வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ (Michaung) புயல் தமிழகத்தின் வடக்கு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தெற்கு பிரதேசங்கள் ஊடாக இன்று கரையைக் கடக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம் இத்தாழமுக்கம் வங்காள விரிகுடாவில் உருவானதுடன் நேற்றுமுன்தினம் முதல் தீவிரமடைந்து புயலாக மாறி நகர்ந்து கொண்டிருக்கிறது.
நேற்று நண்பகலாகும் போது யாழ்ப்பாணத்திற்கு தென்கிழக்காக 440 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் காணப்பட்ட இப்புயல் கரையைக் கடக்கும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கும் தாக்கங்களுக்கும் முகம்கொடுப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக மற்றும் ஆந்திர மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
இவ்வாறான சூழலில் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கையில் யாழ்ப்பாணத்திற்கு வடக்காக உள்ள கடற்பரப்பில் அடுத்துவரும் 24 மணித்தியாலயங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
அதேநேரம் மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்பு கொந்தழிப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம், அப்பரதேசங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மினவர்களை உடனடியாகக் கரைக்கோ அல்லது பாதுகாப்பான பிரதேசங்களுக்கோ செல்லுமாறும் கேட்டுள்ளது.
அதனால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை குறித்து கடற்றொழிலாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயற்படுவது இன்றியமையாததாகும்.
வங்காள விரிகுடாவில் இத்தாழமுக்கம் உருவானதைத் தொடர்ந்து இலங்கையின் பல பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் சில தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு மலையகத்தின் சில பிரதேசங்களில் சிறு மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பலத்த மழை கிடைக்கப்பெற்று வருவதற்கு இப்புயல் காரணமாக அமைந்துள்ளதாக போதிலும், அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு இச்சீரற்ற காலநிலை நீடிக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் காரணத்தினால் தற்போதைய சூழலில் மக்கள் விழிப்புடனும் முன்னவதானத்துடனும் செயற்படுவது அவசியம். சீரற்ற காலநிலையில் கடும் மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அதனால் மலையகத்திலும் மலை சார்ந்த பிரதேசங்களிலும் அதிகம் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் போது மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலும் நிலவுகிறது.
இந்நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்ககளில் வாழும் மக்கள் தற்போதைய சூழலில் முன்னவதானத்துடன் செயற்பட வேண்டும். கவனயீனமாகவோ அசிரத்தையுடனோ நடந்து கொள்ளக்கூடாது.
மலையகத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறுமாயின் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம். மண்சரிவு ஏற்படுமாயின் அதற்கு முன்னர் சில முன்னறிகுறிகள் குறித்த பிரதேசத்தில் வெளிப்படும். குறிப்பாக நிலத்திலும் கட்டிடங்களிலும் அவதானிக்கலாம். குறிப்பாக நிலத்திலும் சுவர்களிலும் திடீரென வெடிப்புக்கள் ஏற்படும். அவை பிளவுகளாக விரிவடையலாம். நிலத்தில் புதிதாக நீரூற்றுகள் உருவாகலாம். அவற்றில் சேறு சகதியுடன் நீர் வெளிப்படலாம்.
அதேநேரம் ஏற்கனவே காணப்படும் நீரூற்றுகள் திடீரென மறைந்து போகலாம். உயரமான மரங்களும் மின் மற்றும் தொலைபேசிக் கம்பங்களும் சரிவடையலாம். இவை மண்சரிவுக்கான முன்னறிகுறிகளே அன்றி வேறில்லை. அதனால் அவ்வாறான அறிகுறிகள் தென்படுமாயின் தாமதியாது அப்பிரதேசத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு பிரதேசவாசிகள் செல்ல வேண்டும். அந்த அறிகுறிகள் குறித்து பிரதேச கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் தவறக்கூடாது.
மேலும் இப் புயல் தமிழகத்தின் வடக்கு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு பிரதேசங்கள் ஊடாகக் கரையை கடந்தாலும் இலங்கையின் சில பிரதேசங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீச முடியும். அதனால் உயரமான மரங்கள் மற்றும் கம்பங்கள் குறித்து முன்னவதாத்துடன் செயற்படவும் தவறலாகாது. அத்தோடு இடி மின்னல் தாக்கம் குறித்தும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்று அனரத்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகவே தற்போதைய சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் குறைத்து தவிர்த்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அது மிகவும் இன்றியமையாததாகும்.