Wednesday, February 28, 2024
Home » சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்ட திருத்தங்களுக்கு யுனிசெப் நிறுவனம் திருப்தி

சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்ட திருத்தங்களுக்கு யுனிசெப் நிறுவனம் திருப்தி

by sachintha
February 9, 2024 6:46 am 0 comment

இலங்கையின் சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் (Children and Young Persons Ordinance-CYPO) நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 2024 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன. இது இலங்கை சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான முக்கியமானதொரு முன்னெடுப்பாகும்.

1939 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சிறுவர்களுடன் தொடர்புடைய நீதியை ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டவாக்கமாக இருந்து வருகின்ற இக்கட்டளைச் சட்டமானது, ஏற்கனவே 16 வயதிற்குப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தியதுடன் தற்போது இத்திருத்தத்தின் ஊடாக அவ் வயதெல்லை 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறுவர்கள் மற்றும் கட்டிளமைப் பருவத்தினர் மீது பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது பாதுகாவலர்கள் பிரயோகிக்கும் உடல் ரீதியான தண்டனைகளை நியாயப்படுத்தி அவர்களுக்கெதிரான சட்ட ஏற்பாடுகளுக்கு இடங்கொடுக்காத குறித்த கட்டளைச் சட்டத்தின் ஒரு உறுப்புரை அல்லது ஒரு பகுதி இத்திருத்தத்தினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இலங்கைச் சட்டங்களை சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வசே தரநியமங்களுடன், குறிப்பாக சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயத்துடன் சீரமைப்பதற்கு இத்திருத்தங்கள் பங்களிப்புச் செய்வது மாத்திரமன்றி, நாட்டில் சிறுவர்கள் மற்றும் கட்டிளமைப் பருவத்தினரின் தேவைகள் மற்றும் சவால்களுக்கு உரிய தீர்வுகளை வழங்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், ‘சிறுவர் உரிமைகள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் இந்நாட்டு சிறுவர் உரிமைகளுக்கான ஒரு மைல்கல்லாக உள்ளது. அது ஒவ்வொரு பிள்ளையினதும் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்தும். நீதி முறைமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், இலங்கையில் சகல சிறுவர்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பாடசாலை மற்றும் வீடு உள்ளடங்கலாக அனைத்து மட்டங்களிலும் சிறுவர்களுக்கெதிரான உடல் ரீதியான தண்டனையை முற்றாக தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பது இத்திருத்தத்தின் புரட்சிகரமான முன்னேற்றமாகும்’ என்று குறிப்பிட்டார்.

இத்திருத்தங்கள் சட்டத்திற்கு முரண்படும் சிறுவர்களை கையாளும் நடவடிக்கைகளில் புரட்சிகரமானதொரு நகர்வாக இருக்கும். ஏனெனில், இத்திருத்தங்களுக்கு முன்பு குற்றமிழைத்த 16-18 வயது சிறுவர்கள் வயது வந்தோரின் சிறைக்கூடங்களிலேயே வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பொருத்தமான புனர்வாழ்வுத் திட்டங்களோ அல்லது பராமரிப்பு நடவடிக்கைகளோ இருக்கவில்லை. என்றாலும், தற்போது அமுலுக்கு வந்திருக்கும் கட்டளைச் சட்டத்தின் திருத்தங்களின் விளைவாக இத்தகைய சிறுவர்கள் மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களங்களின் மேற்பார்வையின் கீழ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதுடன் இங்கு ஒழுக்காற்று அணுகுமுறையை விட புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படும்.

ஒரு பிள்ளையைத் தடுப்புக் காவலில் வைப்பது இறுதி முயற்சியாக இருக்க வேண்டுமென்றும் அது மிகவும் குறுகிய காலத்திற்கு மாத்திரம் இருக்க வேண்டுமென்றும் சிறுவர் உரிமைகளுக்கான சமவாயம் வலியுறுத்துகிறது. ஏனெனில், நிறுவனமயமாக்கல் பிள்ளையின் அபிவிருத்திக்கும் மீள் ஒருங்கிணைப்பதற்கும் தடையாக இருந்து வன்முறை மற்றும் வறுமைக்கு இட்டுச்செல்லும் என்றும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, இளம்பருவக் குற்றவாளிகளுக்கும் தடுப்புக்காவல் நடவடிக்கைகளுக்கும் பதிலாக மிகவும் வினைத்திறனுடைய சிறுவர்களுக்கு பாதுகாப்பான குடும்ப-மைய புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமைப்படுத்துமாறு யுனிசெப் நிறுவனம் நீதித்துறை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறைகளில் பணியாற்றும் கரிசனையாளர்களை கேட்டுக்கொள்கின்றது.

யுனிசெப் நீண்ட காலமாக உலகளாவிய சிறுவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் இலங்கையின் இத்திருத்தங்களிலும் அதன் ஆதரவு ஆழமாக வேரூன்றியுள்ளது. அந்த வகையில், சிறுவர்களுக்கான இலங்கையின் நீதித்துறை பற்றி யுனிசெப் நிறுவனம் 2023 இல் நடாத்திய ஒரு ஆய்வில் முக்கியமான தரவு இடைவெளிகளை அடையாளப்படுத்தியதுடன் சிறுவர்களுக்கான நீதித்துறைப் பாதுகாப்பின் பொருத்தப்பாடு மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்காக கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

எனவே, சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தில் செய்துள்ள திருத்தத்தில் இப்பரிந்துரைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது. பிள்ளையின் நலனை முன்னுரிமைப்படுத்தும் விதத்தில் நீதித்துறையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் மற்றும் இளையோர் கட்டளைச் சட்டத்தின் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானமானது சர்வதேச சட்டத்தின் கீழ் அதன் கடப்பாடுகளை பூர்த்திசெய்வதையும் நாட்டின் இளவயதினரின் நலன்களை முன்னுரிமைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT