சாவில் அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை தடுத்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை அதன் கூட்டணி நாடுகள் மற்றும் போட்டி நாடுகள் இடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் போர் வெடித்தது தொடக்கம் மூன்றாவது முறையாகவே பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
அல்ஜீரியா கடந்த செவ்வாய்க்கிழமை (20) கொண்டுவந்த இந்தத் தீர்மானத்திற்கு மாற்றாக காசாவில் பிடித்து வைத்திருக்கும் அனைத்து இஸ்ரேலிய பணயக்ைகதிகளையும் விடுவிப்பதுடன் தொடர்புபட்டு தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
29,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு காசாவில் பேரழிவை ஏற்படுத்தி இருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் இந்தத் தீர்மானத்திற்கு 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் 13 நாடுகள் ஆதரவை வெளியிட்டன. பிரிட்டன் மாத்திரம் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டது. எனினும் அமெரிக்கா இதற்கு எதிரான தனது நிராகரிப்பு அதிகாரமான வீட்டோவை பயன்படுத்தியது.
காசாவை மேலும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் தவறான செய்தியையே அமெரிக்காவின் வீட்டோ வழங்கி இருப்பதாக ஐ.நாவுக்கான சீன தூதுவர் சங் ஜுன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். “படுகொலைக்கான பச்சைக்கொடி காட்டுவதில் இருந்து இது மாறுடவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வீட்டோ பாதுகாப்புச் சபை வரலாற்றில் மற்றொரு கறுப்புப் பக்கம் என்று ஐ.நாவுக்கான ரஷ்ய தூதுவர் வசிலி நெபன்சியா தெரிவித்துள்ளார். காசாவில் பலஸ்தீனர்களை நெருக்கி அந்த நிலப்பகுதியில் இருந்து முழுமையாக துப்பரவு செய்வதற்கான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற திட்டத்தை பூர்த்தி செய்ய அமெரிக்கா காலத்துடன் விளையாடுகிறது என்றும் அவர் சாடினார். போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்படாதது காசாவில் பேரழிவு நிலையையே ஏற்படுத்தும் என்று ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் நிகொலஸ் டி ரிவிரே கவலையை வெளியிட்டார்.
இந்தத் தீர்மானத்திற்கு எதிரான வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் கிரீன்பீல்ட் கடந்த சனிக்கிழமையே சூசகமாக கூறியிருந்தார். இந்தத் தீர்மானம் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் முயன்றுவரும் போர் நிறுத்த ஏற்பாட்டை குழப்பிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும் கெய்ரோவில் இடம்பெற்றுவரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“இந்த வீட்டோ இஸ்ரேலுக்கு தொடர்ந்து கொலைகளை செய்வதற்கான செய்தியை வழங்கியுள்ளது” என்று ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் பாதுகாப்புச் சபையில் குறிப்பிட்டார். இந்த வீட்டோ காசாவில் ஆக்கிமிப்பாளர்கள் மேலும் படுகொலைகளை செய்வதற்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு சமமானது என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் காசாவில் தற்காலிய போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது மற்றும் ரபாவில் இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்தை எதிர்ப்பதை உள்ளடக்கிய மாற்றுத் தீர்மானம் ஒன்றை பாதுகாப்புச் சபையில் முன்வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. எனினும் இதற்கு சீனா மற்றும் ரஷ்யா வீட்டோவை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
முன்னதாக கடந்த ஒக்டோபர் பிற்பகுதியிலும் காசா தொடர்பில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தபோதும் அதற்கு சீனா மற்றும் ரஷ்யா வீட்டோவை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
“எம்மால் இறக்க முடியாது”
காசாவில் இஸ்ரேலிய தரைப்படை இன்னும் நுழையாத சுமார் 1.5 மில்லியன் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகர் மீது பாரிய படை நடவடிக்கை ஒன்றுக்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கும் சூழலிலேயே போர் நிறுத்த முயற்சிகளும் ஸ்தம்பித்துள்ளன.
காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் தொடரும் நிலையில் நுஸைரத் அகதி முகாமில் உள்ள இரு வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்கதல்களில் சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
தெற்கின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற பீரங்கி தாக்குதல்களில் பலரும் காயமடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையை இஸ்ரேல் தொடர்ந்து முற்றுகையில் வைத்திருப்பதோடு இங்கு நோயாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என 120 பேர் வரை சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ் நகர வீதியில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்ததாக வபா நேற்று கூறியது.
காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் நிரம்பு வழியும் ரபா நகர மையப் பகுதியில் மூன்று வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. அதேபோன்று இங்கு இஸ்ரேலியக் கடற்படை நடத்திய செல் குண்டுகள் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களுக்கு அருகில் விழுந்துள்ளன. இதனால் பலரும் காயமடைந்துள்ளனர். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 118 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 163 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 29,313 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 69,333 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களால் பெரும் அழிவை சந்தித்திருக்கும் வடக்கு காசாவில் உணவு உதவிகளை இடைநிறுத்துவதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இங்கு மூன்று வாரங்களாக உதவி விநியோகங்களை இடைநிறுத்திய நிலையில் உலக உணவுத் திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமையே மீண்டும் விநியோகங்களை ஆரம்பித்தது. எனினும் விநியோகங்களை எடுத்துச் சென்ற வாகனங்கள் துப்பாக்கிச் சூடு, வன்முறை மற்றும் திருட்டுக்கு முகம்கொடுத்திருப்பதோடு ஒரு லொறி ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார்.
“உலக உணவுத் திட்டம் வடக்கு காசாவுக்கான உணவு உதவியை இடைநிறுத்தியது எமக்கு அதிர்ச்சியை தருகிறது, இது முக்கால் மில்லியன் மக்களின் உயிரிழப்புகள் மற்றும் மரண தண்டனைக்கு காரணமாகும்” என்று ஹமாஸ் அரச ஊடக அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஆபத்தான உணவுப் பற்றாக்குறை, பரவலான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் வேகமாகப் பரவுதல் ஆகியவை காசாவில் குழந்தை இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும் என்று உலக உணவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை எச்சரித்திருந்தது.
“இனியும் எங்களால் தாங்க முடியாது. எம்மிடம் மாவு இல்லை, இந்த குளிரான காலநிலையில் எங்கே போவது என்று எமக்குத் தெரியவில்லை” என்று காசா நகரின் குடியிருப்பாளர் ஒருவரான அஹமது ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். இந்த நகரில் அழிக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகள்வீதி எங்கும் சிதறிக் காணப்படுகின்றன.