– குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரித்தமைக்கும் பாராட்டு
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.
குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி அறிக்கையை இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.
அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம் என்ற குறுகிய காலத்திற்குள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
கடந்த நவம்பர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் ஏனைய உறுப்பினர்களாக எரிசக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் மேற்படி குழுவின் செயலாளர் / ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் லோசினி பீரிஸ் செயற்பட்டதுடன், உரிய தரப்பினருடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மேற்படி குழுவினால் ஆராயப்பட்டது.
அதற்கமைய,
இலங்கை கிரிக்கெட்டின் உள்ளீடுகள் மற்றும் கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்தல்.
தேசிய ஆண்கள், பெண்கள் அணி, 19 – 17 வயதுகளுக்கு கீழான பிரிவு அணிகள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான கிரிக்கெட் வீரர்களின் நிர்வாகம் மற்றும் பயிற்சிகள், முழுமையான நலன் தொடர்பிலான வரைவு.
டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெளிப்படைத் தன்மை, தொழில்முறை மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கான பின்பற்றக்கூடிய சரியான முறைமை.
திறமை, சமத்துவம், நியாயம் ஆகியவற்றுடன் இலங்கை கிரிக்கெட்டின் மூலதனமான பாடசாலை கிரிக்கெட், மாவட்ட, மாகாண, கழக மட்ட கிரிக்கெட் விளையாட்டினை மறுசீரமைப்புச் செய்தல்.
உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்திருந்த விடயங்களை மீளாய்வு செய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை கிரிக்கெட் குழாம் (ஆண்/ பெண்) பயிற்றுவிப்பாளர்கள், நடுவர்கள், கிரிக்கெட் தெரிவுக்குழு, 19 வயதுக்குட்பட்ட பிரிவின் பயிற்றுவிப்பாளர்கள், தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, வனிது ஹசரங்க உள்ளிட்ட தற்போதைய அணியின் உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கணக்காய்வு மற்றும் கணக்கீட்டு நிறுவனம், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்ரசிறி தலைமையிலான சித்ரசிறி குழுவினர், கணக்காய்வாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் கருத்து கேட்டு, அவற்றை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, சட்டத்தரணிகளான சமீர் சவாஹிர், சம்ஹான் முன்ஸீர் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற அலுவல்கள் பிரிவினால் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் மிகவும் குறுகிய காலத்தில் அறிக்கையை சமர்பித்தமைக்காக அமைச்சரவை உப குழுவினருக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் சமித் திலக்கசிறியும் இதன்போது கலந்துகொண்டார்.
இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவை உபகுழு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பு; அமைச்சரவை உப குழுவிடம் கையளிப்பு