அம்பாறை மாவட்டத்தின், ஒலுவில் பிரதேசத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோட்டார் பைசிக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த இரு இளைஞர்களும் மருதமுனையில் இருந்து ஒலுவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இ.போ.ச பஸ் வண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நாளுக்குநாள் வீதிப்போக்குவரத்து வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. இவ்விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் சட்டம் ஒழுங்கை கடுமையாக அமுல்படுத்தியுள்ளனர். இருந்தும் கூட வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் குறைந்ததாக இல்லை. நாளொன்றுக்கு 7- தொடக்கம் 8 பேர் இவ்விபத்துக்களால் உயிரிழப்பதாகக் குறிப்பிட்டுள்ள பொலிஸ் திணைக்களத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர், வருடமொன்றுக்கு 3000 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த வகையில் இந்நாட்டில் இடம்பெறுகின்ற வீதி விபத்துக்களில் மூன்றில் ஒரு பகுதி விபத்துக்கள் மோட்டார் பைசிக்கிள் விபத்துக்களாக விளங்குகின்றன. அவ்விபத்துக்கள் மூலமான உயிரிழப்புக்களும் அதிகம் என்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் நாட்டில் 83 இலட்சம் வாகனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 41 இலட்சம் வாகனங்கள் மோட்டார் பைசிக்கிள்களாகும். நாட்டில் காணப்படும் மோட்டார் வாகனங்களில் அரைப்பகுதி மோட்டார் பைசிக்கிள்களாகக் காணப்படுவதை இத்தரவுகள் வெளிபடுத்தி நிற்கின்றன.
மோட்டார் பைசிக்கிள் உட்பட வாகனங்களின் வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை சீரமைக்கவென வீதிப் போக்குவரத்து சட்ட ஒழுங்குவிதிகள் நடைமுறைகள் உள்ளன. வீதிப் போக்குவரத்து வாகன விபத்துக்களைக் குறைத்து கட்டுப்படுத்துவதே இச்சட்ட ஒழுங்குகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. அதனால்தான் இச்சட்ட ஒழுங்குவிதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகின்றன. அந்த ஒழுங்குவிதிகளை உரிய ஒழுங்கில் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வாகன ஓட்டுனருக்கும் உள்ளது.
இருந்த போதிலும் இச்சட்ட ஒழுங்கு விதிகளை மதியாதும் மீறியும் செயற்படுவதன் விளைவாகவே பெரும்பாலான விபத்துகள் இடம்பெறுகின்றன. இவ்விதிகளை பேணிச் செயற்படும் போது பெரும்பாலான வீதி விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதுவே சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினரின் கருத்தாக இருக்கின்றது.
இவ்வாறான நிலையில் மோட்டார் பைசிக்கிளில் தலைக்கவசம் அணியாது வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறி அதனை செலுத்திய குற்றத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் 218,928 பேருக்கும், 2022 ஆம் ஆண்டில் 206,730 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் மோட்டார் பைசிக்கிளை செலுத்தும் போது பெருந்தொகையானோர் தலைக்கவசம் அணியாது அதனை செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் மோட்டார் பைசிக்கிளை செலுத்தும் போதும் பயணிக்கும் போதும் தலைக்கவசம் அணிவதானது தலைப்பகுதிக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கானது. ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமான உடல் உள்ளுறுப்புக்கள் தலைப்பகுதியில் காணப்படுகின்றன. அந்த உறுப்புக்களின் பாதுகாப்பு இன்றியமையாதாகும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மோட்டார் பைசிக்கிளை வேகமாக செலுத்துவதையும், வீதி போக்குவரத்து சட்டங்களை மதியாது செயற்படுவதையும் பெரும்பாலான இளைஞர்கள் நவீன நாகரிகமாகக் கருதுகின்றனர். பல இளைஞர்கள் மோட்டார் பைசிக்கிளின் சைலன்சர்களது வெளிப்பகுதி மூடிகளை அகற்றிவிட்டு ஒலியெழுப்பியபடி மோட்டார் பைசிக்கிளை வேகமாக செலுத்துகின்றனர்.
இதன் விளைவாக பிரதேசமெங்கும் கடும் ஒலியெழுப்பப்படுகின்றது. அதனால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களுக்கும் உள்ளாகின்றனர். அவை கைகலப்புகளுக்கு இட்டுச்சென்ற சந்தர்ப்பங்களும் உள்ளன.
அதன் காரணத்தினால் மோட்டார் பைசிக்கிளை செலுத்தும் பெரும்பாலான இளைஞர்களின் இவ்வாறான செயற்பாடுகளை பெற்றோர் அறியாதவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. தம் பிள்ளைகள் மோட்டார் பைசிக்கிள்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து ஒவ்வொரு பெற்றொரும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் வீதிப் போக்குவரத்து சட்டங்களுக்கு அமைவாக மோட்டார் பைசிக்கிளை செலுத்துவதற்கு வழிகாட்ட வேண்டும். ‘இளங்கன்று பயம் அறியாது’ என்பதை மறந்து விடலாகாது.
அவ்வாறான ஒழுங்குபடுத்துதலின் ஊடாக மோட்டார் பைசிக்கிள்கள் மூலமான வீதி விபத்துக்களைப் பெரிதும் குறைத்துக்கொள்ளலாம்.