Friday, May 3, 2024
Home » ஒரு போர்க்குரல் தமிழ்ச்செல்வனின் எழுத்துகள்

ஒரு போர்க்குரல் தமிழ்ச்செல்வனின் எழுத்துகள்

by gayan
January 14, 2024 6:04 am 0 comment

“ஊடகம், அரசியல், சூழலியல், சமூகச் செயற்பாடு, கலை, இலக்கியம், பண்பாடு, தனி வாழ்க்கை எல்லாம் ஒரு வட்டமாக இணைந்தவை. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவை. அப்படிப் பிரித்தால் அதனால் அனைத்திலும் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக சூழலியலை மிக விரிந்த – ஆழமான நோக்கில் பார்க்கிறார் ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன். அரசியற் சூழல், ஊடகச் சூழல், பண்பாட்டுச் சூழல், சமூகச் சூழல் என அனைத்துத் தளங்களும் சீராக இருக்க வேண்டும். அல்லது அவை சீராக்கப்பட வேண்டும்” என்ற நிலைப்பாட்டோடு இயங்கிக் கொண்டிருப்பவர் தமிழ்ச்செல்வன்.

இத்தகைய நிலைப்பாட்டோடு இன்றைய ஈழத்தமிழ்ச் சூழலில் ஒருவர் இயங்குவதென்பது மிகச் சவாலானது.

மக்கள் விரோத, சமூக விரோத, தேச விரோத, உலக விரோதச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் சக்திகளுக்கு எதிராகத் தமிழ்ச்செல்வனைப் போன்ற நிலைப்பாட்டை எடுத்து இயங்குவது மிகக் கடினம். வலுவான அமைப்பின் பலமின்றித் தனித்து இயங்குவதானால் அதற்கு மிகுந்த தன்னம்பிக்கையும் உறுதியும் வேண்டும். இல்லையென்றால் தாக்குப்பிடிக்கவே முடியாது.

சில அங்கீகாரங்களும் விருதுகளும் (வட மாகாணத்தின் சிறந்த புகைப்படத்துக்கான இளங்கலைஞர் விருது, இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் – பத்திரிகை ஸ்தாபனம் வழங்கிய விருது (2018), காவேரிக்கலாமன்றம் – யாழ் பெட்டகம் இணைந்து வழங்கிய சிறந்த சூழலியாளர் விருது) அவருக்குக் கிடைத்துள்ளன.

2004 இல் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்த தமிழ்ச்செல்வன், சூழற்பாதுகாப்பு, சமூகப் பிரச்சினைகள், மக்கள் நலன் பற்றி கவனம் கொள்ளத்தக்கதாக எழுதினார். யுத்த முடிவுக்குப் பின்னர் இதை மேலும் வலுவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இன்று தமிழ்ச்செல்வனுடைய எழுத்துக்கு இருக்கின்ற வலு அவர் இருக்கின்ற வன்னிச் சூழலில் மிக அதிகமாகும். இதற்குக் காரணம், அவருடைய அரசியற் பார்வையும் வரலாற்று நோக்குமாகும். யுத்த முடிவுக்குப் பின்னரான (2009 க்குப் பிறகான) உள்ளுர் மற்றும் உலகச் சூழலை தமிழ்ச்செல்வன் நிதானமாகப் புரிந்துள்ளார். இதனால், தேவையற்ற மயக்கங்களும் அதீத கற்பனைகளும் அவரிடமில்லை.

தன்னுடைய உறுதியான செயற்பாட்டின் வழியே தனக்கென ஒரு அடையாளத்தையும் முன்மாதிரியையும் உருவாக்கியுள்ளார் தமிழ்ச்செல்வன். அதுதான் தமிழ்ச்செல்வனின் சிறப்பு. இதற்குப் பிரதான காரணம், அவரிடம் தன்லாபங்களுக்கப்பாலான பாசாங்கற்ற சமூகப் பற்றுள்ளதாகும்.

தன்லாபங்களுக்காகச் சமரசங்களைச் செய்து கொள்ள முயற்சிப்பதில்லை. அப்படிச் செய்வது சிலருக்குத் தந்திரோபாயமான வழிமுறையாகப் படலாம். ஊடவியலாளர்களுக்கிருக்க வேண்டிய – அவர்கள் பேண வேண்டிய பன்முக ஈடுபாடும் அறிவும் தமிழ்ச்செல்வனிடமுள்ளன.

இலக்கிய வாசிப்பு, பன்முக அடிப்படையிலான வரலாற்றுத் தேடல், மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், ஓவியம், ஒளிப்படம், சினிமா போன்றவற்றில் உள்ள ஈடுபாடு இதில் முதன்மையானது. இந்த ஈடுபாட்டின் நிமித்தமாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகம், கொழும்பு அஎன இவற்றுக்கான பயணங்களைச் செய்திருக்கிறார். கிளிநொச்சியில் இயங்கும் ‘எழுத்தாளர் – வாசகர் வட்டம்’, ‘திரைப்பட வட்டம்’, ‘மக்கள் சிந்தனைக் களம்’, ‘ஊடகவியலாளர் அமையம்’ போன்றவற்றில் தமிழ்ச்செல்வன் முதன்மைச செயற்பாட்டாளர். இந்த நூல் வெளிவரும்போது அவர் சென்னை புத்தகக் காட்சியில் நிற்பார்.

தமிழ்ச்செல்வனுடைய திறனுக்கும் அடையாளத்துக்கும் சான்றாக இந்தச் சூழலியற் கட்டுரைகள் உள்ளன. ஒரு களச் செயற்பாடாக சூழலியல் நெருக்கடிப் பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று, விபரங்களைத் திரட்டி, ஒளிப்படங்களை எடுத்து ஆவணமாக்கப்பட்டவை இவை.

சூழலைக் கேடாக்குவதன் மூலம் நம்வாழ்கையும் நம்முடைய வாழ்க்கைச் சூழலையும் ஏன் உலகத்தையும் நாசமாக்குகிறோம் என்று எப்படித்தான் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்வோர் மிகக் குறைவு.

இதைப்போல வெவ்வேறு துறைகளைப் பற்றியும் தமிழ்ச்செல்வனுடைய கட்டுரைகள் உள்ளன. அவையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாக்கம் பெற வேண்டும். இவையெல்லாம் எழுத்தோடு, புத்தகத்தோடு அடங்கி விடாமல், அறிவின் விளைவுகளாகும் என்ற புரிதலோடு நம்முடைய சூழலில் உரையாடல்களாகத் தொடர வேண்டும். அது அவசியமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT