Monday, May 20, 2024
Home » உலக முஸ்லிம்களுக்கு சேவையாற்றும் சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சு

உலக முஸ்லிம்களுக்கு சேவையாற்றும் சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சு

by Gayan Abeykoon
January 25, 2024 11:14 am 0 comment

ன்று உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சவூதி அரேபியா இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் சேவை செய்வதில் முன்னிலை வகிக்கின்றது. அதற்கு மிகப்பெரிய ஆதாரம் அந்நாடு இஸ்லாமிய விவகாரங்களுக்காக பல்வேறு தனித்தனி அமைச்சுக்களை உருவாக்கி வைத்துள்ளதாகும். அந்த வகையில் சர்வதேச மட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்கும் சேவையை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சே இஸ்லாமிய விவகார மற்றும் வக்பு வாரிய அமைச்சாகும்.  

1418 (1998) முஹர்ரம் பிறை 20 இல் இஸ்லாமிய விவகார மற்றும் பிரசாரம் வழிகாட்டலுக்கான அமைச்சு உருவாக்கப்பட்டது. பின்னர் அது 1438 இல் இஸ்லாமிய விவகார மற்றும் வக்பு வாரிய அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்றுவரை உள்நாட்டிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பல்வேறு நாடுகளிலும் மாபெரும் சேவைகளை செய்து வருகின்றது. சவூதியின் இஸ்லாமிய விவகார மற்றும் வக்பு வாரிய அமைச்சு உலகளாவிய முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. புனித அல்குர்ஆனுக்கும் ஹதீஸ் கலைக்கும் பணி செய்தல், அல்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிழ்களையும் தப்சீர் தஜ்வீத் திலாவத், போன்ற கலைகளை கற்றறிந்த அறிஞர்களையும், ஹதீஸ் கலையினை துறைபோகக் கற்ற அறிஞர்களையும் உருவாக்குதல் போன்றனவும் பணிகளாகும்.

அல்குர்ஆனுக்கு சேவை செய்வதற்காகவே புனித மதீனா நகரில் மன்னர் மலிக் பஹத் அல்குர்ஆன் அச்சிடுவதற்கான வளாகத்தை இவ்வமைச்சு நிர்மாணித்து பரிபாலித்து வருகின்றது. இங்கிருந்து வருடம் ஒன்றுக்கு பல மில்லியன் அல்குர்ஆன் பிரதிகளும் தப்ஸீர் தஜ்வீத் ஏழு வகை கிராத் முறை நூல்களும் ஹதீஸ் கலையோடு தொடர்புபட்ட பல்வேறு நூல்களும் அச்சிடப்பட்டு உலகின் முஸ்லிம்கள் வாழும் அனைத்துப் பகுதிகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

அவ்வாறே நாட்டின் பெரும்பாலான மஸ்ஜிதுகளில் அல்குர்ஆனை மனனமிடுவதற்கான ஹல்காக்களை- வகுப்புகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றது. தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்களுக்கிடையில் தேசகய, சர்வதேச மட்டத்தில் வருடாந்தம் பல்வேறு அல்குர்ஆன் மனனப் போட்டிகளை நடத்தி வருகின்றது. இப்போட்டிகளில் பல நாடுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பல்லாயிரம் ஹாபிர்களை அரச செலவில் புனித மக்கா நகருக்கு அழைத்துவந்து அவர்களைக்கான சகல வசதிகளையும் உயர்தரத்தில் வழங்குவதோடு இலவசமாக புனித உம்ராவை நிறைவேற்றும் வாய்ப்பையும் அளிப்பதுடன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு பெருந்தொகை பணப்பரிசில்களையும் வழங்கி வருகின்றது.

இலங்கையிலிருந்தும் இன்றுவரை சுமார் நூறு காரிகள் ஹாபிழ்கள் இவ்வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.

சவுதி அரேபியாவின் பல்வேறு நகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்களில் ஆயிரத்தை நெருங்குமளவு இஸ்லாமிய அழைப்பு மையங்களை அமைச்சு நிறுவியுள்ளது. அவற்றின் பெரும்பாலான செலவுகளையும் இவ்வமைச்சே பொறுப்பேற்றுள்ளது. இன்றுவரை இந்த இஸ்லாமிய அழைப்பு மையங்களில் எமது நாட்டைச் சேர்ந்த பல்வேறு உலமாக்கள் கடமையாற்றுகின்றனர். இந்நிலையங்கள் ஊடாக வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின் நற்தூதை சிறப்பான முறையில் பெறுகின்றனர்.

இஸ்லாமிய சன்மார்க்கத்தை பல்வேறு முஸ்லிம் நாடுகளிலுள்ள கல்லூரிகளில் கற்பிப்பதற்காக உலகின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான கல்லூரிகளுக்கு அந்நாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட உலமாக்களை நியமனம் செய்து அவர்களுக்கான செலவுகளையும் அமைச்சு வழங்கி வருகின்றது.

சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் மற்றுமொரு சேவை யாதெனில் உள்நாட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஸ்ஜிதுகளை பரிபாலித்து அவற்றில் பணி புரியும் இமாம், முஅஸ்ஸின் மற்றும் ஊழியர்களுக்கு அரச சம்பளத்தை பெற்று கொடுக்கிறது. பள்ளிவாசலோடு தொடர்புபட்ட அனைத்து விஸ்தரிப்பு திட்டங்களுக்கும் அமைச்சு நிதியுதவியளிக்கின்றது. அவ்வாறே நாட்டுக்கு வெளியே முஸ்லிம் முஸ்லிமல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரம் மஸ்ஜிதுகளை நிர்மாணிக்க நிதியுதவி செய்துள்ளது.

சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை அந்நாடு உருவாகுவதற்கு நீண்ட காலங்களுக்கு முன்பிருந்தே ஸஹாபாக்கள், தாபியீன்களின் காலத்திலிருந்தே செல்வந்தர்கள் தனது பெறுமதிமிக்க சொத்துக்களை இஸ்லாத்தின் நலனுக்காக வக்பு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்வாறாக செய்யப்பட்ட மஸ்ஜிதுகள், பாடசாலைகள், வீடு, கடைகள், நிலபுலன்கள், வயல்நிலங்கள் தோட்டங்கள் போன்ற ஏராளமான சொத்துக்கள் அந்நாட்டிலுள்ளன.

இவற்றுக்குப் பொறுப்பான தற்போதைய அமைச்சராக அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஷைக் சிறப்பாக அமைச்சை வழிநடத்திச் செல்கிறார்.

மெளலவி
ஏ.ஜி.எம். ஜெலீல்…
மதனி, பகுதித் தலைவர், மஃஹதுஸ் ஸுன்னா
அறபுக் கல்லூரி, காத்தான்குடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT