Monday, May 20, 2024
Home » வெளிநாடுகளின் தேவைகளுக்காக ‘யுக்திய’ நடவடிக்கை நிறுத்தப்படாது

வெளிநாடுகளின் தேவைகளுக்காக ‘யுக்திய’ நடவடிக்கை நிறுத்தப்படாது

போதைப்பொருள் வர்த்தகர்களின் பணத்தில் வாழ்வோரே எதிர்ப்பு

by damith
January 29, 2024 7:15 am 0 comment

போதைப்பொருள் வர்த்தகர்களின் பணத்தில் தங்கிவாழும் தரப்பினரே, யுக்திய விசேட நடவடிக்கையை சீர்குலைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருடன் மேற்கொள்ளப்பட்ட விசேட செயலமர்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் சட்டங்களை முன்வைப்பது எமது நாட்டுக்கு பொருத்தமான வகையிலேயன்றி சர்வதேசத்துக்கு தேவையான வகையிலல்ல.

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் பகிர்ந்தளிக்கும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், எம்மிருவருக்கும் தொடர்ச்சியான தடைகள் பல்வேறு வகைகளிலும் ஏற்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு முகங்கொடுத்து வரும் நிலையிலேயே, மேற்படி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

சட்டத்தரணிகள் உள்ளிட்ட போதைப்பொருள் வர்த்தகர்களின் பணத்தில் தங்கிவாழும் தரப்பினர், இந்நடவடிக்கையை சீர்குலைப்பதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சமூகவலைத்தளங்கள் மூலம் பெரும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள், சில பிரதிநிதிகளுடன் இணைந்து சர்வதேசத்துக்கு அதுதொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள் கின்றன.

அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் சபை மூலம் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்த நடவடிக்கையை நிறுத்தவேண்டாம் என்றே வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது எமது நாடு. எமது நாட்டில் நாம் எமக்குத் தேவையான வகையிலேயே சட்டங்களை ஏற்படுத்துகின்றோம். அவ்வாறில்லாமல் சர்வதேசத்துக்குத் தேவையான வகையிலல்ல. நான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கும் வரை சர்வதேசத்திற்கு தேவையான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதில்லை.

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றவாளிகளின் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணிந்து நாம், இந்த வேலைத்திட்டத்தை நிறுத்தப்போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT