Wednesday, May 15, 2024
Home » காசாவில் போர் நிறுத்த பேச்சுகள் தீவிரம்: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு

காசாவில் போர் நிறுத்த பேச்சுகள் தீவிரம்: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு

by sachintha
December 22, 2023 6:09 am 0 comment

பாதுகாப்புச் சபையில் தொடர்ந்து இழுபறி

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் தெற்கு காசாவின் பிரதான நகரான கான் யூனிஸில் இருந்து மேலும் மக்களை வெளியேற்றும் புதிய உத்தரவை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.

140,000க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கான் யூனிஸின் பெரும் பகுதி ஒன்றில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் புதன்கிழமை (20) உத்தரவிட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

போர் வெடித்த ஆரம்பத்தில் முற்றுகையில் உள்ள காசாவின் வடக்கு பகுதியில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அறிவுறுத்திய நிலையில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்புத் தேடி தெற்கிற்கு வெளியேறினர்.

எனினும் அங்கு மக்கள் செல்ல முடியுமான பகுதிகள் நாளுக்கு நாள் சுருங்கி வருவதோடு உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு காசாவை அடுத்து தற்போது கான் யூனிஸை மையமாகக் கொண்டு தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பலஸ்தீனர்கள் மேலும் தெற்காக எகிப்து எல்லையை ஒட்டி ரபா பகுதிக்கு அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

இதனால் காசாவின் ரபா பகுதி சனநெரிசல் மிக்க இடமாக மாறியுள்ளது. அங்கு ஒரு சதுர கிலோமீற்றர் பகுதிக்கு 12,000 பேர் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

“மோதலுக்கு முன்னரை விடவும் நான்கு மடங்கு அதிகாரித்து (ரபாவில்) சனநெரிசல் சதுர கிலோமீற்றருக்கும் 12,000 பேரை தாண்டியுள்ளது” என்று மனிதாபிமான விவகாரங்களின் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

முறைசாரா இடம்பெயர்ந்த இடங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் கழிப்பறைகள் மற்றும் போதுமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாத நிலையில், உணவு, தண்ணீர், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் உதவி விநியோக மையங்களுக்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்” என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு கான் யூனிஸின் சுமார் 20 வீத பகுதியை உள்ளடங்கும் வகையில் பலஸ்தீனர்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அங்கு 32 தற்காலிக முகாம்களில் இருக்கும் 140,000க்கும் அதிகமானோர் வெளியேற வேண்டியவர்களின் பட்டியலில் இருப்பதாகச் கூறப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே வடக்கு காசாவில் வீடுகளைவிட்டு வெளியேறித் தெற்கில் இருக்கும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

2.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் சூழலில் அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதில் 8,000க்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர். கொல்லப்பட்டவர்களில் 97 ஊடகவியலாளர்கள், 310 சுகாதார பணியாளர்கள் மற்றும் 35 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் அடங்குகின்றனர்.

தவிர, குறைந்தது 52,586 பேர் காயமடைந்திருப்பதோடு அவர்களில் 8,663 சிறுவர்கள் அடங்குகின்றனர். காசாவின் பெரும் பகுதி இஸ்ரேலிய தாக்குதல்களால் இடிபாடுகளாக மாறியிருக்கும் சூழலில் 4,900 சிறுவர்கள் உட்பட 6,700 பேர் காணாமல் போயுள்ளனர்.

போர் நிறுத்த முயற்சி

இதேவேளை காசாவில் புதிய போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது மற்றும் மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு “தீவிர பேச்சுவார்த்தைகள்” இடம்பெற்று வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் முழுமையாக முடிவுக்கு வராத வரை எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று ஹமாஸ் அமைப்பு உறுதியாக கூறியுள்ள சூழலில் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் நிச்சயற்ற நிலை நீடித்து வருகிறது.

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு கடந்த பதன்கிழமை பயணித்த ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே, அங்கு எகிப்தின் மத்தியஸ்தத்திலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் பலஸ்தீன போராளிகளின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் பலஸ்தீனர்களை விடுவிப்பது தொடர்பில் தூதுக் குழுவினர் தீவிர பேச்சுவார்த்தைகளில் இடுபட்டு வருவதாக அந்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியம் ஒன்று பற்றி பேசுவதற்கு காசாவில் இயங்கும் சிறிய போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவரும் எதிர்வரும் நாட்களில் எகிப்து செல்லவிருப்பதாக அந்த அமைப்பு கூறியது.

“இது தீவிர கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையாக இருப்பதோடு அது ஓர் இடத்திற்கு இட்டுச் செல்லும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜோன் கிர்பி செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

எனினும் ஹனியேவின் ஊடக ஆலோசகரான டஹர் அல் நொனா ரோய்ட்டர்ஸுக்கு கூறியதாவது, “இஸ்ரேல் காசாவில் தனது இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்து பலஸ்தீன மக்களுக்கான உதவிகளை அதிகரிக்கும் வரை மேலும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்” என்றார்.

“இந்த இரு விடயங்களும் அடைந்த பின் கைதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்ட பின்னரே கைதிகள் தொடர்பில் எந்த ஒரு முன்மொழிவும் பேசப்படும்” என்று கெய்ரோவில் அளித்த பேட்டியில் அல் நொனா மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் மேலும் தற்காலிக போர் நிறுத்தங்களை ஹமாஸ் நிராகரிக்கிறது. “எகிப்தில் எமது சகோதரர்களுடன் நாம் பேசியதோடு இந்த ஆக்கிரமிப்பு மீதான எங்கள் நிலைப்பாட்டை குறிப்பிட்டு கூறியுள்ளோம். அவசரமாக போரை நிறுத்துவதே எமது முதல் முன்னிரிமையாக உள்ளது” என்றார் அல் நொனா.

மறுபுறம் எகிப்து பேச்சுவார்த்தை தொடர்பில் பொது வெளியில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

எனினும் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை நிராகரிக்கும் அது, ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரையில் மட்டுப்படுத்தப்பட்ட மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு மாத்திரமே இணக்கத்தை வெளியிட்டு வருகிறது.

ஹமாஸ் ஒழிக்கப்பட்டு, அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு, காசா இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றப்படும் வரை இந்தப் போர் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

“நாம் போரை நிறுத்துவோம் என்று நினைப்பவர்கள் யதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கிறார்கள். ஆரம்பம் தொடக்கம் கடைசி வரை அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளும் இறந்தவர்களாக்கப்படுவார்கள்” என்று நெதன்யாகும் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கும் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றின் மீதான வாக்கெடுப்பு மூன்றாவது நாளாக நேற்று முன்தினத்திலும் ஒத்திவைக்கப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியம் கொண்டுவந்த இந்த நகல் தீர்மானத்தில், தற்காலிக போர் நிறுத்தம் என்ற சொல்லை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றித் தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதில் அமெரிக்காவே முட்டுக்கட்டையை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இவ்வாறான தீர்மானத்தின் மீது அமெரிக்கா வீட்டோ அதிகாரித்தை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றம்

இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படைகளிடையே அடிக்கடி மோதல் வெடிப்பதோடு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இந்தப் போர் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை கிராமமான மரூன் அல் ராஸில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது கணவர் காயமடைந்திருப்பதாக லெபனான் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் லெபனானில் பொதுமக்கள் கொல்லப்படும் மூன்றாவது சம்பவமாக இது உள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே அடிக்கடி இவ்வாறு பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வந்தபோதும் அவை எல்லைப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே நீடித்து வருகிறது.

மறுபுறம் அமெரிக்கா மற்றும் மற்ற சர்வதேச படைகள் நிலைகொண்டிருக்கும் ஈராக்கில் உள்ள அல் அஸாத் விமானத் தளத்தின் மீது நேற்று (21) ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் உறுதி செய்துள்ளது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT