பலஸ்தீன விவகாரத்தில் இராஜ தந்திர ரீதியாகவும், பொருளாதார உதவிகள் ரீதியாகவும் வரலாறு நெடுகிலும் தன்னை முற்று முழுதாக ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றது சவூதி அரேபியா.
இதுவரை சுதந்திர பலஸ்தீன உருவாக்கத்திற்காகவும், பலஸ்தீன மக்களின் விடிவுக்காகவும் அவர்களது அபிலாஷைகளை பெற்றுக் கொடுக்கவும் எந்த நாடும் செய்யாத, செய்ய முடியாத பாரிய செயற்றிட்டங்களை மிகத்துல்லியமாகவும், நுணுக்கமாகவும் அது மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக பலஸ்தீன அபிவிருத்திப் பணிகளுக்காக மனிதாபிமான உதவிகள் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.
சவூதி அரேபியா வழங்கிய பொருளாதார உதவிகளை இச்சிறு ஆக்கத்தினுள் குறிப்பிட முடியாது.
ஆனாலும் முறையே 1967 ல் கார்டூமிலும் 1978 ல் பக்தாதிலும் 1987 ல் அல்ஜீரியாவிலும் நடந்த உச்சிமாநாடுகளில் வருடாந்த ரீதியாகவும் மாதாந்த ரீதியாகவும் பெரும் தொகையை பொருளாதார உதவியாக பலஸ்தீனுக்கு வழங்க சவூதி இணக்கம் தெரிவித்ததுடன் நடைமுறைப்படுத்தியும் காட்டியது.
ஏன் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மட்டும் பலஸ்தீனுக்கு சவூதியினால் வழங்கப்பட்ட உதவியானது சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் பணிப்பாளர் நாயகம் கௌரவ அப்துல்லாஹ் அர்ரபீஆ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தொகையானது பலஸ்தீன மக்களின் துயர் துடைக்க பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமல்லாது பலஸ்தீன விவகாரத்தில் மாற்றம் காணாத சவூதி அரேபியாவின் இவ்வுறுதியான நிலைப்பாடானது இன்றுவரை தொடர்ந்து வருகின்றமை சிறப்பம்சமாகும். அதையே அண்மைய மாநாடுகளில் முடிக்குரிய இளவரசர் தெரிவித்திருந்தார்.
ஆனால் சவூதி அரேபியா செய்த இவ்வளவு பாரிய பொருளாதார உதவிகளையும் அது மேற்கொண்டு வரும் இராஜதந்திர நகர்வுகளையும் மறைத்து, பலஸ்தீன விவகாரத்தில் சவூதி அரேபியா கண்துடைப்புக்காக ஓரிரு அறிக்கைகளை மட்டுமே விடுகின்றது என்று கூறி சவூதியின் முயற்சிகள் அத்தனையையும் கொச்சைப்படுத்த முயல்வதானது கவலைக்குரிய விடயமாகும்.
அபூ அரீஜ் பாஹிர்