Tuesday, May 21, 2024
Home » கான் யூனிஸை சுற்றிவளைத்து இஸ்ரேல் படை கடும் தாக்குதல்: புதிய வெளியேற்ற உத்தரவு

கான் யூனிஸை சுற்றிவளைத்து இஸ்ரேல் படை கடும் தாக்குதல்: புதிய வெளியேற்ற உத்தரவு

ஒரு மாத போர் நிறுத்தத்திற்கு தீவிர பேச்சு

by Gayan Abeykoon
January 25, 2024 10:36 am 0 comment

காசாவில் கடும் இழப்பையும் எதிர்ப்பையும் சந்தித்து வரும் இஸ்ரேலியப் படை தெற்கின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸை சுற்றிவளைத்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.  

அரை மில்லியன் குடியிருப்பாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கான் யூஸின் ஒரு பகுதியில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டிருப்பதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசா மக்கள் பெரும் உணவு பாதுகாப்பற்ற நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்து, பாதுகாப்புச் சபையில் ஐ.நா தலைவர் புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையிலேயே காசா மக்களை மேலும் வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கான் யூனிஸ் நகரை சுற்றிவளைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ள நிலையில் அங்கு தரைவழி மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இதில் ஆல் நாசர் மற்றும் அல் அமல் ஆகிய பிரதான மருத்துவமனைகள் உள்ள சுமார் 513,000 மக்கள் வசிக்கும் கான் யூனிஸின் நான்கு சதுர கிலோமீற்றர் பகுதியில் உள்ள மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் கூறியது.

இஸ்ரேலின் இந்த உத்தரவு அபாயகரமானது என்று குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அலுவலகம், பலஸ்தீன மக்களை தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றும் இஸ்ரேலின் நோக்கம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

ஏற்கனவே காசா மக்கள்தொகையில் 90 வீதமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு பலரும் பல இடங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்தப் போர் முற்றுகையில் உள்ள காசாவில் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

“இஸ்ரேலிய நடவடிக்கையில் வான், தரை மற்றும் டாங்கிகளில் இருந்து எம்மீது குண்டுகள் வீசப்படும் அதேநேரம் எமக்கு உண்ணவோ அல்லது குடிக்கவோ ஒன்றுமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது” என்று அழிவைச் சந்தித்திருக்கும் காசா நகரில் இருந்து இடம்பெயர்ந்த உம் தஹுத் அல் கபர்னா குறிப்பிட்டுள்ளார்.

“எனது மருமகள் பலத்த காயத்திற்கு உள்ளாகி இருக்கிறாள்” என்று கூறிய அந்தப் பெண், “இது பெரும் அவலமாகும்.. அவர்களின் இதயத்தில் இரக்கத்தை கொண்டு தர வேண்டும்” என்றார்.

காசாவின் நிலைமை மோசமாக இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

“காசாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெரும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருப்பதோடு பஞ்சத்திற்கான அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது” என்று உலக உணவுத் திட்டத்தின் மத்திய கிழக்கிற்கான மூத்த பேச்சாளர் அபீர் எடபா எச்சரித்தார்.

மறுபுறம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் பேசிய ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், பலஸ்தீன நாட்டை உருவாக்கும் அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அது மோதலை காலவரையின்றி நீடிக்கச்செய்யும் என்றும் எச்சரித்தார்.

“பலஸ்தீன மக்கள் தமக்கு சொந்தமான முழுமையான சுதந்திர நாட்டை உருவாக்கும் உரிமை அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதோடு இரு நாட்டு தீர்வை மறுக்கும்் எந்த ஒரு தரப்பும் உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்.

மாறாக எந்த ஓர் உண்மையான சுதந்திரம், உரிமைகள் மற்றும் கெளரவம் இன்றி இத்தனை பெரும் எண்ணிக்கையான பலஸ்தீனர்களுடன் ஒரு நாட்டு தீர்வானது நினைத்துப்பார்க்க முடியாதது” என்று குட்டரஸ் கூறினார்.

பிராந்திய மோதல் ஒன்றுக்கான அச்சுறுத்தல் தற்போது உண்மையாகி வருவதாகவும்் ஒரு பரந்த போரின் இழப்புகளை கருத்தில்கொண்டு அனைத்துத் தரப்புகளும் பின்வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடரும் எதிர்ப்பு  

எனினும் காசாவில் குறிப்பாக கான் யூனிஸில் இடம்பெறும் தொடர் தாக்குதல்களால் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கான் யூனிஸில் உள்ள செம்பிறை சங்க தலைமையகத்தின் வடக்கு வாயிலை இலக்கு வைத்து இஸ்ரேலிய ஜெட்கள் நேற்று வீசிய குண்டுகளில் இடம்பெயர்ந்த மூவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமாக போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 25,500ஐ தாண்டியுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகமாக உள்ளனர்.

இஸ்ரேலிய துருப்புகள் தனது போர் நடவடிக்கையை தெற்கை மையப்படுத்தி முன்னெடுத்திருந்தபோதும் வடக்கு காசாவில் அது தொடர்ந்து பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத அளவு 24 துருப்புகளை இஸ்ரேல் இழந்தது.

இது தொடர்பில் அமெரிக்க போர் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று வெயிட்டிருக்கு அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “காசா நகரில் வடமேற்கில் இஸ்ரேலிய படைகளை இலக்கு வைத்து ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் தெர்மோபரிக் ரொக்கெட்டுகள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். செய்தூனின் தெற்கில் மூன்று ஆளில்லா விமானங்களை தமது போராளிகள் கைப்பற்றியதாக ஹமாஸ் கூறியிருப்பதோடு ஜூஹோர் அல்திக் பகுதியில் இஸ்ரேலிய வாகனங்களை இலக்கு வைத்து குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.”

பலஸ்தீன போராளிகள் கான் யூனிஸ் நகரிலும் இஸ்ரேலிய தரைப்படைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.

போர் நிறுத்தம் 

இதேவேளை பலஸ்தீன கைதிகளுக்கான இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாற்றும் ஒரு மாதம் நீடிக்கும் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பரந்த அளவில் இணக்கம் எட்டப்பட்டிருப்பதாகவும், ஆனால் காசாவில் போரை நிரந்தரமாக நிறுத்துவது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே முரண்பாடு நீடிப்பதாகவும் இது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்காக கட்டார், எகிப்துடன் அமெரிக்காவும் அண்மைய வாரங்களில் தீவிரம் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிய சுற்று இராஜதந்திர முயற்சிகள் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு ஹமாஸ் முதலில் பல மாத போர் நிறுத்தத்திற்கு பரிந்துரைத்த பின், ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து ஆரம்ப போர் நிறுத்த காலம் 30 நாட்களுக்கு குறைந்திருப்பதாக இந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான எதிர்கால நிபந்தனைகளை முன்வைக்கும் வரை ஹமாஸ் இந்தத் திட்டத்திற்கு மறுப்பை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோவை சென்றடைந்த ஹமாஸ் தூதுக்குழு ஒன்று புதிய போர் நிறுத்தம் குறித்து எகிப்து உளவுப் பிரிவு தலைவரை சந்தித்து பேசி இருப்பதாக பலஸ்தீன வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தத் திட்டத்திற்கான பேச்சுவார்த்தை திறந்தே இருப்பதாகவும் இன்னும் உடன்பாடு ஒன்றுக்கு வரவில்லை என்றும் ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதில் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸின் ஆறு மூத்த தலைவர்களை காசாவில் இருந்து வெளியேற்ற இஸ்ரேல் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்பட்டபோதும் அதனை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும் மூன்று மாதங்களை தாண்டி நீடிக்கும் இந்தப் போரினால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்து, தொடர்ந்தும் பணயக்கைதிகள் ஹமாஸ் பிடியில் இருக்கும் சூழலில் இஸ்ரேல் அரசு இஸ்ரேலுக்குள்ளும் சர்வதேச அளவிலும் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிராந்திய மோதல் 

இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளை இலக்கு வைத்து அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ரொக்கெட் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டு சில நாட்களிலேயே இந்த தாக்குதல் இடபெற்றுள்ளது.

மறுபுறம் தெற்கு செங்கடலை குறிவைத்து எறிவதற்கு தயாராக இருந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இலக்கு வைத்து யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT