Monday, May 20, 2024
Home » தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தது போல் தரமற்ற அரிசி இறக்குமதிக்கு முயற்சி

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தது போல் தரமற்ற அரிசி இறக்குமதிக்கு முயற்சி

- இரசாயனங்கள் உள்ளதாக ஐ.ம.ச. பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

by Rizwan Segu Mohideen
January 5, 2024 6:28 pm 0 comment

வெளிநாடுகளில் இருந்து அரிசி மற்றும் சோளத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கீரி சம்பா அரிசிக்கு இணையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இந்த அரிசி ஒரு வகை நச்சுத் தன்மை வாய்ந்த அரிசி என்றும் இந்த அரிசியில் கட்மியம், ஈயம் மற்றும் இரச கூறுகள் அடங்கியுள்ளதாகவும், தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தது போன்று தரமற்ற அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

சீனி வரி குறைக்கப்பட்டு சீனி இறக்குமதி செய்யப்பட்டதைப் போன்று அரசாங்கத்தின் நட்பு வட்டார நண்பர் கைக்கூலிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்காக அரிசிக்கு அறவிடப்படும் 68 ரூபா வரியை ஒரு ரூபாவாகக் குறைத்து அரிசியை இறக்குமதி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,இதன் காரணமாக நாட்டின் தேசிய நெற்செய்கையாளர் மிகவும் அநாதரவான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு பருவங்களாக விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை.கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அமுல்படுத்தப்பட்ட சேதன உரக் கொள்கையால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். இதற்கிடையில், தற்போதைய அரசாங்கம் நெற்பயிர்ச் செய்கையில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளுக்கு 18.5 வீத VAT ஐ விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை,பல இலட்சம் டொன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நெல் விளைச்சல் நன்றாக இருக்கும் இந்நேரத்திலயே,வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான டொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனால் இந்த பருவத்தில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.அரிசி இறக்குமதியால், அரசாங்கத்திற்கு உதவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் கோடீஸ்வரர்களாக மாறுகின்றனர்.உரங்களுக்கு அரசாங்கம் வரி விதிக்கும் அதே வேளையில் அரிசி வரியை குறைத்து வருகிறது.தேசிய விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் பொருட்டே இதுவரை அரிசிக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது.

சோளத்துக்கு விதிக்கப்பட்ட வரியையும் அரசாங்கம் குறைத்துள்ளது. மொனராகலை, அனுராதபுரம் மாவட்டங்களில் இருந்து சோள அறுவடை கிடைத்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து 2 இலட்சம் டொன் சோளத்தை இறக்குமதி நட்பு வட்டார நண்பர்களுக்கு செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.நாட்டின் விவசாயத்தை அழிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

கோட்டாபாயவும் ஏனைய முட்டாள் ஆட்சியாளர்களும் சேதன உரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஒரு ஏக்கரில் இருந்து 120 பூசல் நெல் பெற்று வந்தனர்.சேதன உரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு,ஒரு ஏக்கருக்கு அறுவடை செய்யப்பட்ட நெல் 50 பூசல்களாகக் குறைந்தது.இந்த முட்டாள்தனமான கொள்கைகளால் விவசாயி ஆதரவற்றுப் போயுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார; ஐக்கிய மக்கள் சக்தியினால் நாட்டில் வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன என்றும்,இனவாத,மத வாதமற்ற,ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத சிறந்த குழவினரை ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பல்வேறு கட்சிகளுடனும் குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.ஒரு குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியில் நேரடியாக இணைந்து கொள்கின்றனர்.மற்றொரு குழு ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்கின்றனர்.

நாட்டில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் கூட்டணிகளாலயே வெற்றி பெற்றுள்ளன.இறுதியாக 1977 இல் தான் தனிக்கட்சியாக வெற்றி பெற்றது. இதன் பிறகு அமைந்த அரசாங்கங்கள் கூட்டணியில்தான் வெற்றி பெற்றன.

எதிர்காலத்தில் ஊழல்,இனவாத,மத பேதமற்ற குற்றச் சாட்டுகள் இல்லாத சுத்தமான குழுவினரை ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக்கு பயப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெறும் இயலுமையைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தாம் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மொட்டுவின் பொது வேட்பாளர் தான் என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.இவ்வாறு பார்க்கும் போது அரசாங்கத்திற்குள் பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT