Sunday, July 21, 2024
Home » காசாவை அடுத்து மேற்குக் கரையிலும் பல மருத்துவமனைகள் சுற்றிவளைப்பு

காசாவை அடுத்து மேற்குக் கரையிலும் பல மருத்துவமனைகள் சுற்றிவளைப்பு

- தெற்கு காசா மக்களுக்கும் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

by Rizwan Segu Mohideen
November 18, 2023 11:26 am 0 comment

காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான் தாக்குதல்களை நடத்தி வருவதோடு அந்தப் பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேலிய துருப்புகள் ஒவ்வொரு கட்டடமாக தீவிர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த மருத்துவ வளாகத்தில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் காசாவில் நேற்று மீண்டும் ஒருமுறை தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் அல் ஷிபா மருத்துவமனையை முடக்கியுள்ள சூழலில் அங்கு போதிய நீர் மற்றும் உணவு இல்லாமல் 7,000க்கும் அதிகமான மக்கள், நோயாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிராபத்திற்கு முகம்கொடுத்திருப்பதாக காசா மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காசா ஊடக அலுவலகம் டெலிகிராமில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அல் ஷிபா மருத்துவமனையில் உணவு, நீர் மற்றும் சிசுக்களுக்கான பால் இல்லாது மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

“மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பல குழந்தைகளை இழக்க நேரிடலாம், அவர்களுக்கு அடைகாப்புக் கருவியும் இல்லாமல் போகும்” என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அந்த மருத்துவமனைக்கு ஊடுருவிய இஸ்ரேலிய துருப்புகள் அங்கு சோதனைச்சாவடிகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு காசாவில் தரைவழி நடவடிக்கையை முன்னெடுத்து வரும் இஸ்ரேலின் துருப்புகளில் பிரதான இலக்காக இந்த மருத்துவமனை மாறியுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஹமாஸ் கட்டளைத்தளம் இயங்கி வந்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டும் நிலையில் ஹமாஸ் அமைப்பு அதனை மறுத்துள்ளது.

மருத்துவமனையிலிருந்து ஹமாஸ் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிகள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தாலும், அவை ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் என்று ஹமாஸ் அமைப்பு கூறுகிறது.

மருத்துவமனைகளில் கொடூரத் தாக்குதல் நடத்தும் தங்களது போர்க் குற்றத்தை நியாயப்படுத்துவதற்காக அல்–ஷிபா மருத்துமனையிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதாக இஸ்ரேல் கூறி வருவதாக ஹமாஸ் அமைப்பு கூறியது. 

போலியான ஆதாரங்களை நிறுவி வருவதால்தான் மருத்துவமனைக்குள் இருப்பதாகக் கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்த தகவலை வெளியிட இஸ்ரேல் இராணுவம் பல மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் சிலர் சந்தேகம் எழுப்பினர்.

இந்த நிலையில், அல்–ஷிபா மருத்துவமனைக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள சுரங்கக் கட்டமைப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கண்டறிய பல வாரங்கள் ஆகும் என்று இஸ்ரேல் இராணுவம் தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை பலஸ்தீன போராளிகளால் கடத்தப்பட்ட தமது படையைச் சேர்ந்த வீராங்கனை ஒருவரின் உடலை காசாவில் வைத்து கண்டுபிடித்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. 19 வயதான நோவா மர்சியானோவின் உடல் வடக்கு காசாவில் அல் ஷிபா மருத்துவமனைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த நாற்பது நாட்களுக்கு மேல் நீடித்துவரும் காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்களும் எந்தத் தணிவும் இன்றி நீடித்து வருகிறது. இதில் பல இடங்களையும் இலக்கு வைத்து நேற்று வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தெற்கு காசாவின் ரபா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் கணிசமானோர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள பல குடியிருப்புக் கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜபலியா அகதி முகாமின் பலூஜா பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு தொதாக்குதலில் மேலும் மூவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. காசா நகர் மீது இஸ்ரேலிய படை சரமாரி செல் குண்டு தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

இதேவேளை தெற்கு காசாவிலுள்ள 4 நகரங்களிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் வியாழக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பான பகுதியாக இஸ்ரேலால் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அந்த நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுவது, இதுவரை காசாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான சண்டை தெற்குப் பகுதிக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் துண்டுப் பிரசுரங்களை விமானம் மூலம் வியாழக்கிழமை வீசியது.

அந்தப் பிரசுரங்களில், கான் யூனிஸ் நகருக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ள பனி ஷ{ஹைலா, கூஸா, அபாஸன், அல்–கராரா ஆகிய நான்கு நகரங்களில் இருப்பவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த நகரங்களில் ஹமாஸ் அமைப்பினர் அல்லது அவர்களது நிலைகளுக்கு அருகே வசிப்பவர்கள், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக அந்த துண்டுப் பிரசுரங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, வடக்கு காஸா பகுதியிலிருந்து தெற்குப் பகுதி நகரங்களுக்குத் தப்பிச் செல்லுமாறும், அந்தப் பகுதிகள் பாதுகாப்பானவை என்றும் இஸ்ரேல் அறிவித்திருந்தது.

அதைப் போலவே வடக்குப் பகுதிகளில் கடுமையான குண்டுவீச்சு நடத்திய இஸ்ரேல் இராணுவம், தெற்கு காசாவில் குறிப்பிட்ட அளவிலேயே தாக்குதல் நடத்தி வந்தது.

தற்போது காசா நகர், அந்த நகரில் ஹமாஸின் தலைமையகம் அமைந்துள்ளதாக இஸ்ரேல் கூறிய அல்–ஷிபா மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு இஸ்ரேல் இராணுவம் முன்னேறிவிட்டது.

மேலும், வடக்கு காசாவில் அமைந்துள்ள ஹமாஸ் அமைப்பினரின் பாராளுமன்ற வளாகம், பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது.

இந்தச் சூழலில், தெற்கு காசாவில் உள்ள 4 நகரங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் தற்போது உத்தரவிட்டுள்ளதன் மூலம், போரை மேலும் விரிவுபடுத்தி காசாவின் தெற்குப் பகுதிகளையும் இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சத்தை அந்தப் பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பு காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியேறியது. அதன் பின் அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து காசாவை முற்றுகையில் வைத்திருந்த இஸ்ரேல் அங்கு பல முறை போர் தொடுத்திருந்தது.

இதேவேளை அக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பல மருத்துவமனைகளை சுற்றிவளைத்த இஸ்ரேலிய இராணுவம் பாரிய தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் நேற்று வரை இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இபின் சினா மருத்துவமனையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கை பல மணி நேரம் நீடித்ததாக அங்கிருப்பவர்கள் விபரித்துள்ளனர். ஜெனின் அகதி முகாமில் இடம்பெற்ற அளில்லா விமானத் தாக்குதல்களில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் போர் நீடிக்கும் நிலையில் மேற்குக் கரையிலும் இஸ்ரேலின் வான் தாக்குதல்களும் வழக்கமாகியுள்ளது.

ஹெப்ரோன் நகரில் இஸ்ரேலிய படையினரால் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றவர்களே சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதன்மூலம் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது.

காசாவில் உயிரிழப்பு 11,600ஐ தாண்டியிருப்பதோடு இதில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர்.

பொதுமக்களின் உயிரிழப்பை தவிர்க்கும் இஸ்ரேலின் முயற்சி வெற்றி அளிக்கவில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் அளித்த பேட்டியிலேயே நெதன்யாகு இதனைத் தெரிவித்துள்ளார்.

“எந்த ஒரு பொதுமகனின் உயிரிழப்பும் கவலைக்குரியது. நாம் ஒன்றும் செய்யவில்லை, ஏனென்றால் பொதுமக்களை தீங்கு விளைவிக்கும் வழியில் இருந்து வெளியேற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், அதே நேரத்தில் ஹமாஸ் அவர்களை தீங்கு விளைவிக்கும் வழியில் வைத்திருக்க எல்லாவற்றையும் செய்கிறது” என்று நெதன்யாகு கூறினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT