Tuesday, May 14, 2024
Home » கடந்த மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய விசேட சுற்றிவளைப்புகளால்

கடந்த மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய விசேட சுற்றிவளைப்புகளால்

by sachintha
January 19, 2024 6:44 am 0 comment

குற்றச்செயல்கள் 17 வீதம் குறைவு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பொலிஸ் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட யுக்திய நடவடிக்கையின் காரணமாக கடந்த மாதத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து திணைக்களங்களின் வகிபாகம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு துல்லியமான புரிதலை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் பத்தரமுல்ல சுஹுருபாவிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (18) நடைபெற்றது.

அமைச்சர் டிரான்அலஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது அமைச்சின் கீழுள்ள துறைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றது. இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும்.

கடவுச்சீட்டு பெறக்கூடிய 51 இடங்கள் இதுவரை நாடளாவிய ரீதியில் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் இடங்களின் எண்ணிக்கையை 335 ஆக உயர்த்துவதே எங்கள் நோக்கம். தற்போது பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படும் அடையாள அட்டை வழங்கும் செயற்பாடுகளை போன்று கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் திறனையும் விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

ஆபரேஷன் யுக்திய வெறும் ஊடக நிகழ்ச்சியா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுவரை எந்த ஒரு பெரிய, அங்கீகரிக்கப்பட்ட ஊடகமும் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக பணத்தை நம்பியிருக்கும் ஒரு சிலரே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இந்நடவடிக்கைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கும் வரையில் எனக்கு இது பற்றிய முழுமையான புரிதல் இருக்கவில்லை. ஆனால் கிராமம், நகரம் என்ற பேதமின்றி நாடளாவிய ரீதியில் உள்ள சாதாரண மக்களிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

பாதாள உலகத்தினாலும் போதைப்பொருள் கடத்தலினாலும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளில் சுற்றிவளைப்புகளை நடத்துவதில்லை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இந்த நடவடிக்கை மூலம் பாகுபாடின்றி கடத்தலில் ஈடுபடும் பெரிய மனிதர்களை கைது செய்வதே எங்கள் நோக்கம்.

எவ்வளவுதான் பொய்ப் பிரசாரம் செய்தாலும் அதைக் கருத்தில் கொள்வதில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் வெகு சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான 90% விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக நான் தெரிவித்தேன். அதன் பிறகு, ஒரு செய்தியாளர் சந்திப்பில், பேராயர் உட்பட சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நான் இந்த அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுவரை பொலிஸாரின் 90 வீதமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக நான் பிரகடனப்படுத்துகின்றேன். ஆனால் விசாரணையில் நாம் காணாத விஷயங்கள் இருக்கலாம். அவருக்கும் மற்றவர்களுக்கும் அத்தகைய தகவல்கள் இருக்கலாம். எனவே, பேராயர் மற்றும் கத்தோலிக்க திருச்சபை எங்களுடன் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அவதானித்து அதில் ஈடுபடுமாறும், அதன் பின்னர் அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி மேலதிகத் தகவல்கள் தெரிந்தால் ஒன்றிணைந்து ஆராய்ந்து தீர்வு காண உதவுமாறும் அழைப்பு விடுத்தேன். என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT