அவருடைய அச்செயல் திட்பம் சேக்கிழார் திருவாக்கில், “உலகு நிகழ்ந்த பல்லவர்கோச்சிங்க ருரிமைப் பெருந்தேவி நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொரு மலரை யெடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித்தொண்டர் இலகு கூர்வாய்க் கருவியெடுத் தெழுந்த வேகத்தாலெய்தி” – “கடிது முற்றி மற்றவள்தன் கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப் படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் பரமர் செய்யசடை முடியி லேறுந் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடுமூக்கைத் தடிவ னென்று கருவியினா லரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்” என வரும்.
திருப்பூ மண்டபத்துக்கு அயலிற் கிடந்ததேனும், சிவபெருமான் திரு
முடிக்கேற வெனக் கொணரப்பட்ட மலரல்லவா அது என்று நாயனார் அதன் கௌரவம் பற்றிக் கொண்டிருந்த பேருணர்வே அவர்பால் குரூரச்சார்பான பெருந்தீரம் விளைந்ததற்கு உடனடிக் காரணமாம். அது நன்கு புலப்படுமாறு, “பரமர் செய்யசடை முடியி லேறும் மலர் மோந்த மூக்கைத் தடிவனென்று கருவியினா லரிந்தார்” எனச் சேக்கிழார் அருளியிருப்பதும் அவ்விஷயத்தில் அத்தனைத் துடிப்பாக அத்தனைக் குரூரச் செயலில் அவர் இறங்கியதற்கான பரம்பரைக் காரணம். சிவத்திரவிய மகிமை பேணுதலில் பூர்வப் பயிற்சி வழியாக வந்து அவரிடத்தில் தழும்பேறியிருந்த தொண்டுறுதி என்பது புலப்பட அவரை “வழித்தொண்டர்” எனக் குறிப்பிட்டிருப்பதும் அத்தகைய தீரமானது தொண்டர்களுள் அவரவர்க்குரிய தனித்துவப் பண்புகளுக்கெல்லாந் தலைமையானது எனல் புலப்படத் “தலைமைத் தனித்தொண்டர்” என மேலும் விதந்திருப்பதுங் கொண்டு இந்த நாயனாரின் பெருமகிமை அறியத்தகும்.