Home » “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டம்”

“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டம்”

COP28 மாநாட்டில் ஜனாதிபதி முன்வைப்பு

by damith
December 4, 2023 8:10 am 0 comment

உலக வெப்பமயமாதலின் சவாலை எதிர்கொள்ளுதல் மற்றும் வெப்ப வலய நாடுகளுக்கு நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்ட “வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP28 மாநாட்டில் (02) முன்வைத்தார்.

காலநிலை நிதியங்களில் மாதிரி அடிப்படையிலான மாற்றம் மற்றும் பயனுள்ள பிரதிபலன்களை அடைவதற்கு பலதரப்பு அணுகுமுறையின் தேவை ஆகியவை இந்தத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு வழிவகுத்ததாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

2030ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் இலக்கை அடைவதற்கான நிச்சயமற்ற தன்மைகள் குறித்து கவனம் செலுத்தி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையை ஆரம்பித்தார்.

இந்த தீர்மானமிக்க இலக்கை அடைவதற்கான 50% வாய்ப்பு இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து நிதி உதவி கிடைப்பதை எதிர்பார்க்க முடியாது என்றார்.

எனவே, இந்த நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெப்பவலய மற்றும் வெப்பவலயமற்ற நாடுகளுக்கும் அரச மற்றும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

வெப்பவலய காலநிலை அபிலாஷைகள் திட்டம், காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற அத்தியாவசிய இயற்கை வளங்களை மையமாகக் கொண்ட முதலீடுகளை ஈர்ப்பதே வெப்பவலய காலநிலை அபிலாஷைகள் திட்டத்தின் நோக்கமாகும்.உலக வெப்பமயமாதலை எதிர்ப்பதற்கு இந்த முதலீடுகள் அவசியம்.

இதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராக வருடாந்தம் செலவிடப்படும் டிரில்லியன் கணக்கான டொலர்களை மீதப்படுத்த முடியும்.இதற்காக தனியார் துறையின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை உருவாக்குவதற்கும் இந்து சமுத்திர ரிம் சங்கத்துடன் (Indian Ocean Rim Association) இணைந்து பணியாற்றுவது அவசியம்.

வெப்பவலயக் காலநிலை அபிலாஷைகள் திட்டம் மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்திற்கான முயற்சிகள் உலகின் மிகப்பெரிய கார்பன் உறிஞ்சுதலை உருவாக்கும்.

மாலைதீவு, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது, இந்த வேலைத்திட்டத்தில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x