19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் றோயல் கல்லூரியின் சினத் ஜயவர்தன 15 பேர் கொண்ட குழாத்துக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதோடு உப தலைவராக மல்ஷ திருபத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் கொழும்பு பெனடிக்ட் கல்லூரியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஷருஜன் ஷன்முகநாதனும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இலங்கை இளையோர் அணி கடந்த இரண்டு மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் வெற்றியீட்டிய நிலையிலேயே ஆசிய கிண்ண போட்டிகளில் களமிறங்கவுள்ளது.
கடந்த செப்டெம்பரில் இலங்கையில் நடந்த மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணிக்கு எதிராக 2–1 என வெற்றியீட்டிய இலங்கை இளையோர்கள் கடந்த ஒக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3–2 என கைப்பற்றினர்.
இளையோர் ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும் டிசம்பர் 8 தொடக்கம் 17 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் எட்டு ஆசிய நாடுகள் போட்டியிடவுள்ளன. இந்தியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள அணிகள் ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் விளையாடவுள்ளன. குழு பி இல் இலங்கையுடன் பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜப்பான் அணிகள் பங்கேற்கின்றன.
இலங்கை இளையோர் அணி எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி டுபாயில் முதல் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்த டிசம்பர் 11 மற்றும் 13ஆம் திகதிகளில் முறையே ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் அணிகளை சந்திக்கும்.
எனினும் அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை இளையோர் குழாத்திற்கு விளையாட்டுத் துறை அமைச்சு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தக் குழாம் தலைமை பயிற்சியாளர் ஜெஹான் முபாரக்கின் கீழ் பல்லேகலயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இளையோர் குழாம்: சினெத் ஜயவர்தன (தலைவர்), மல்ஷ திருபத்தி (உப தலைவர்), புலின்து பெரேரா, ருசந்த கமகே, ரவிஷன் நெத்சர, ஷருஜன் ஷன்முகநாதன், தினுர களுபஹன, விஷ்வ லஹிரு, கருக சங்கேத், விஷேன் ஹலம்பகே, ருவிஷன் பெரேரா, விஹாஸ் தெவ்மிக்க, துவிந்து ரணதுங்க, ஹிருன் கபுருபண்டார, தினுக்க தென்னகோன். மேலதிக வீரர்கள்: ஜனித் பெர்னாண்டோ, சுபுன் வாதுகே.