Thursday, May 16, 2024
Home » அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்: முதலாம் கட்டம் ஜனாதிபதியால் கையளிப்பு

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம்: முதலாம் கட்டம் ஜனாதிபதியால் கையளிப்பு

by sachintha
February 16, 2024 6:01 am 0 comment

 மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

 வட. மத்திய மாகாணத்தை வலுசக்தி மையமாக மாற்றுவதில் கவனம் – ஜனாதிபதி

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று (15) ஜனாதிபதியால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக சிறுநீரக நோயால் அவதியுறும் மதவச்சி, பதவிய, கெபித்திகொல்லாவ, ஹொரவபொத்தான, கஹட்டகஸ்திகிலிய பிரதேச மக்களுக்கு தூய குடிநீர் உரிமையை வழங்கும் நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 11,515 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டம், அநுராதபுரம் மஹா கனதராவ குளத்தை பிரதான

நீராதாரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் ரம்பேவ மற்றும் மதவச்சி பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 75 கிராம சேவைப் பிரிவுகளின் 25,000 குடும்பங்கள் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யவுள்ளன.

இந்நிகழ்வில் உயைாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது:

கடந்த ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.வடமத்திய மாகாணத்தை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

அரசாங்கத்திற்காகவோ எதிர்கட்சிக்காகவோ இல்லாது மக்களின் சுபீட்சமான வாழ்விற்காக ஒன்றிணையுமாறு மீண்டும் சகலருக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தப் பிரதேசங்களுக்கு நீர் வழங்குவதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். நாட்டில் இன்னும் அதிகமான வீடுகளுக்கு நீர் வழங்கப்பட வேண்டியுள்ளது. மலையகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். இப்பிரதேசங்களில் இன்று ஏற்பட்டுள்ள அபிவிருத்தி மலையகத்தில் இல்லை.

அந்தப் பிரச்சினைகளுக்கு நாம் விரைவில் தீர்வு காண வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இப்போது முன்னெடுத்து வருகிறார்.

அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டம் 2013 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மறுபுறம், விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் போது விவசாயத்திற்கு தேவையான நீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற சந்தேகம் சிலரிடையே எழுந்துள்ளது. அவ்வாறு நடக்காது. இது தொடர்பில் நாம் உரிய வகையில் கவனம் செலுத்தியுள்ளோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT