Home » வடக்கை அடுத்து தெற்கு காசா மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரிப்பு

வடக்கை அடுத்து தெற்கு காசா மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரிப்பு

போர் நிறுத்த செய்தியை இஸ்ரேல், அமெரிக்கா நிராகரிப்பு

by damith
November 20, 2023 6:00 am 0 comment

காசாவில் ஐந்து நாள் போர் நிறுத்தத்திற்கு பகரமாக பலஸ்தீன போராளிகளால் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளான பல டஜன் பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதற்கு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே தற்காலிக உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டிருப்பதாக இந்த உடன்படிக்கையுடன் தொடர்புபட்ட தரப்புகளை மேற்கோள்காட்டி வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்னும் உடன்படிக்கை ஒன்று எட்டப்படவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடைசி நிமிட இடையூறுகளை தவிர்த்து எட்டப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கையின்படி அடுத்த சில நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக ஆறு பக்க உடன்படிக்கை குறித்த விபரம் வெளியாகியுள்ளதாக அந்தப் பத்திரிகை சனிக்கிழமை (18) வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இஸ்ரேல் தெற்கு காசா மீது தனது தாக்குதல்களை விரிவுபடுத்தி அங்கு பல டஜன் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. வடக்கு காசாவில் மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இரு பாடசாலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கூறப்படும் உடன்படிக்கையின்படி அனைத்துத் தரப்புகளும் குறைந்தது ஐந்து நாட்களுக்கு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணயக்கைதிகளை போராளிகள் விடுவிக்கவுள்ளனர். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டதோடு சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அதேபோன்று இந்த போர் நிறுத்த காலத்தில் கணிசமான மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி அளிக்கப்படவிருப்பதாகவும் வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. காட்டாரில் கடந்த பல வாரங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை மூலமே இந்த உடன்படிக்கைக்கான நிபந்தனைகள் வகுக்கப்பட்டதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த சனிக்கிழமை (18) மாலை செய்தியாளர்களை சந்தித்த நெதன்யாகு கூறியதாவது: “பணயக்கைதிகள் தொடர்பில் பல ஆதாரமற்ற வதந்திகள் பரவியுள்ளன. அதில் பலதும் தவறானவை. தற்போதைய சூழலில் எந்த உடன்படிக்கையும் எட்டப்பவில்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ஏதாவது சொல்ல வேண்டி இருந்தால் அது பற்றி நாம் உங்களுக்கு தெரிவிப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்” என்றார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று தொடர்பில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார். உடன்படிக்கை ஒன்றுக்காக அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு அமெரிக்க அதிகாரியும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மரண வலயமான மருத்துவமனை

ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின் ஹமாஸ் அமைப்பை அழித்தொழிப்பதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. இந்தப் போர் தற்போது ஏழாவது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசா பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,300ஐ தாண்டியுள்ளது. இதில் 5,000க்கும் அதிகமான சிறுவர்கள் அடங்குகின்றனர்.

வடக்கு காசாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு அந்தப் பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் தற்போது தெற்கு காசாவின் சில பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் கடந்த வாரம் துண்டுப் பிரசுரத்தை வானில் இருந்து வீசிய இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை மீண்டும் அந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

சர்வதேச கவலைக்கு மத்தியிலும் வடக்கு காசாவின் பிரதான இலக்காக இருந்த அல் ஷிபா மருத்துவனைக்குள் இஸ்ரேலிய துருப்புகள் ஊடுருவிய நிலையில் அங்கு தொடர்ந்து நிலைகொண்டுள்ளன.

இந்நிலையில் காசா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான குழு ஒன்று, துப்பாக்கிச் சூடு மற்றும் செல் குண்டு தாக்குதல்களின் சேதங்களை அவதானித்ததோடு, அந்த மருத்துவமனை ஒரு ‘மரண வலயம்’ என்று வர்ணித்தனர். அங்கு எஞ்சியிருக்கும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு திட்டமிடப்படுவதாக அந்தக் குழு தெரிவித்தது.

இதேநேரம் வடக்கு காசாவில் உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா உதவி நிறுவனத்தின் இரு பாடசாலைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக ஐ.நா நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப் லசரினி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒன்றில் 4000க்கும் அதிகமான பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறுவர்கள் உட்பட பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார் அவர். “24 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக பாடசாலைகள் தப்பவில்லை. இது போதும், இந்த பயங்கரம் நிறுத்தப்படவேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதலில் பாடசாலையில் இருந்த 200 பேர் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக காசா ஹமாஸ் நிர்வாகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவின் இரு பாடசாலைகள் மீதான தாக்குதல்களில் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் பகுதிகளில் ஆட்சி நடத்தும் பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கையில் தலையிடும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அப்பாஸ் சனிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.

மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிப்பதோடு இஸ்ரேலிய இராணுவம் நேற்றும் இரு பலஸ்தீனர்களை கொன்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

ஜெனின் அகதி முகாம் வாயிலில் வைத்து 46 வயதான விசேட தேவையுடைய அஸ்ஸாம் அல் பயத் என்பவரை இஸ்ரேலி படை சுட்டுக் கொன்றதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது. மற்றொரு ஆடவரான 20 வயது ஒமர் லஹ்மான் என்பவர் தெற்கு பெத்லஹாமின் ஜெனின் அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் மேற்குக் கரையில் ஆறுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 214ஆக அதிகரித்துள்ளது.

வான் தாக்குதல்கள்

போர் நிறுத்தத்தை மறுத்துவரும் பைடன், வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், போருக்குப் பின் காசா மற்றும் மேற்குக் கரை இரண்டிலும் பலஸ்தீன அதிகாரசபை ஆட்சியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பைடனின் இந்த ஆலோசனை பற்றி டெல் அவிவில் நெதன்யாகுவிடம் கேட்டபோது, பலஸ்தீன அதிகார சபையின் தற்போதைய கட்டமைப்பில் அதனால் காசாவில் பொறுப்பேற்கும் திறன் இல்லை என்றார். போருக்குப் பின்னரான காசா தொடர்பில் இஸ்ரேல் எந்தத் திட்டத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கிற்கு இடம்பெயர்ந்திருக்கும் நிலையில் தெற்கின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளது மனிதாபிமான நெருக்கடியை மோசமடையச் செய்யும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதில் 400,000 இற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கான் யூனிஸ் நகரும் இலக்காகி உள்ளது.

இந்தப் போரினால் ஏற்கனவே 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசாவின் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலிய படை தெற்கை நோக்கி முன்னேறுவது வடக்கை விடவும் பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.

கடந்த சனிக்கிழமை காலை கான் யூனிஸின் குடியிருப்புப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 26 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, 23 பேர் காயமடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் தனது சித்தி, குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் கொல்லப்பட்டதாக இயாத் அல் சயீம் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தெற்கு பாதுகாப்பானது என்றும் அங்கு இடம்பெயரும்படியும் இஸ்ரேல் வடக்கில் உள்ளவர்களுக்கு முன்னதாக உத்தரவிட்டதை நம்பி தெற்கிற்கு வந்தவர்களாவர்.

“அனைவரும் உயிர்த்தியாகம் செய்துவிட்டார்கள். இவர்களுக்கு (ஹமாஸ்) போராட்டத்துடன் தொடர்பு இல்லை” என்று நாசர் மருத்துவனையின் பிரேத அறைக்கு வெளியில் இருந்தபடி சயீம் தெரிவித்தார். இங்கு கொல்லப்பட்ட 26 பேரின் உடல்களும் நல்லடக்கத்திற்காக வரிசையில் வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை கான் யூனிஸ் மற்றும் நுஸைரத் அகதி முகாம்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் மேலும் 15 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக வபா செய்தி நிறுவனம் கூறியது. அதே நேரம் தெற்கு கான் யூனிஸில் இடம்பெற்ற தாக்குதலில் பெண் ஒருவரும் அவரது குழந்தையும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT