வரவுச் செலவுத்திட்டம்_ 2024 மீதான இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 77 எம். பிக்களும் வாக்களித்துள்ளனர். இதன் ஊடாக 45 மேலதிக வாக்குகளால் இவ்வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேறியுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான 07 நாட்கள் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட சமயமே இவ்வாறு நிறைவேறியுள்ளது.
மக்களினதும் நாட்டினதும் நலன்களுக்கு இவ்வரவு செலவுத்திட்டம் பெரிதும் முன்னுரிமை அளித்துள்ளதே இதற்கான காரணமாகும்.
கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. ஜனாதிபதி முன்னெடுத்துவரும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் ஊடாக கட்டம் கட்டமாக மீட்சி பெற்று வந்த பொருளாதாரம் தற்போது மறுமலர்ச்சிப் பாதையில் நம்பிக்கையுடன் பிரவேசித்திருக்கிறது. இச்சூழலில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இவ்வரவு செலவுத்திட்டம், கடந்த வருடத்தைப் போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்காதிருப்பதையும், நாட்டை பொருளாதார ரீதியில் நிலைபேறானதாகக் கட்டியெழுப்புவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சமரசிங்க, நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் இவ்வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம், முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ், ‘நாட்டின் எதிர்காலத்தைச் சிறந்த வகையில் முன்னெடுப்பதற்கு இவ்வரவு செலவுத்திட்டம் சிறந்த வாய்ப்பாகும். அதனால் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனிப்பட்ட நோக்கங்களுக்கு அப்பால் இவ்வரவு செலவுத்திட்டத்தை நோக்குவது அவசியம்’ என்றுள்ளார். இதன் ஊடாக இவ்வரவு செலவுத்திட்டத்தின் முக்கியத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி எடுத்தியம்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது, ‘நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகளில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்ததோடு, எம்மை விட சிறந்த வேலைத்திட்டம் இருந்தால் அதனை இச்சபையில் விரிவாக முன்வையுங்கள், விவாதிப்போம். மிகவும் பொருத்தமான திட்டத்தை செயல்படுத்துவோம். வருங்கால சந்ததியினருக்கு பெருமை சேர்ப்போம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டுள்ள இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதனால்தான் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ளனர்.
இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு ஆளும் கட்சி எம்.பிக்கள் பலர் எதிராக வாக்களிப்பர் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் மனப்பால் குடித்தனர். நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் பொறாமை கொண்டவர்களும் கூட இவர்களோடு இணைந்து பாரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதவராக வாக்களித்து அவர்களது எதிர்பார்ப்பை நிராகரித்துள்ளனர்.
நாட்டையும் மக்களையும் உண்மையாக நேசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் அற்ப அரசியல் நலன்களுக்கு அப்பால் சிந்தித்து செயற்படுவர். அவர்கள் எவரும் இவ்வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள்.
அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும நல்கப்படுவது அவசியம்.
இந்த நிலையில் இவ்வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையில் ‘எம்மை விட சிறந்த வேலைத்திட்டம் இருந்தால் அதனை இச்சபையில் விரிவாக முன்வையுங்கள். விவாதிப்போம். மிகவும் பொருத்தமான திட்டத்தை செயல்படுத்துவோம். வருங்கால சந்ததியினருக்கு பெருமை சேர்ப்போம்’ என்று குறிப்பிட்டார்.
இதன் ஊடாக பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார். அத்தோடு ‘எம்மை விடவும் சிறந்த வேலைத்திட்டங்கள் இருந்தால் முன்வையுங்கள்’ என வெளிப்படையாகவே கோரியுள்ளார். பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எந்தவொரு தலைவரது அழைப்பும் இவ்வாறுதான் இருக்கும்.
பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்பை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அதனால் அவரது முயற்சிகளுக்கு கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே மக்களினதும் எதிர்பார்ப்பு ஆகும்.