Thursday, May 2, 2024
Home » கோர்க்கியின் நிழலில் மலரன்பன்

கோர்க்கியின் நிழலில் மலரன்பன்

by Rizwan Segu Mohideen
December 17, 2023 12:04 pm 0 comment

அக்கினியில் பூத்த பொன்மலர் மலரன்பன். எதிர்ப்பின் மத்தியில் தனது சமூகச் செயற்பாட்டுத்தளத்தில் காலூன்றி இயங்கிய இளைஞன் அவர்.

1960 இல் அட்டனில் இர.சிவலிங்கம் எழுப்பிய மலையக எழுச்சியின் முழக்கம் மலையகமெங்கும் எதிரொலித்தது. மலையகமெங்கிருந்தும் படித்த இளைஞர்கள் சிவாவின் அறைகூவலுக்குச் செவிசாய்த்தனர். அவரின் வழிகாட்டலில் இயங்கிய மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் அக்காலகட்ட மலையக இளைஞர்களின் சங்கமமாகியது. ஹட்டன், பதுளை, நோர்த் மாத்தளை, கண்டி ஆகிய இடங்களில் சங்கத்தின் கிளைகள் நிர்மாணம் கண்டன.

நோர்த் மாத்தளையில் அச்சங்கத்தின் கிளையை ஆரம்பிக்க ஏற்பாடாகியிருந்த தோட்டப் பாடசாலை மண்டபத்தைத் தர இறுதி நேரத்தில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டபோது, நோர்த் மாத்தளைச் சந்தியில் சங்கத்திற்கு இரா.முனீஸ்வரன், என்.சரவள்ளி பாக்கியம் செல்லப்பா ஆகியோருடன் இணைந்து மேடை அமைத்தவன் மலரன்பன். மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் நாற்றங்காலில் விளைந்த இலக்கிய நல்மணிதான் மலரன்பன்.

மலைநாட்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியையும் சமுதாயப் பற்றையும் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் ஏற்படுத்துவதையே இலக்காகக்கொண்டு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் செயற்பட்டது. இர.சிவலிங்கம், அசோகா வித்தியாலய நிறுவனர் பி.டி.ராஜன், எஸ்.நடேசன், ஆர்.கே.சோமசுந்தரம், எஸ்.திருச்செந்தூரன், பதுளை பாரதி ராமசாமி, பெரி.கந்தசாமி, க.ப.சிவம், மு.க.ஈழக்குமார், ஏ.கருப்பையா, ராம சுப்பிரமணியம், ஏ.பி.வி.கோமஸ், ஜே.சற்குருநாதன் போன்றோர் சங்கத்தின் அச்சாணியாகத் திகழ்ந்தனர். மாத்தளையில் மலையக இளைஞர் எழுச்சியின் ஊற்றாக மலரன்பன், சுப்ரமணியம் பாஸ்கரன், பொ.பூபாலன், மாத்தளை வடிவேலன், எச்.எச்.விக்கிரமசிங்க, மரதன் கிருஷ்ணன், சி.கா.முத்து,

பி.செல்லப்பா, ஆர். ராஜலிங்கம், கே.வேலாயுதம், கதிர்வேல் போன்றோர் முகிழ்த்துள்ளனர்.

மாத்தளை இளைஞர் மன்றம், முருகன் நாடக மன்றம், காந்தி சபா போன்ற அமைப்புகளும் மாத்தளையின் சமூக, இலக்கிய, கலாசார வளர்ச்சிக்கு வெவ்வேறு வழிகளில் ஊக்கம் தந்துள்ளன.

மலரன்பன், தோட்டப் பாடசாலையில் இருந்து மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி மேற்கொண்ட நிலையில் தனது தோட்டப்புற இளைஞர்கள், மக்கள் மத்தியில் சமூகப் பணியில் இறங்கினார். இரவுப் பாடசாலைகள், நூல் நிலையங்கள், விளை யாட்டுக் கழகங்கள், இலக்கியக் கூட்டங்கள் என்று மலரன்பனின் பணிகள் விரிந்தன.

சிறந்த ஹொக்கி விளையாட்டு வீரரான மலரன்பன் ‘ஹொக்கி நகரான’ மாத்தளையின் கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாடி வெற்றிகளைக் குவித்தார். சிறந்த ஹொக்கி வீரராக மாத்தளையில் தனது பெயரைப் பொறித்த மலரன்பன், அந்தச் சாதனையை இலக்கியத்திலும் சாதித்தமை மாத்தளைக்கு மட்டுமல்ல, மலையகத்திற்குமே பெருமை சேர்த்தது.

பெருமாள் ஆறுமுகம் என்ற இயற்பெயரைக் கொண்ட மலரன்பன் எழுதிய ‘யாருக்காக அழுவான்?’, ‘என்னைப்போல ஒருவன்’, ‘காதலிக்க ஒரு கன்னி’ போன்ற ஆரம்பகாலச் சிறுகதைகளில் ஜெயகாந்தனின் செல்வாக்கைக் காண முடியும்.

மலரன்பன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் ஆகிய மூவரின் சிறுகதைகளைத் தாங்கி மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் வெளியிட்ட ‘தோட்டக்காட்டினிலே’ (1980) மலையக இலக்கியத்தில் தனிக்கவனம் பெற்றது. மாத்தளை கார்த்திகேசுவின் புகழ்பெற்ற ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகத்தின் மூலாதாரக் கதையாக மலரன்பனின் ‘உறவுகள்’ கதையே அமைந்திருந்தது.

வளங்களும் வாய்ப்புகளும் முறையாகப் பங்கிடப்படாத ஒரு சமுதாய அமைப்பில் வறுமை தோற்றுவிக்கும் அவலங்களும் முரண்பாடுகளும் (மலரன்பனின்) கதைகளில் காட்டப்பட்டுள்ளன. மலரன்பனின் ‘கோடிச்சேலை’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1989ஆம் ஆண்டின் சாகித்ய மண்டலப் பரிசை மலரன்பனுக்குத் தேடிக்கொடுத்தது. ‘பிள்ளையார் சுழி’ (2008) இற்குப் பின் மலரன்பனின் சிறுகதைகளைக் காணக் கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

‘பால்வனங்களில்’ என்ற மலரன்பனின் நாவல் மலையகத்தின் இறரப்பர் தோட்ட வாழ்வு பற்றியது. இதுகாலவரை பேசப்படாதிருந்த இறப்பர் தோட்ட மக்களின் வாழ்வைப்பற்றிய முதல் பதிவு என்பதால் இந்த நாவல் மலையக இலக்கிய வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறது. மலரன்பனுக்கு வாய்த்திருக்கும் அற்புதமான கதை சொல்லும் திறனுக்கும் எழுத்தாற்றலுக்கும் இந்த நாவல் நல்ல சாட்சியமாகும்.

மெல்லிசைப் பாடல்களில் மலரன்பன் கொண்டுள்ள ஈடுபாடு அவரது மற்றுமொரு கலைப் பரிமாணத்தைக் காட்டிநிற்கிறது. ‘மகாவலியே மாநதியே’ (2001) என்ற அவரது மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பு அவரது வாழ்வுக் கோட்பாட்டினையும் இன ஐக்கியத்தை வலியுறுத்தும் பாங்கினையும் கோடிகாட்டுகிறது.

வானொலி நாடகத் தயாரிப்பிலும் திறன் கொண்ட மலரன்பனின் ‘தேன் சிந்தும் வானம்’ தொடர் நாடகமும் ‘பத்தாம் தேதி’, ‘வானவில்’, ‘கறிவேப்பிலைகள்’ ஆகிய ஓரங்க நாடகங்களும் அவரின் பெயரை பரந்த மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றுள்ளது.

பெரியதம்பியின் புள்ளி ஆடு’ என்ற தலைப்பில் உப்பாலி லீலரத்ன, மலரன்பனின் ‘பிள்ளையார் சுழி’ என்ற சிறுகதைத் தொகுப் பினைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து, அது சிங்கள வாசகர் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. மலரன்பனின் பன்னிரண்டு சிறுகதைகளை பண்ணாமத்துக் கவிராயர் Genesis (2010) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அந்நூல் கொடகே வெளியீடாகப் பிரசுரம் பெற்றுள்ளது. மலையக எழுத்தாளர் ஒருவரின் தனித்தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளி வந்திருக்கும் முதல் தொகுப்பு இதுவெனலாம்.

பிள்ளையார் சுழி, பார்வதி, கோடிச்சேலை, பெரியதம்பியின் புள்ளி ஆடு, உறவுகள், கறிவேப்பிலை ஆகிய பன்னிரு சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. மலையக எழுத்தாளர்கள் உலகளாவிய ரீதியில் அறியப்படுவதற்கு இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் பெரிதும் துணைபுரியும். மலரன்பன் சிங்களத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கும் உலகச் சிறுகதைகள் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது.

மு. நித்தியானந்தன்
லண்டன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT