Sunday, May 12, 2024
Home » தேர்தல்களுக்கானது அல்ல; சமூக நீதிக்கான ஒப்பந்தமே
ஐ.ம.சக்தியுடனான உடன்பாடு

தேர்தல்களுக்கானது அல்ல; சமூக நீதிக்கான ஒப்பந்தமே

த.மு.கூ. தலைவர் மனோ கணேசன்

by gayan
February 17, 2024 6:35 am 0 comment

“நாட்கூலி தொழிலாளர் என்ற நிலையிலிருந்து, நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக பெருந்தோட்ட மக்களை மாற்றுவோமென ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் பகிரங்கமாக அறிவித்து எம்முடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்.

இது எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூரநோக்கு சிந்தனையின் வெற்றி” என, மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை உருவாக்குமானால், அப்போது, எமது மக்கள் தொடர்பாக முன்னெடுக்கக்கூடிய நிலவுரிமை திட்டங்கள் என்ன? என்பது பற்றிய எழுத்து மூலமான உள்ளக சமூக நீதி உடன்பாடு இதுவாகும். இது தேர்தல் ஒப்பந்தம் அல்ல. தேர்தல் ஒப்பந்தம், தேர்தல் வரும் போது உருவாகுமென்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய அளவில் நடந்துள்ள இந்நிகழ்வு பற்றி கேள்வி எழுப்பும், ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. கூட்டணி, அநுரகுமாரவின் என்.பி.பி. கூட்டணி, தரப்புகளுக்கு எமது இந்த சமூக நீதி உடன்பாடு விபரங்களை அனுப்பி வைக்க நாம் தயார். அவர்களது பதில் நிலைப்பாடுகள் என்ன என அவர்கள் எமக்கு அறிவித்தால் அவை பற்றியும் கலந்தாலோசிக்க நாம் தயார். ஜனாதிபதி ரணிலும், அநுரவும் தயாரா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது பற்றி மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது,

“இந்நாட்டில் வாழும் 15 இலட்சம் மலையக தமிழ் மக்கள் என்ற இன அடையாளத்துக்குள், சரிபாதி சனத்தொகை இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது, இந்த பெருந்தோட்ட மக்கள், சமூக பொருளாதார வளர்ச்சியில் இந்நாட்டிலேயே பின்தங்கியவர்கள்.

இதற்கு காரணம், மலைநாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே என்ற கவர்ச்சிகரமான பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இது வரலாற்றை திட்டமிட்டு மூடி மறைக்கும் சூழ்ச்சி. இந்த கண்ணாமூச்சி கவர்ச்சி கதையில் நாம் மயங்கி விடக்கூடாது. மலைநாட்டு அரசியல்வாதிகள் மீது பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றில் உண்மைகளும் உள்ளன. ஆனால், எமது மக்களின் குறை வளர்ச்சிக்கு முதல் மூன்று காரணங்கள், பேரினவாதம், இந்திய அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவை ஆகும்.

சுதந்திரம் பெற்றவுடன் எமது குடியுரிமை, வாக்குரிமைகளை பறித்து எமக்கு இன்று காணி, கல்வி, சுகாதாரம் ஆகிய உரிமைகள் முழுமையாக இல்லாமல், எம்மை பெருந்தோட்ட அமைப்புக்குள்ளே இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பது பேரினவாதம் ஆகும். எம்மை கேட்காமலே, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்தி, எம்மை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தியது இந்திய அரசு ஆகும். எம்மை இங்கே அழைத்து வந்து, எமது உழைப்பில் நன்கு சம்பாதித்து விட்டு, எம்மை அம்போ என விட்டு ஓடியது இங்கிலாந்து அரசு ஆகும். இந்த வரலாற்றால் ஏற்பட்டுள்ள தாழ்நிலைமைகளில் இருந்து வெளியே வருவது சுலபமான காரியம் அல்ல.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT