உலக தொலைக்காட்சி தினம் (World Television day) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவம் இத்தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின்படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21ஆம் திகதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல்வேறு மின்சாதனப் பொருட்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று காட்சிகளை கண்முன்னே காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.
தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாதனங்களில் ஒன்றாக நிலைபெற்றுள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்புச் சாதனங்களில் தொலைக்காட்சிதான் முன்னிலை வகிக்கின்றது.
1920 ஆம் ஆண்டு ஜோன் லொகி பெயாட் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார். அன்று முதல் இன்றுவரை பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுத்து தொலைக்காட்சி பல பரிமாணங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக விளங்கும் தொலைக்காட்சி உலகையே ஆட்சி செய்யும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையில் மிகவும் செல்வாக்குமிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. அதனூடாக வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொளிகள், புதிய ஆலோசனைகள் மற்றும் வடிவமைப்பு போன்றவை மக்களை அதிகளவில் கவர்கின்றன. தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க ஊடகமாக தொலைக்காட்சி வளர்ச்சியடைந்துள்ளது. அதற்கான ரசிகர்களும் உலகளாவிய ரீதியில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
சமூக வேறுபாடு, வயது வேறுபாடு மற்றும் தேசிய வேறுபாடு ஆகியவற்றைக் கடந்து அனைவர் மத்தியிலும் பொதுவான விருப்பத்திற்கு உரிமையுடைய சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிகளைப் புரிந்துகொள்வதற்கு மேலதிக அறிவு தேவையில்லை. இதனால் கல்வியறிவு குறைந்தவர்களும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.
பலம் மிக்க சாதனமாக தொலைக்காட்சி காணப்படுகிறது. கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்தல், ஆற்றல்களை வெளிப்படுத்தல், பல்துறை அறிவூட்டுதல் போன்ற பயன்களை தொலைக்காட்சி வழங்குகின்றது.
உலகில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் என்பன தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சாதனமாக தொலைக்காட்சி பயன்படுத்தப்பட வேண்டுமென்பதே யுனெஸ்கோவின் கருத்தாகும். இதன்மூலம் சிறுவர்கள் மாத்திரமன்றி இளைஞர்களையும் தெளிவுபடுத்த முடியுமென யுனெஸ்கோ கூறுகின்றது.
தொலைக்காட்சி புரட்சிக்கு 1925- இல் வித்திட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஜோன்லொகி பெயாட் என்ற அறிவியலாளர் ஆவார். 27.01.1926- இல் தான் கண்டறிந்த கருவியைபுகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் மத்தியில் அவர் இயக்கிக் காட்டினார்.
அவரைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக, 1936- ஆம்ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தொலைக்காட்சியில் கறுப்பு வெள்ளை ஒளிபரப்பு நடைமுறைக்கு வந்தது.
Television என்பதற்கு தமிழில் பட ரேடியோ, வானொளி என்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இச்சொல் தொலைவில் உள்ளதை காண்பது என்ற பொருள் தந்ததால், தொலைக்காட்சி என்பதே நிலைபெற்றது.
உலக நிகழ்வுகளை வீடுகளுக்குள் கொண்டுவந்து காட்சிப்படுத்திய, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பானது அன்டெனாவில் தொடங்கி, தற்போது டிஷ், கேபிள், இணையம் என பல்வகை ஊடகங்களில் நிலைபெற்று விட்டது.
அறிவியலானது தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப நெகிழ்வுதன்மையுடன் காணப்படுவதால், ஒளிபரப்பு பல்வகை ஊடகங்களுக்குள் ஊடுருவி நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. சிறிய பெட்டி வடிவில் கறுப்பு வெள்ளை திரையுடன் தயாரிக்கப்பட்டு, பின்னர் பெரிய அளவிலும், வண்ணத்திரையுடனும் தயாரிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக காட்சியளித்த தொலைக்காட்சிகள், 2010- இற்குப் பிறகு எல்.இ.டி, எல்.சி.டி என அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறியது முதல் பெரிய திரைகளுடன்தயாரிக்கப்பட்டு, வீடுகளை அலங்கரித்து வருகின்றன.
திரையரங்கத்தின் திரையைப் போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும், பிரம்மாண்ட திரை கொண்ட தொலைக்காட்சிகளும் தற்போது தயாரிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தி வந்த பெட்டியைப் போன்ற தொலைக்காட்சிகள் பெட்டிகளில் பெரும்பாலும் விடைபெற்று விட்டன.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகான காலகட்டத்தில் ஏற்பட்ட போட்டியானது நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் மக்களுக்கு அதிகளவில் கொண்டு சேர்க்கத் தொடங்கியது. நாள்தோறும் சில மணி நேரங்கள் மட்டுமே அளிக்கப்பட்ட ஒளிபரப்பானது, பின்னாளில் 24 மணி நேரமாக மாறி நிற்கிறது. 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள் பெருகி விட்டன.
இணையம் என்ற ஊடகத்தின் வழியாகவும் பல்வேறு அலைவரிசைகளைக் காணும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம்.
தொலைக்காட்சிகளில் பல்சுவை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், செய்தி ஏற்படுத்தும் தாக்கம் மற்றைய நிகழ்ச்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
தொலைக்காட்சி தொடர்பான தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்கர்கள், 1953 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் வண்ண ஒளிபரப்பைத் தொடங்கினர். இதன்மூலம் உலக நாடுகளில் தொலைக்காட்சியில் வண்ண ஒளிபரப்பைத் தொடங்கிய முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்கா பெற்றது.
நாம் நேரில் காணமுடியாத சம்பவங்களைக் கூட கண்டுகளித்திட தொலைக்காட்சி உறுதுணையாக விளங்குகின்றது என்பது மறுக்க முடியாததாகும்.