Home » பாரம்பரிய கலைகளோடு விமரிசையாக நடைபெற்ற அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா

பாரம்பரிய கலைகளோடு விமரிசையாக நடைபெற்ற அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா

by sachintha
January 12, 2024 2:40 pm 0 comment

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட செயலகம் தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு என்பன மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் அட்டாளைச்சேனை தனியார் மண்டபத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததோடு, கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டார்.

விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம். அன்ஸார், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, அம்பாறை மாவட்ட உதவி செயலாளர் டப்ளியு.வி. செனவிரத்ன, கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ், பிரதேச செயலகங்களின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், சிரேஷ்ட கலைஞர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் போது பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 14 கலைஞர்கள் ‘சுவதம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகள் எல்லோரையும் கவரும் வகையில் இங்கு அரங்கேற்றப்பட்டதோடு, அம்பாறை மாவட்டத்தில் கலாசார நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைஞர்கள் சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியில், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வேலைத்திட்டங்களுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றும் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலாளரினால் விசேட பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டதுடன், மேலதிக மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து நினைவு விருது வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.

ஏ.எல்.எம். ஷினாஸ்

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT