Tuesday, May 14, 2024
Home » பில்கிஸ் பானு பாலியல் வன்முறை வழக்கு; 11 பேரின் விடுதலை உச்ச நீதிமன்றினால் இரத்து

பில்கிஸ் பானு பாலியல் வன்முறை வழக்கு; 11 பேரின் விடுதலை உச்ச நீதிமன்றினால் இரத்து

- குஜராத் அரசுக்கு எவ்வித முடிவையும் எடுக்க முடியாது என அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
January 10, 2024 2:18 pm 0 comment

பில்கிஸ் பானு பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை இரத்துச் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் அரசுக்கு தண்டனை விதிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ அதிகாரம் இல்லை. இந்த வழக்கில் முடிவெடுக்க மகாராஷ்டிரா அரசே அதிக தகுதி வாய்ந்தது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்முறை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு குஜராத்தில் உள்ள கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

குஜராத் அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் ஜஸ்வந்த், கோவிந்த், ஷைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, விபின் சந்திர ஜோஷி, கேஷர்பாய் வோஹானியா, பிரதீப் மோத்வாடியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்த்னா ஆகியோர் கோத்ரா சப் சிறையில் இருந்து ஓகஸ்ட் 15, 2022 அன்று விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று (திங்கள் கிழமை), உச்ச நீதிமன்றம் இந்த 11 குற்றவாளிகளின் தண்டனையை மன்னிப்பதற்கான குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து, இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு உத்தரவிட்டது.

குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான மனுவை பரிசீலிப்பது குஜராத் அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும், அந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற மாநிலமான மகாராஷ்டிராவில் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்றும், குற்றம் நடைபெற்ற குஜராத் மாநில அரசு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான மனுவை பரிசீலிப்பது குஜராத் அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குஜராத் அரசு மீது எழுந்துள்ள கேள்வி
திங்கள்கிழமை வெளியான தீர்ப்பில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 11 குற்றவாளிகளின் தண்டனையை ரத்து செய்வதற்கான கோரிக்கை மனுவை பரிசீலிக்க மகாராஷ்டிரா அரசுதான் பொருத்தமான அரசு என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இதற்குக் காரணம், ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, ஏழு குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதித்து, பின்னர் மும்பை உயர்நீதிமன்றம் அவர்களின் தண்டனையை குறைத்தது. இந்த இரண்டு முடிவுகளும் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டன.

15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகினார். மேலும் 13 மே 2022 அன்று, உச்ச நீதிமன்றம் நிவாரணம் அளிப்பது குறித்து ஆராய குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு, குஜராத் அரசு ஒரு குழுவை உருவாக்கியது. இந்த குழு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் தண்டனையை மன்னிக்க ஆதரவாக ஒருமனதாக முடிவெடுத்து அவர்களை விடுவிக்க பரிந்துரைத்தது.

இறுதியாக, ஓகஸ்ட் 15, 2022 அன்று, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 11 குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

திங்களன்று, உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளின் மன்னிப்பு மற்றும் விடுதலையை உறுதி செய்வதில், குஜராத் அரசு 11 குற்றவாளிகளில் ஒருவருக்கு (ராதேஷ்யாம் ஷா) ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியது. அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தோல்வியடைந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தை ரகசியமாக அணுகி சிறை தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரினார். நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து, உண்மைகள் எவற்றையும் முன்வைக்காமல் தண்டனையை ரத்து செய்யக் கோரினார்.

உண்மைகளை மறைத்தது தொடர்பாக இந்த குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்கியபோது, ​​மீதமுள்ள 10 குற்றவாளிகளும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு குஜராத் அரசு தங்களுக்கு வழங்கிய அதே நிவாரணத்தை கோரினர் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி, குஜராத் அரசின் இந்த நடவடிக்கை சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பில்கிஸ் பானு கடுமையான சட்டப் போராட்டங்களை நடத்திவந்தார்.

இதையடுத்து பில்கிஸ் பானுவுக்கு கொலை மிரட்டல் வரத் தொடங்கியது. மிரட்டல்களால் இரண்டு ஆண்டுகளில் இருபது முறை வீடு மாற்ற வேண்டியதாயிற்று.

பில்கிஸ் நீண்ட காலமாக நீதிக்காக போராடினார். தனக்கு மிரட்டல் வந்ததாலும், தனக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தாலும் தனது வழக்கை குஜராத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதன் பின் இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துப் பேசிய பில்கிஸ் பானு, “ஒன்றரை ஆண்டுகளில் முதல்முறையாக சிரிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள AIMIM எம்பி அசாதுதீன் ஒவைசி, பில்கிஸ் பானுவின் பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலைக்கு பாஜக மட்டுமே காரணம் என்று கூறினார்.

பில்கிஸ் பானு தனது சொந்த நீதிக்காக போராடினார், அவரை சித்திரவதை செய்த வன்முறையாளர்களை பாஜக மன்னித்துள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“பாஜக மக்கள், வன்முறையாளர்கள் கழுத்தில் மாலை போடுகிறார்கள்” என்று ஓவைசி கூறினார். பெண்கள் பற்றி பாஜக விவாதிக்கும் தலைப்புகள் மூலம் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த வன்முறையாளர்கள் குஜராத் அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT