Home » ஐயப்பனின் அவதார மகிமை

ஐயப்பனின் அவதார மகிமை

by damith
November 20, 2023 6:00 am 0 comment

முன்பு ஒரு காலத்தில் மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி பூலோகத்தையும், தேவலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள். அது மட்டுமில்லாமல் தனது அண்ணன் மகிஷாசுரனின் மரணத்திற்கு காரணமானவர்கள் தேவர்கள் என்று கருதி அவர்களை பழிதீர்க்க காத்திருந்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மனை நோக்கி தவமிருந்தாள். இதைப் பார்த்த பிரம்மன் மகிஷி முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். பிரம்மனும் அந்த வரத்தை அளித்தார். வரம் கிடைத்தவுடன் மகிஷி பூலோகத்தில் உள்ள மனிதர்களையும், தேவலோகத்தில் உள்ள தேவர்களையும் கொடுமைப் படுத்தினாள்.

தேவர்கள் அவளின் கொடுமை தாங்காமல் பரமசிவனிடம் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார்.

பம்பா தீரத்தில் அடர்ந்த காட்டுக்கு நடுவே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு அன்றைய பாண்டிய மன்னனும் பந்தளத்து அரசனுமான ராஜசேகரன் சென்று பார்த்தார். அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தனது மனைவியான ராணியிடம் கொடுத்து மகிழ்ந்தார்.

அவரின் கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். ஐயப்ப சுவாமி வந்த நேரம் ராணியும் கருவுற்றாள்.

சிறிது காலத்தில் ராணிக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் சகல லட்சணங்களையும் பெற்றிருந்தான். அன்பு மகனுக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். மணிகண்டன் வந்த நேரமே தனக்கு எல்லா நல்லவையும் நடக்கிறது என்று எண்ணிய ராஜசேகரன் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்தார்.

மந்திரியின் சூழ்ச்சி

மணிகண்டன் ராஜா ஆவதை சற்றும் விரும்பாத மந்திரி மணிகண்டனை அழிக்க எண்ணுகிறான். பல திட்டங்களைத் தீட்டும் அவனது கனவு பலிக்கவில்லை. அரண்மனை வைத்தியரை வைத்து ராணிக்கு உடல்நிலை சரியில்லை புலிப்பால் கொண்டு வந்தால்தான் உடல்நிலை சரியாகும் எனக்கூறி மணிகண்டனை காட்டுக்குள் அனுப்பி வைக்கின்றனர்.

இது சூழ்ச்சி என்று தெரிந்தும் மணிகண்டன் காட்டுக்குள் சென்று புலி பாலை எடுத்து வர புறப்பட்டார்.

ஐயப்பனின் வரவுக்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால் படும் துயரத்தைக் கூறி முறையிட்டனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயப்பன் அவள் மேலேறி நர்த்தனம் ஆடி மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயப்பனை அடைய வேண்டும் எனும் ஆவலைத் தெரிவிக்கிறாள்.

ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கி வர ஐயன் அருள் செய்தார்.

மகிஷியின் கொடுமையில் இருந்து தப்பித்த தேவர்கள் அனைவரும் புலியாக உருவெடுத்து ஐயப்பனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர்.

புலிக்கூட்டம் வருவதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியையும், பெருமையும் உணர்ந்த மந்திரி மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர். இதில் உன்னை மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் இறைவனின் லீலை. நான் இந்த பூமிக்கு வந்த வேலை முடிந்து விட்டது நான் தேவலோகம் செல்கிறேன், என மணிகண்டன் கிளம்ப தயாரானார்.மன்னன், பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம் அதை எங்கு கட்டுவது என்று கேட்டனர். ஐயப்பன் ஒரு அம்பை எடுத்து எய்தார்.

இந்த அம்பு எங்கு சென்று விழுகிறதோ அங்கு எனக்கு கோயில் கட்டுங்கள். அத்துடன் 18 படி உடன் கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறினார்.

பின்பு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x