காசா மீது நேற்றைய தினத்திலும் தொடர்ந்த இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு, போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை பரிசீலிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்த 92 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்தப் பகுதியின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் ரபாவில் இடம்பெயர்ந்தவர்களின் பாலர் பாடசாலை ஒன்றின் மீதும் இஸ்ரேல் குண்டு வீசி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவின் தெற்கு எல்லை நகரான ரபா மீதான இஸ்ரேலின் படையெடுப்புப் பற்றிய கவலை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. எகிப்து எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதி பாதுகாப்பு வலயம் என இஸ்ரேல் அறிவித்த நிலையில் கடும் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் ஏனைய இடங்களில் இருந்து மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் சூழலிலேயே இங்கு இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
“சிறுவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று குண்டு விழ ஆரம்பித்தது. எனது குழந்தைகள் மீது படுக்கையறை விழுந்தது. இறைவன் ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான் மூவர் உயிர் தப்பினார்கள்” என்று அஹமது பசம் அல் ஜமால் என்பவர் அழுதபடி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
200,000 மக்கள் தொகையை கொண்ட ரபா நகரில் தற்போது காசா மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
காசா இராணுவ நடவடிக்கை ரபா நகரை நெருங்கி இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லான்ட் கடந்த வியாழக்கிழமை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது தெற்கு நகரான கான் யூனிஸில் இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் காசா மக்கள் மேலும் தெற்காக ரபாவை நோக்கி இடம்பெயற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாரிஸில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடந்து முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை முன்மொழிவை செயற்படுத்துவதற்கு சர்வதேச மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் லெபனானில் உள்ள முன்னணி ஹமாஸ் அதிகாரியான ஒசாமா ஹம்தான், முன்மொழியப்பட்டுள்ள வரைவில் சில விபரங்கள் விடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
எமது நிலையை அறிவிப்பதற்கு ஹமாஸுக்கு மேலும் அவகாசம் தேவைப்படுகிறது. என்று கூறிய ஹம்தான், ‘அடிப்படையில், எமது மக்கள் படும் ஆக்கிரமிப்புக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார்.
ஹாஸை ஒழிப்பதாக சூளுரைத்திருக்கும் இஸ்ரேல் கிட்டத்தட்ட கடந்த நான்கு மாதங்களில் காசாவில் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக நடத்திய தாக்குதல்களில் 27,230 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.
இந்த போர் நிறுத்த முன்மொழிவை முன்னெடுக்கும் முயற்சியாக எதிர்வரும் நாட்களில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டோனியோ பிளிங்கன் ஐந்தாவது முறையாக மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரும் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
காசாவுக்கு மேலும் உதவிகள் செல்வது மற்றும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வகையில் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றையே இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்த ஒரு போர் நிறுத்தமும் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறுவதற்கு வழிவகுப்பதாக அமைய வேண்டும் என்று கட்டாரைத் தளமாகக் கொண்ட ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாத நிலை, இஸ்ரேலிய அரசுக்கு இஸ்ரேலுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
கடந்த சனிக்கிழமை இரவு டெல் அவிவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு உடன்பாடு ஒன்றுக்கு செல்வதற்கு கோரப்பட்டது. இஸ்ரேலின் ஏனைய பகுதிகளிலும் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.