Monday, May 20, 2024
Home » 2023-2025 தேசிய செயல் திட்டம் பெப்ரவரியில் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும்

2023-2025 தேசிய செயல் திட்டம் பெப்ரவரியில் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும்

by Rizwan Segu Mohideen
January 11, 2024 3:34 pm 0 comment

இலங்கையின் மூன்றாவது (2023-2025) தேசிய செயல் திட்டத்தை உருவாக்கும் பணிகளுக்காக திறந்த அரசக் கூட்டமைப்பின் சிவில் அமைப்பு பங்குதாரர்களின் செயலமர்வு கொழும்பு ரோணுகா ஹோட்டலில் நேற்று (10) நடைபெற்றது.

அரசியல் சவால்கள், கொவிட் – பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகம், டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் மற்றும் சர்வோதய அமைப்பு ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளன.

“திறந்த அரசக் கூட்டமைப்பு” என்பது அரச மற்றும் சிவில் சமூக மற்றும் பிரஜைகளின் மத்தியில் வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் திறந்த அரச கொள்கையை செயற்படுத்துவதை நோக்கமாக கொண்ட கூட்டு முயற்சியாகும்.

2011ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படட திறந்த அரச கூட்டமைப்பு வேலைத்திட்டத்துடன் இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளும் 104 உள்ளூராட்சி அமைப்புகளும் மற்றும் ஆயிரக் கணக்கிலான சிவில் அமைப்புக்களும் இணைந்துள்ளன.

திறந்த, ஒத்துழைப்புடன் கூடிய மற்றும் பொறுப்புக்கூறும் அரச நிர்வாகம் ஒன்றை பலப்படுத்துவதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வகையில், திறந்த அரச வேலைத்திட்டத்தின் இணை படைப்பாளிகள் என்ற வகையில் இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் அதற்குரிய யோசனைகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கமைய ஜனாதிபதி அலுவலகத்தினால் தொழில்நுட்ப முறை மூலம் மேற்கொள்ளப்படும் மக்கள் கருத்துக்கணிப்பில் சேகரிக்கப்பட்ட யோசனைகள், டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் மற்றும் சர்வோதய அமைப்பு ஆகியவற்றினால் சிவில் அமைப்புக்களிடத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மையப்படுத்தி மேற்படி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திறந்த அரசாங்கக் கூட்டமைப்பின் அடிப்படை எண்ணக்கருவான, பங்கேற்பு மற்றும் இணை படைப்பு என்பவற்றை பின்பற்றி, 3ஆவது தேசிய செயல் திட்டத்திற்கான கடமைகள் மற்றும் அர்ப்பணிப்புகள் அடையாளம் காணப்பட்டன.

அதன்படி ஊழல் எதிர்ப்பு, மக்கள் சேவைகளை பலப்படுத்தல், பொது சொத்துக்களை மிகவும் பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்தல், வேலைத்திட்டங்களை பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்தல், பல்வேறுபட்ட தரப்பினருக்கும் பாதுகாப்பாக சூழலொன்றை உருவாக்குதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த திறந்த அரச கூட்டமைப்பின் தேசிய மத்தியஸ்த அதிகாரியும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான சந்திமா விக்ரமசிங்க, இந்த செயலமர்வில் முன்மொழியப்பட்ட கருத்துக்களை மீளாய்வுச் செய்து, அரச மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு இடையிலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யவிருப்பதாக தெரிவித்தார். அதற்கமைய தயாரிக்கப்படும் 3 ஆவது தேசிய செயல்திட்டத்தினை பெப்ரவரி மாதமளவில் அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், அரச மற்றும் சிவில் சமூக பங்குதாரர்களின் இணக்கப்பாட்டுடன் திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT