டாவது தமிழ் தினசரியாகத் ‘தினகரன்’ பத்திரிகையை அவர் வெளியிடத் தொடங்கினார்.
இவ்வாறு இந்நாட்டின் சுதந்திரத்திற்காக விடுதலை வேட்கையை விதைக்கக்கூடிய மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளை வெளியிட்ட பெருமையும் அமரர் டி.ஆர். விஜேவர்தனவையே சாரும்.
1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இச்சுதந்திரம் அமரர் டி.எஸ். சேனநாயக்கவிடமே வழங்கப்பட்டது. அவர் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதும் முதலில் தொடர்பு கொண்டு உரையாடிய மனிதராக அமரர் டி.ஆர். விஜேவர்தன கருதப்படுகின்றார். அந்த உரையாடலின் போது டி.எஸ். சேனநாயக்கா இந்நாட்டின் சுதந்திரத்திற்காக டி.ஆர். விஜேவர்தன ஆற்றிய பங்களிப்புக்களை பெரிதும் பாராட்டியுள்ளார்.
இவ்வாறு இந்நாட்டின் சுதந்திரத்திற்காக பத்திரிகைகள் மூலம் அளப்பரிய சேவையாற்றிய தேசப்புதல்வர் டி.ஆர். விஜேவர்தன. தனது 64 ஆவது வயதில் அதாவது 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி காலமானார். அவர் இவ்வுலகை விட்டு பிரிந்து பல தசாப்தங்கள் கடந்துள்ள போதிலும் அவர் இந்நாட்டின் விடுதலைக்காக ஆற்றிய பங்களிப்புக்கள் இன்றும் இந்நாட்டு வரலாற்றில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.