– காரணம் இதுதான் எனவும் தெரிவிப்பு
எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெறும் பொதுஜன பெரமுனவின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமது சொந்த அரசாங்கத்தை உருவாக்க தயாராவோம் என தெரிவித்த பசில் ராஜபக்ஷ, துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நாட்டு மக்களை மரண பயத்தில் இருந்து காப்பாற்றிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து மாநாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பாக தமது கிராமங்களுக்கு செல்வீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
“உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் மஞ்சள் கோடு தவிர வேறு எந்த இடத்திலும் வீதியைய கடக்க வேண்டாம். சமூக ஊடகங்கள் எம் தவறுகளை படம் பிடிக்க காத்திருக்கின்றன. எனவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எமக்கு கற்பித்த மாபெரும் பாடத்தை மிக ஒழுக்கத்துடன் எடுத்துக்கொண்டு எமது கட்சியை முன்மாதிரியான ஒரு கட்சியாக எதிர்வரும் நாட்களில் செயற்படுவோம். இதன் மூலம் நாம் கோழைகள் என்று நினைக்காதீர்கள். நாங்கள் அதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதை கூறுகின்றேன். வீதியயில் ஓடும் நாயின் மீது கல்லை எறிந்தால் நாய் குரைத்து விட்டு வேகமாக ஓடும். ஆனால் சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால் யார் கல்லை எறிந்தார்கள் என்று அது திரும்பிப் பார்க்கும். நாமும் அப்படித்தான். எமக்கு அடிக்காதீர்கள் கல். நாம் அதனை பின்னர் பார்த்துக்கொள்வோம்…” என அவர் இங்கு தெரிவித்தார்.