Friday, May 3, 2024
Home » இலங்கை இராணுவத் தளபதி இந்திய இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத் தளபதி இந்திய இராணுவத் தளபதியை சந்திப்பு

by Rizwan Segu Mohideen
December 5, 2023 4:35 pm 0 comment

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் அழைப்பின் பேரில், நேற்றையதினம் (04) புதுடில்லி இந்திய இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்த இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட வரவேற்பின் பின்னர் அவர் தேசிய போர் வீரர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், இந்திய இராணுவத்தினரால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இந்திய இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி, இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயுடன் அவர் கலந்துரையாடினார்.

உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இரு இராணுவங்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்பான விடயங்கள் மீளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கலந்துரையாடலின் முடிவில் இரு தரப்பினரும் பாராட்டு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் முதன்மை நோக்கமாக இரு நாட்டுப் படைகள் மற்றும் நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வையும் நட்பின் பிணைப்புகளை மேலும் மேம்படுத்துவதாகும். மேலும் இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதும் இதன் நோக்கமாகும்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியார் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் இலங்கை இராணுவத்தின் இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.எம். பெனாண்டோ  ஆகியோர் இந்தியாவுக்கான அழைப்பை ஏற்று இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே இந்திய இராணுவ மனைவியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவி மற்றும் மத்திய இராணுவ மனைவியர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் தனியான உத்தியோகபூர்வ சந்திப்புகளில் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT