இந்திய பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்ஸனுக்கு பதில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்திய ரூபா 50 இலட்சம் அடிப்படை விலைக்கு கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் குதித்த துஷ்மந்த விலைபோகாத நிலையிலேயே அந்த தொகைக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும் அவர் கடந்த காலங்களில் ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் சலஞ்சர் பெங்களுர் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகளுக்காக ஆடியுள்ளார்.
மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் பந்து வீசக்கூடிய 32 வயதான துஷ்மந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் சர்வதேச லீக் டி20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடர்புபட்ட அபூதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடியுள்ளார்.
தற்போது தசை உபாதையில் இருந்து மீண்டு வரும் துஷ்மந்த சமீர இறுதியாக இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்றிருந்தார்.
முதல் முறை ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க திட்டமிட்டிருந்த 26 வயது அட்கின்ஸனின் போட்டி அட்டவணையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை மாற்றம் கொண்டுவந்ததை அடுத்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சமீர இதுவரை 12 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீர தவிர நைட் ரைடர்ஸ் அணியில் ஒரே வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக மிச்சல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
2024 ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் மார்ச் 22 மற்றும் மே முடிவுக்கு இடையில் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்தியப் பொதுத் தேர்தல் திகதி உறுதி செய்யப்படுவதன் அடிப்படையிலேயே இறுதித் திகதி அறிவிக்கப்படவுள்ளது.