Monday, May 20, 2024
Home » கிறிஸ்மஸ் பகிர்தலின் பெருவிழா

கிறிஸ்மஸ் பகிர்தலின் பெருவிழா

by Rizwan Segu Mohideen
December 25, 2023 10:04 am 0 comment

உலகெங்குமுள்ள மக்கள் இறை மகன் இயேசு பிறந்த கிறிஸ்மஸ் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிறிஸ்து பிறப்பு விழா மகிழ்வினை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற விழாவாகும்.

கிறிஸ்து பிறப்பு வெறுமனே ஒரு நிகழ்வு கிடையாது. நிகழ்வானால் அது அப்படியே கடந்து போய்விடும். ஆனால் கிறிஸ்து பிறப்பானது வாழ்வின் அனுபவமாகும். அதுவொரு பகிர்வின் அனுபவமாகும்.

பெத்லேகம் தொழுவமதில் பிறந்த பாலகன் தன்னையே மானிடருடன் பகிர்ந்து கொண்டார். யோவான் நற்செய்தியாளர் கூறுமாற்போல் “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (யோவா. 3:16) என்கிற அனுபவமாகும்.

கடவுள் தன் ஒரே மகனையே உலகினராகிய மானிடர்மீது கொண்ட அன்பின் நிமித்தம் பகிர்ந்து கொண்டார். அண்மையில் சகோதர சமயத்தவர் ஒருவர் பகிர்ந்து கொண்ட வார்த்தையானது நோக்கத்தக்கதாக அமைந்திருந்தது.

அவரின் வார்த்தைகளில் “எல்லா சமய நம்பிக்கையாளர்களும் கடவுளைத்தேடி செல்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவ நெறியில் கடவுள் மானிடரைத்தேடி வருகிறார்” என்றுரைத்தார். இதனையே இன்னுமொரு பாடலின் வரிகள்பின்வருமாறு பறைசாற்றுகிறது. “மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார். நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்.” இவ்வரிகள் இறைவன் மானிடரைத் தேடி வந்தார் என்பதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.

இவற்றை வைத்து நோக்குகின்றபோது கிறிஸ்மஸ் பெருவிழா பகிர்வின் விழாவாகும். “பகிர்வதனால் மகிழ்ச்சி அடைகிறோம்” என்பது அன்னை தெரசாவின் பொன்மொழியாகும்.

ஒரு பெண் தன் வாழ்வினில் எல்லாம் இருந்தும் மகிழ்வினை இழந்தவளாக வாழ்வினை தொலைத்து அலைந்தாள்.

தான் இழந்த மகிழ்வினை மீளவும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஒரு ஆற்றுபடுத்துனரை அணுகி தனது நிலையை எடுத்துரைக்கின்றாள். அவரும் அவள் கூறியதைக் கேட்டுவிட்டு மகிழ்வாக இருக்க வேண்டுமென்றால் அவரது ஆற்றுப்படுத்தல் நிலையத்தில் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்ற மரியா என்கிற பெண்மணியைச் சந்திக்கச் சொல்கின்றார்.

அப்பெண் மணியும் தனக்கு கூறப்பட்டவாறே மரியாவை சந்தித்தாள். மரியாவும் தனது வாழ்வின் கதையினை அவளோடு பகிர்ந்து கொள்கிறாள். அதாவது திருமணம் குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியான தருணமதில் தனது கணவர் புற்றுநோய் காரணமாக இறந்துபோனார். அவரைத் தொடர்ந்து சிறிது காலத்தில் தனது ஒரே மகனும் விபத்தில் சிக்கி இறந்து போனதாகக் கூறினார். அவர்கள் இருவரதும் இறப்பின் பிற்பாடு எனக்கு வாழவே பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்தேன். ஒருதடவை நான் வேலை செய்கின்ற இடத்திலிருந்து பணிமுடித்து நடைபிணமாக வீடு திரும்புகின்றபோது ஒரு பூனைக்குட்டி என்னைப் பின்தொடர்ந்து வந்தது. அதனை துரத்திவிட முயன்றும் முடியாமற் போனது. வீட்டிற்குள் சென்றபோதும் அது என்னையே தொடர்ந்து வந்தது.வீட்டிற்குள் வந்த பூனைக்குட்டிக்கு ஒரு தட்டில் பால் வைத்தேன். அதனை குடித்துவிட்டு அப்பூனைக்குட்டி என் கால்களைசெல்லமாக வருடியது. அதன் தொடுகை எனக்குள் நீண்ட நாட்களுக்கு பிற்பாடு மகிழ்ச்சியினைத் தந்தது.

நான் முதற்தடவை சிரித்தேன். பிற்பாடு அப்பூனைக்குட்டி உறங்குவதற்கு ஒர் இடத்தை தயார் செய்து வைத்தேன். அதிலே அப்பூனைக்குட்டியும் ஒய்யாரமாக உறங்கியது. அது எனது மகிழ்ச்சியினை இன்னும் கூட்டியது. வாய்பேசா இப்பிராணியே நம்மை மகிழ்ச்சிப் படுத்த முடியுமாயின் மனிதர்களை மகிழ்ச்சிப் படுத்தினால் நாம் எவ்வளவு மகிழ்வாய் இருக்க முடியுமென எண்ணினேன். அடுத்தநாட் காலையில் தன் வீட்டிற்கு அடுத்து படுத்த படுக்கையாய் இருக்கின்ற ஒரு வயதான பெண்மணிக்கு ரொட்டிகளைச் செய்துகொண்டு போய் அவருக்கு உண்ணக்கொடுத்து பறிமாறினேன். அப்பெண்மணி அவ் உபசரிப்பினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். அவரது மகிழ்ச்சி என்னையும் மகிழ்ச்சிப்படுத்தியது. நான் இழந்த மகிழ்வினை சிறிது சிறிதாக மீளவும் பெற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

தொடர்ந்து மரியா தன்னைச் சந்தித்த பெண்மணியைப் பார்த்து “வாழ்வில் மகிழ்ச்சியினை அனுபவிக்க வேண்டுமானால் அடுத்தவரை மகிழ்ச்சிப் படுத்திப்பார் அவர்கள் அடையும் மகிழ்ச்சி உன்னை மகிழ்விக்கும்” என்றார்.

அப்பெண்மணியும் அவர் சொன்னதைக்கேட்டு செயற்படுத்தி தான் இழந்த மகிழ்ச்சியினை மீளவும் பெற்றுக்கொண்டார்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பதுஅமுதவாக்கு. ஒன்றுமில்லாதவரை இக் கிறிஸ்து பிறப்புக் காலத்தில் உங்களது பகிர்வினால் நீங்கள் மகிழ்ச்சி படுத்திப் பாருங்கள்.நீங்கள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவேயிருக்காது.

பகிர்வினை மூன்று நிலைகளில் நாம் செயற்படுத்தி அனுபவிக்க முடியும். முதல் வகைப் பகிர்வு நம்மிடம் உள்ளவற்றில் ஒரு பகுதியினை அடுத்தவருக்கு கொடுப்பது. உதாரணத்திற்கு ஐநூறு ரூபா பணமுள்ள ஒருவர் தன்னிடம் உதவி கேட்டு வருபவருக்கு அதிலே பாதியையோ அல்லது ஒரு பகுதியினையோ வழங்குவது. அதாவது தம்மிடம் உள்ளவற்றில் தமக்கும் வைத்துக்கொண்டு அடுத்தவருக்கும் கொடுப்பது. விவிலியத்தில் சக்கேயு தனது மனமாற்றத்தின்போது தனது சொத்தில் பாதியினை ஏழைகளுக்கு கொடுத்தான் ( லூக். 19:8) என்று எடுத்தியம்படுகிறது.

இரண்டாவது வகையான பகிர்வு தன்னிடம் உள்ளது முழுவதையும் அப்படியே வழங்கிவிடுவது. அதாவது தன்தேவையினை தியாகம் செய்து அடுத்தவர் தேவையினை பூர்த்தி செய்வது. விவிலியத்தில் ஏழைக் கைம்பெண் ஆலயத்தில் காணிக்கை செலுத்திய பகுதியில் இதனை நோக்க முடியும் (லூக். 21:1-4). இங்கே தன் பிழைப்புக்கான அனைத்தையும் காணிக்கையாகப் போட்டாள் என்று இயேசு எடுத்தியம்புகின்றார்.

தனக்குத்தேவையிருந்தும் தன்னைத் தியாகம் செய்து அடுத்தவருக்கு வழங்குவதே உள்ளதை அவ்வாறே வழங்கும் பகிர்வாகும்.

மூன்றாவது வகை பகிர்வானது தன்னையே முழுமையாக வழங்குவதாகும். இன்று நாம் உலகில் இறந்த பிற்பாடு உடல் உறுப்புக்கள் தானம் செய்வோரைக் குறித்து கேள்விப்படுகின்றோமே அதுவே இந்நிலையாகும்.

கண், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் உடல் தானம் போன்ற செயற்பாடுகளால் இந் நிலை உணர்த்தப்படுகிறது.

சிலுவையில் இயேசு கிறிஸ்து தம்மையே முழுவதுமாக மானிட வாழ்வுக்காக கையளித்தார். தற்கையளிப்பு இதனால் அர்த்தம் பெறுகிறது. இக் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவில் நம்மையே நாம் பிறருக்கு பகிர்ந்திடஅழைக்கப்படுகின்றோம்.

ஹவார்ட் தூர்மன் என்பவர் கிறிஸ்மஸ் பெருவிழாவின் மனநிலை என்கிற தமது பதிவில் பின்வருமாறு குறிப்பிடுவார். “வானதூதர்களின் பாடல் நின்றபோது வானத்தின் நட்சத்திரம் விலகியபோது ஞானிகளும் (அரசர்களும் அரசிளங்குமாரர்களும்) அரண்மனை திரும்பியபோது, இடையர்கள் தங்களது கிடைக்கு திரும்பியபோது, கிறிஸ்து பிறப்பின் பணியாகிய தொலைந்தவற்றைத் தேடும் காயப்பட்டவற்றைக் குணப்படுத்தும் பசித்திருப்போருக்கு உணவளிக்கும் கைதிகளை விடுவிக்கும், நாடுகளை மீளவும் கட்டியெழுப்பும், மக்களிடையே அமைதியைக் கொணரும் இதயங்களில் இசைபாடும் பணி ஆரம்பமாகிறது.” எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்இவை.

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் மகிழ்வு நம்மிலே தங்கவேண்டுமாயின்

கிறிஸ்து பிறப்பின் பணி நம்மிலே தொடர வேண்டும். கிறிஸ்து பிறப்பின் பணியானது ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், அனாதைகள், கைம்பெண்கள்,நலிவுற்றோர், பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டு இன்று வரையில் விடுதலையின்றி வாடுவோர், பசியால் வாடுவோர் குளிரால் நடுங்குவோர் இல்லிடங்களை இழந்தோர், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு பெருவெள்ளத்தால் அவதியுறுவோர், காசாவில் நாளாந்தம் அரங்கேறும் மனித அவலத்தால் தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் இவர்களில் அதிகமாகத் தேவைப்படுகிறது.

இவர்களுடன் நமது பகிர்வுகள் அதிகரிக்கின்றபோது கிறிஸ்மஸ் பெருவிழா அர்த்தம் கொள்கிறது.

கிறிஸ்து பிறப்பு நத்தார் கொண்டாட்டம் நமக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல. மாறாக அது அனைவருக்குமான கொண்டாட்டமாகும். இதனை கொண்டாட முடியாதவர்களும் இதனைக் கொண்டாட வேண்டுமாயி கிறிஸ்துவின் நத்தாரின் பகிர்வு நமது அன்றாடப் பகிர்வில் வெளிப்பட வேண்டும். மத்தேயு நற்செய்தி 25:40 “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்வதையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” எனும் வார்த்தைகள் அர்த்தம் கொள்ளும் காலம் நத்தார் காலமாகும்;. “வறுமையினால் வாடுவோரில் இயேசுவைக் கண்டாயா? வருத்தத்தினால் வருந்துவோரில் இயேசுவைக் கண்டாயா? அல்லல் படுவோரில் ஆபத்தில் இருப்போரில் இயேசு பிறந்திருக்கும் அழகை நீ கண்டாயா?” என்கிற பழைய பாடலின் வரிகள் கிறிஸ்மஸ் பெருவிழாவின் தத்துவத்தை இரத்தினச் சுருக்கமாக எடுத்தியம்புகிறது.

எனவே கிறிஸ்மஸ் பகிர்வின் விழா.

எங்கெல்லாம் பகிர்வு உண்டோ அங்கெல்லாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா உண்டு. உள்ளவர்கள் உள்ளவர்களுடன் உங்களது கிறிஸ்மஸ் அன்பளிப்புக்களை பகிரும் அதேவேளையில் இல்லாதவர்களுடனும் பகிர்ந்து அவர்களையும் மகிழ்வித்து நீங்களும் மகிழ்ந்தால் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா கொண்டாட்டமே.

அருட்பணி
அ.அ. நவரெத்தினம் (நவாஜி)
சிரேஸ்ட விரிவுரையாளர்.
கிழக்குப் பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT