அல் ஷிபா மருத்துவமனையை அடுத்து இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசாவில் இருக்கும் மற்றொரு மருத்துவமனையான இந்தோனேசிய மருத்துவமனையை சுற்றிவளைத்துள்ளது. இந்த மருத்துவமனை மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த மருத்துவமனை மீது இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மற்றும் நேரடியான குண்டு வீச்சுகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் உயிராபத்தை எதிர்கொண்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
காசாவில் நெருக்கடியை சந்தித்திருக்கும் ஏனைய சுகாதார வசதிகள் போன்று 2016 இல் இந்தோனேசிய அமைப்புகளின் நிதியில் கட்டப்பட்ட இந்தோனேசிய மருத்துவமனையும் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. எனினும் இங்கு மருத்துவ பணியாளர்கள், காயமடைந்தவர்கள் உட்பட சுமார் 700 பேர் இருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் கித்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் செல் வீச்சுகளால் மருத்துவமனை கட்டடம் சேதம் அடைந்திருப்பதோடு மின் பிறப்பாக்கி செயலிழந்ததை அடுத்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையை டாங்கிகள் சுற்றிவளைத்திருக்கும் நிலையில் அங்கிருந்து வெளியேறுபவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் சூடு நடத்தி வருவதாக காசாவில் இருக்கும் ஊடகவியலாளர் ஒருவரான இஸ்மைல் அல் குல் தெரிவித்ததாக அல் ஜசீனா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அல் ஷிபா மருத்துவமனையை விட அளவில் சிறியதான இந்தோனேசிய மருத்துவமனை மீதான இஸ்ரேலின் நடவடிக்கை பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எகிப்துடனான எல்லைக்கு அருகில் ரபா நகரில் வீடுகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய இரு வான் தாக்குதல்களில் குறைந்தது 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா நிர்வாகம் தெரிவித்தது.
காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் சுமார் 5,500 சிறுவர்கள் மற்றும் 3,500 பெண்கள் அடங்குகின்றனர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,000ஐ தாண்டி இருப்பதோடு இவர்களில் 75 வீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.
எனினும் காணாமல் போனவர்கள் 6,000ஐ தாண்டி இருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை கூறப்படுவதை விடுவும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவ்வாறு காணாமல்போனவர்களில் பொரும்பாலானவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காசாவில் 43,000க்கும் அதிமான வீடுகள் இஸ்ரேலிய தாக்குதல்களில் தரைமட்டமாகப்பட்டிருப்பதோடு 225,000க்கும் அதிகமாவை சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்த இஸ்ரேலிய இராணுவம் தனது போர் நடவடிக்கையை விரிவுபடுத்தும் வகையில் காசாவின் மிகப்பெரிய அகதி முகாமான ஜபலியா அகதி முகாம் மற்றும் அதற்கு அருகில் உள்ள கடற்கரை முகாமில் இருக்கும் மக்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. ஜபலியாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று முன்தினம் (19) உக்கிர தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இங்கு சனிக்கிழமை பாடசாலைகள் உட்பட பல இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் காசாவில் இஸ்ரேலிய படைகள் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையில் தரைவழி மோதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறன்றன. இதில் மேலும் இரு இஸ்ரேலிய துருப்புகள் கொல்லப்பட்டதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது. 20 வயதுடைய யினொப் டமிர் மற்றும் ட்விர் பரசானி என்ற இரு வீரர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படைகளின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது. இதில் காசா மீதான தரைவழி நடவடிக்கையில் 64 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மோதல்கள் தீவிரம் அடைந்தபோதும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலிய தூதுவர் மைக்கல் ஹர்சொக் ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எதிர்வரும் நாட்களில் ஹமாஸினால் கணிசமான பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியும்” என்றார்.
மறுபுறம், உடன்படிக்கை ஒன்றுக்கான பிரதான தடங்கல்கள் மிகக் குறைவாக இருப்பதாக கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். நடைமுறை மற்றும் ஏற்பாட்டு ரீதியான தடங்கல்களே எஞ்சி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று மிகச் சிக்கலான மற்றும் உணர்வுபூர்வமான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனா சென்றிருக்கும் பலஸ்தீன அதிகாரசபை, எகிப்து, சவூதி அரேபியா, ஜோர்தான் மற்றும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர்கள் காசாவில் உடன் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயையும் சந்தித்து காசா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காசாவில் மனிதாபிமான பேரழிவு ஒன்றை நிறுத்துவதற்கு உலகம் உடன் செயற்பட வேண்டும் என்று வாங் குறிப்பிட்டுள்ளார்.
“காசாவின் நிலைமை உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. இது சரி மற்றும் தவறு அதேபோன்று மனிதகுலத்தின் அடிப்பகுதியை கேள்விக்குள்ளாக்குகிறது” என்று வருகைதந்த இராஜதந்திரிகளிடம் வாங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாத பிற்பகுதியில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் டாங்கிகள் காசாவுக்குள் ஊடுருவிய நிலையில் காசா நகரைச் சூழவுள்ள வடக்கு, வடமேற்கு மற்றும் கிழக்கின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் கெரில்லா பாணியில் போர் புரிந்து வரும் ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் காசா நகரத்தின் சில பகுதிகள் மற்றும் பரந்து விரிந்த ஜபாலியா மற்றும் கடற்கரை அகதிகள் முகாம்கள் உட்பட, நெரிசலான, நகரமயமாக்கப்பட்ட வடக்கில் இஸ்ரேலிய படைகள் மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு பகுதிகளான பெயித் ஹனுன், பெயித் லஹியா மற்றும் அல் சப்தாவி அதேபோன்று ஜபலியாவின் மேற்குப் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் ஏழின் மீது தமது போராளிகள் தாக்குதல்களை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 100,000 மக்கள் வசிக்கும் ஜபலியா அகதி முகாமை நோக்கி இஸ்ரேலிய படை முன்னேற முயன்றபோது ஹமாஸ் போராளிகளுடன் கடும் மோதல் வெடித்துள்ளது. 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்ட பலஸ்தீனர்களின் சந்ததிகள் வசிக்கும் ஜபலியா முகாம் மீது இஸ்ரேல் அண்மைய நாட்களில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.