சவூதி அரேபியாவுக்கு 225 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பீரங்கி வெடிமருந்துகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது.
இந்தியாவின் நட்ரா நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிபென்ஸ் பி.எஸ்.யூ முனிசன்ஸ் இந்தியன் நிறுவனம் அதன் நட்பு நிறுவனமான நட்ரா ஊடாக இந்த வெடிமருந்துகளை சவூதிக்கு வழங்க உள்ளது.
சவூதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வருவதை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. இரு நாடுகளதும் பாதுகாப்பு படையினர் அண்மையில் மேற்கொண்ட இருதரப்பு கூட்டு இராணுவ பயிற்சியைத் தொடர்ந்து இந்த வெடிமருந்து வழங்குதல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை ஏற்றுமதிகளில் இதுவும் மிகப் பெரிய ஒப்பந்தமாக விளங்குகிறது.
சவூதி அரேபியாவின் தலைநகரில் நடைபெற்ற உலக பாதுகாப்பு கண்காட்சி 2024 இல் இந்திய மத்திய இராஜாங்க அமைச்சர் அஜய் பட் தலைமையில் தூதுக்குழுவொன்று கலந்து கொண்டிருந்தது. அச்சமயமே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டமும் சவூதி அரேபியாவின் ‘விஷன் 2030’ திட்டமும் இரு தரப்புக்கும் பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய தேசிய திட்டங்களாகும். இரண்டு திட்டங்களும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சுதேசி திறன்கள் மற்றும் அறிவுப் பகிர்வுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
இந்நிகழ்வில் சவூதியின் இராணுவ கைத்தொழில் பொது அதிகார சபையின் ஆளுனர் அஹமட் அப்துல் அஸீஸ் அல் ஒஹாலியும் பங்குபற்றியிருந்தார்.