பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக 05 வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கமைய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தில் பெண்கள் மீது வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பாக சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவர்களை சிவில் உடையிலுள்ள பொலிஸார் கண்காணிப்பதுடன், தமது கமெராவின் உதவியுடன் அச்சம்பவங்களை சாட்சியமாக பதிவு செய்வர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை யாராவது ஒருவர் போலி முறைப்பாடு செய்வராயின், அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் போலி முறைப்பாட்டால் யாராவது பாதிக்கப்படுவாராயின், அது விசாரணையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் தமக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, இதுவரை 42 பேர் கைது செய்யப்பட்டனர்.