Sunday, May 19, 2024
Home » காசாவுக்கான மனிதாபிமான நிதியை பெற நன்கொடை நாடுகளிடம் ஐ.நா மன்றாட்டம்

காசாவுக்கான மனிதாபிமான நிதியை பெற நன்கொடை நாடுகளிடம் ஐ.நா மன்றாட்டம்

போர் நிறுத்த திட்டத்தை பரிசீலிக்கிறது ஹமாஸ்

by Gayan Abeykoon
February 1, 2024 8:52 am 0 comment

 காசாவில் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடருவதோடு பலஸ்தீன போராளிகளுடனான மோதலும் உக்கிரம் அடைந்துள்ள சூழலில், பல நாடுகளும் நிதியை நிறுத்தி இருப்பதால் காசாவில் ‘மனிதாபிமான கட்டமைப்பு’ செயலிழக்கக் கூடும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.  

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரை மையப்படுத்தி அண்மைய வாரங்களில் மோதல் உக்கிரமடைந்திருப்பதோடு குண்டு மழையாக பெரும் பகுதி இடிபாடுகளாக மாறியுள்ளன. குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் அந்த நகரில் இருந்து மக்கள் வெளியேறி வருவதாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் விபரித்துள்ளார்.

“பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களுக்கு இடையே எந்த ஒரு படுக்கையும் இல்லாத நாசர் மருத்துவமனையை விட்டு நாம் வெளியேறினோம். எங்கே போவதென்று எமக்குத் தெரியாது” என்று இளம் பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

“நாம் குளிரில் இருக்கிறோம், நாம் எம்மை தற்காத்துக்கொள்ள வேண்டி உள்ளது. கூடாரங்கள் இல்லை மற்றும் உயிர்வாழ எதுவும் இல்லை” என்றும் அவர் கூறினார்.

மத்திய காசா நகரான டெயிர் அல் பலாஹ்வில் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் கடந்த செவ்வாயன்று நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் உள்ளுர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கான் யூனிஸ் நகரின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் சூடு நடத்தி வரும் இஸ்ரேலியப் படை அங்கு நேற்று போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

காசாவில் 24 மணி நேரத்தில் மேலும் 150 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 313 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 26,900 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 65,949 பேர் காயமடந்துள்ளனர்.

மறுபுறம் காசாவில் பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை தொடர்ந்து சந்தித்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் மேலும் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

87 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 30 வயது இஸ்ரேலிய வீரர் வடக்கு காசாவில் கடந்த செவ்வாயன்று கொல்லப்பட்டிருப்பதோடு 6646ஆவது ரோந்துப் படையின் 28 மற்றும் 43 வயதான வீரர்கள் அதே தினத்தில் தெற்கு காசாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் 218 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டு மேலும் 1,283 வீரர்கள் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போரினால் காசா மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்திற்கான நிதியை பிரதான நன்கொடை நாடுகள் மீண்டும் வழங்காவிட்டால் இந்த முற்றுகை பகுதியில் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடையும் என்று ஐ.நா அமைப்பு எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இந்த ஐ.நா நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகள் நிதி அளிப்பதை இடைநிறுத்தி உள்ளன.

ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டிருக்கும் பலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனத்தை வேறு எந்த நிறுவனத்தாலும் பதிலீடு செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று காசா உதவிகளுக்கான ஐ.நா இணைப்பாளர் சிக்ரிட் காக் குறிப்பிட்டார்.

உலக சுகாதார அமைப்பு, ஐ.நா மனித உரிமை அலுவலகம், யுனிசெப் மற்றும் உலக உணவுத் திட்டம் உட்பட பல ஐ.நா நிறுவனங்களின் தலைவர்களும் வெளியிட்ட அறிவிப்பில், பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவது “காசா மக்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தனர்.

நிதி இல்லாவிடின் பரந்த அளவான மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் விளைவுகளுடன் காசாவில் மனிதாபிமான கட்டமைப்பு செயலிழந்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் தொடக்கம் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்திற்கு 131 மில்லியன் டொலர்களை வழங்கி இருப்பதாக கூறியிருக்கும் அமெரிக்கா, இது அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தப் பேச்சு 

அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து மற்றும் கட்டார் அதிகாரிகள் அண்மையில் பாரிஸில் சந்தித்து பேசியதை அடுத்து போர் நிறுத்தத்திற்கான வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதோடு, அந்த முன்மொழிவு கிடைக்கப்பெற்றதை ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் (30) உறுதி செய்தது. இது தொடர்பில் ஆராய்ந்து தமது பதிலை அளிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது.

இந்த ஆரம்பக்கட்ட உடன்பாடு நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முன்மொழிவு மற்றும் ஹமாஸினால் மேற்கொள்ளப்பட்ட பதில் முன்மொழிவுகளின் கூறுகள் அடிப்படையிலேயே பாரிஸ் பேச்சுவார்த்தை கட்டமைக்கப்பட்டது என்று அல் தானி கூறினார்.

பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைவதற்கு நிரந்தர போர் நிறுத்தம் ஒரு முன்நிபந்தனை என்று முன்னர் கூறிய ஹமாஸ் இப்போது மற்ற விருப்பங்களை பரிசீலிக்க முன்வந்திருக்கலாம் என்று கட்டார் பிரதமர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு ஆயிரக்கணக்கான பலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்யவோ, காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்பினரை வெளியேற்றவோ கேட்டுக்கொள்ளப்படும் எவ்விதத் திட்டத்தையும் ஏற்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த வரைவில் ஆறு வார போர் நிறுத்தத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது என்று பெயர் குறிப்பிடாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆறு வார போர் நிறுத்தம் என்பது கடந்த நவம்பரில் எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை விடவும் நீண்டதாக அமையும். பல பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட கடந்த நவம்பரில் இடம்பெற்ற தற்காலிக போர் நிறுத்தம் ஒரு வாரம் மாத்திரமே நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT